ஜெயலலிதாவின் மரணம் குறித்த மர்மங்கள் ஒவ்வொரு நாளும் புதுப்புது வடிவில் வெளிப்படுகின்றன.
என்ன செஞ்சி புதைச்சீங்க எனக் கொந்தளிக்கிறார்கள் அ.தி.மு.க தொண்டர்கள். நீதிமன்றங்களின் கவனத்திற்கும் இந்த சந்தேகங்கள் கொண்டு செல்லப் படுகின்றன.
இந்த நிலையில், ஜெ.வின் கால்கள் துண்டிக்கப்பட்டதாக வெளிப்படும் செய்திகள் பெரும் கொந்தளிப்பை உண்டாக்கியுள்ளது.
இது தொடர்பான விவாதங்கள் டாக்டர்கள் மற்றும் அரசு அதிகாரிகள் தரப்பில் எதிரொலிக்கின்றது.
ஒரு மாநிலத்தின் முதல்வர் மருத்துவமனையில் அட்மிட் ஆன நிலையில் அவருக்கு அறுவை சிகிச்சை செய்ய வேண்டியிருந்தாலோ அல்லது உறுப்புகளை அகற்ற வேண்டிய சிகிச்சைகள் தந்தாக வேண்டிய சூழல் எழுந்தாலோ அப்போது அதற்காக அரசின் அனுமதியை பெற வேண்டுமா? சிகிச்சை முறைகளை மக்களுக்குத் தெரியப்படுத்த வேண்டுமா?
இது தொடர்பான கேள்விகளை ஓய்வு பெற்ற மூத்த ஐ.ஏ.எஸ். அதிகாரி தேவசகாயத்திடம் கேட்டபோது அவர் தெரிவித்ததாவது,
முதல்வர் என்பவர் ஒரு மாநிலத்தின் சொத்து. உடல் நலக்குறைவால் அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட பிறகு, அவரது உடலுக்கு என்ன? அதற்கு என்ன மாதிரி சிகிச்சைகள் கொடுக்கப்படுகின்றன? சிகிச்சைகள் பலனளிக்கிறதா? பலனளிக்க வில்லையா? என்பது போன்ற தகவல்களை மருத்துவமனை நிர்வாகம் தினமும் புல்லட்டின் வெளியிட வேண்டும்.
அரசுக்கும் மருத்துவமனை நிர்வாகம் தினமும் அறிக்கை கொடுக்க வேண்டும். அரசு தரப்பில் சுகாதாரத்துறைச் செயலாளர் தலைமையில் டாக்டர்கள் குழு அமைக்கப்பட்டு, முதல்வருக்கான சிகிச்சைகளை கண்காணித்து தினமும் அறிக்கை தயாரிக்க வேண்டும்.
அந்த அறிக்கையினை ஆய்வு செய்ய மூத்த அமைச்சர்கள் அடங்கிய ஒரு கமிட்டியை உருவாக்கி விவாதிக்க வேண்டும். அதன்பிறகு, அந்த தகவல்களை மக்களுக்கு தெரிவிக்க தார்மீக கடமை அரசுக்கு இருக்கிறது.
உயிருக்கு ஆபத்தான அறுவைச் சிகிச்சை செய்தாக வேண்டிய கட்டாயம் வந்தால், இரத்த உறவுகளிடம் அனுமதி பெற்றாக வேண்டும் என்பது சட்டம்.
அறுவை சிகிச்சைக்கே அப்படி என்றால், உறுப்புகளை அகற்ற வேண்டுமெனில் அதற்கும் அனுமதி பெறப்பட வேண்டும். இது போன்ற சிகிச்சைக்கு உட்படுத்தப்படுபவர் முதலமைச்சராக இருப்பின் அரசுக்குத் தெரிவிக்க வேண்டியதும் மருத்துவமனையின் கடமை.
ஆனால், அரசின் அனுமதி தேவையில்லை. சிகிச்சை முறைகளை மருத்துவமனையும் அரசாங்கமும் மக்களுக்குத் தெளிவாகத் தெரிவிக்க வேண்டும்.
ஆனால், ஜெயலலிதா விடயத்தில் ஏன் இவ்வளவு மர்மங்கள் எனவும் புரியவில்லை என்கிறார் தேவசகாயம்.
இந்தநிலையில், அ.தி.மு.க தொண்டர்கள், ஜெயலலிதாம்மாவை என்ன செஞ்சு புதைச்சாங்கன்னு தெரியலையே' என்றபடி தற்போது கட்சியையும் கார்டனையும் நிர் வகிப்பவர்கள் மீது கோபக்குரலை வெளிப் படுத்தினர்.
சவப்பெட்டியின் நீளம் 6 அடி. ஜெயலலிதாவின் உயரம் அவரது பயோடேட்டாவின் படி 5.5 அடி. ஜெ. உடலின் கால் பகுதி (முழங்காலுக்குக் கீழே) இருக்கும் இடம் காலியாக உள்ளது.
அப்படியானால் அவரின் கால் பகுதி எப்போது, எங்கு அகற்றப்பட்டது. அதனால்தான் ஜெ.வை யாரும் பார்க்க முடியாதபடி இரும்புத்திரை போடப்பட்டதா?
75 நாட்கள் நடந்த சிகிச்சை விவரங்கள் மறைக்கப்படும் நிலையில், ஜெ.வின் கால்கள் அகற்றப்பட்டனவா எனப் புரியாமல் கதறுகிறார்கள் அ.தி.மு.க. தொண்டர்கள்.
ஒருநாள் கூட முழுமையாக அஞ்சலி செலுத்த வழியில்லாமல், அவசரமாகப் புதைத்ததில் மர்மம் உள்ளது என சந்தேகப்படுகிறார்கள்.
இத்தனை சந்தேகங்களுக்கும் ஜெ.வுடன் 75 நாட்கள் இருந்த சசிகலாவும், ஜெ.வுக்கு சிகிச்சையளித்த அப்பல்லோ பிரதாப் ரெட்டியும் பதில் சொல்லியே ஆக வேண்டும்.
ஜெ. உடலை சேதாரமின்றி மண்ணிலிருந்து எடுத்து பரிசோதித்தால் கால்கள் முதல் தலை வரை பல உண்மைகள் வெளிவரும் என்கிறார்கள் வேதனையுடன்.
- Nakkheeran