சுனாமி பேரழிவின் வலியை கடத்திய அந்த புகைப்படம்

Report Print Fathima Fathima in இந்தியா

பல ஆயிரம் உயிர்களை பலி கொண்ட சுனாமி நிகழ்ந்து 12 ஆண்டுகள் கடந்து விட்டது. இதே நாளில் 2004ம் ஆண்டு தமிழகத்தில் சென்னை உள்ளிட்ட கடலோர வடமாவட்டங்கள், கன்னியாகுமரி, நாகப்பட்டிணம், வேளாங்கண்ணி, கடலூர் உள்ளிட்ட கடலோர பகுதியில் புரட்டிபோட்டது சுனாமி.

2004ம் ஆண்டு கிறிஸ்துமஸ் பண்டிகையின் மறுநாள். கிறிஸ்துமஸ் கொண்டாட்டத்தின் தொடர்ச்சியாக இருப்பதற்கு பதில், கறுப்பு ஞாயிறாக அமைந்தது.

சுனாமியின் வலியை மக்களிடம் கடத்தியவை புகைப்படங்களும், வீடியோக்களும் தான். உறவினர் ஒருவர் சுனாமி தாக்குதலில் இறந்து கிடக்க, அந்த உடலை பார்த்த கடற்கரை தரையில் மண்டியிட்டு, முகம் மண்ணில் பதிய... கைகளை விரித்தபடி பெண் ஒருவர் கதறி அழுவதை எடுக்கப்பட்ட படம் தான், சுனாமி பேரழிவின் அடையாளமாகவே மாறிப்போனது. பிணத்தின் கை மட்டும் தெரிய அதன் அருகே பெண் அழும் காட்சி புகைப்படமாக பதியப்பட்டிருந்தது.

சுனாமியின் பேரழிவுகளை பதிவு செய்ய புகழ்பெற்ற ராய்ட்டர்ஸ் செய்தி நிறுவனத்தின் இந்திய புகைப்படப் பத்திரிகையாளரான ஆர்க்கோ தத்தா பதிவு செய்த புகைப்படம் தான் அது. இழப்புகளின் ஒட்டுமொத்த வலிகளையும் பொட்டில் அறைந்தது மாதிரி உணர்த்தும் அந்தப் புகைப்படம் 2005-ம் ஆண்டின் 'வேர்ல்டு பிரஸ் போட்டோ'விருதை வென்றது.

இந்த துயர சம்பவம் நிகழ்ந்து 12 ஆண்டுகள் கடந்து விட்டது. பேரழிவின் சாட்சியாக மாறிப்போன அந்த புகைப்படத்தில் இருக்கும் பெண்ணை இப்போது கடலூர், சோனங்குப்பம் சுனாமி குடியிருப்பில் சந்தித்து பேசினோம். அவர் பெயர் இந்திரா. நம்மை அறிமுகப்படுத்திக் கொண்டு, அந்த புகைப்படம் பற்றி பேசிய போது, இந்திராவின் கண்களில் பெருக்கெடுத்தது கண்ணீர்.

"அப்பா.. எதுவும் பேச வேண்டாம் தயவு செஞ்சு கிளம்புங்கப்பா" என்ற இந்திராவின் கண்களில் அதே வேதனையை இன்றும் காண முடிந்தது. "அந்த புகைப்படத்தை பார்த்தவர்கள் எல்லாம் இவரது வீட்டுக்கு படையெடுப்பதாகவும், வருபவர்கள் பணம் கொடுத்து விட்டு செல்வதாக ஊர் மக்களும், உறவினர்களும் தவறாக நினைத்துக்கொள்வதால ஏற்கனவே பிரச்னையாக இருக்கிறது. அதனால் தான் அவர் யாரிடமும் பேசுவதை தவிர்க்கிறார்," என நம்மிடம் தெரிவித்தனர் அப்பகுதியைச் சேர்ந்தவர்கள்,

நம் தொடர் முயற்சிக்கு பின்னர் பேசத்துவங்கினார். சுனாமி பேரலை தாக்குதல் குறித்து பேசும் போதே அவர் கண்களில் அச்சம் நிழலாடியதை காண முடிந்தது. “அது ஞாயிற்றுக்கிழமை.

அன்னைக்கு அப்படி விடியும்ம்னு நாங்கள் யாருமே நினைச்சு கூட பாத்ததில்லை. கடலுக்கும் ஆத்துக்கும் இடையில தான் எங்கள் கிராமங்கள் இருக்குது. அப்போ கடைக்கு போகணும்னாலும் பசங்க ஸ்கூலுக்கு போகணும்னாலும் கடலூருக்கு ஆத்தைக் கடந்து படகுல தான் போக முடியும்.

அன்னைக்கு காலைல 8 மணி இருக்கும். என்னோட மூணு பிள்ளைகளையும் வீட்டுல விட்டுட்டு பால் வாங்க கடைக்கு போனேன். திடீர்னு கீழ் வானம் தென்னை மரம் உயரத்திற்கு கறுப்பாக மாறியது. என்ன ஏதுனு யோசிக்க கூட முடியலை.

பார்த்தா கடல் தண்ணீ தான் அந்த உயரத்துக்கு அலையா வந்தது தெரியவந்துச்சு. ரொம்பவே பயந்துட்டேன். உடனே வீட்டை நோக்கி ஓட ஆரம்பிச்சேன்.

வீட்டுல பிள்ளைங்க இருக்காங்கங்கறது தான் மனசு முழுக்க நியாபகமா இருந்துச்சு. வீட்டுக்கு போய் பாத்தா, வீட்டுல இடுப்பளவுக்கு தண்ணீ இருந்துச்சு. எல்லா பொருளும் மூழ்கீடுச்சு. பிள்ளைகளையும் காணலை.

எனக்கு கண் இருட்டிக்கிட்டு வந்துச்சு. கதறி கதறி அழுதேன். அப்போ தான் என் ரெண்டு பொண்ணுகளையும் ஊர்மக்கள் மிதகு படகுல காப்பாத்தி சத்திரத்தில் தங்க வைச்சிருக்கிறதா சொன்னாங்க.

ஆனா என் 7 வயசு பையனை காணோம். எல்லோரும் பையன் இறந்திருப்பான்னு சொன்னாங்க. எனக்கு மயக்கமே வந்துடுச்சு. அழுதுகிட்டே அவனை தேடி திரும்பவும் கடலை நோக்கி போனேன். கடல் தண்ணீ ஊருக்குள்ள புகுந்து எதிர் திசையில் தள்ளுச்சு. அதை மீறி பையனை தேடிப்போன என்னை எல்லோரும் பிடிச்சுட்டாங்க. கொஞ்ச நேரத்துல படகுல என் பையனை பாத்தேன். அப்போ தான் எனக்கு நிம்மதியே வந்துச்சு.

ஆனா என் அண்ணி மகேஸ்வரியை காணலை. நம்பிக்கையோட தேடினோம். மூணாவது நாள் கடலோரத்துக்கு போய் தேடினோம்," என்றவர் உணர்ச்சி வசப்பட்டு அழத்துவங்கினார். சற்று சமாதானமாகி கடற்கரை முழுக்க படகும், பிணங்களுமா இருந்துச்சு.

ஒரு படகுக்கு கீழ தான் என் அண்ணி உடல் இருந்துச்சு. அந்த சம்பவத்தை பார்த்த போது என்னையும் அறியாம கடற்கரையில மணல்ல முகம் புதைச்சி கதறி அழுதேன். இதைத்தான் போட்டோவா எடுத்திருக்காங்க. இந்த போட்டோ எங்க கஷ்டங்களை எல்லாம் சொல்லுதுனு சொல்றாங்க. அவ்வளவு சுலபமா சொல்லிட முடியாது எங்க கஷ்டங்களை.."12 வருடம் ஓடிப்போச்சு. இப்போ நாங்க அந்த பாதிப்புல இருந்து மீண்டு வரலை," என்றார் கண்ணீர் மல்க.

எல்லோர் மனதிலும் அழியாத வடுவாக நீடிக்கிறது சுனாமி பேரலை தாக்குதல், இன்னும் பலரின் மனதில் ஆறாத காயமாகவே இருக்கிறது. அவர்களில் ஒருவர் இந்திரா.

- Vikatan

மேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Comments