வீட்டுக்குள் வரும் பிணப் புழுக்கள்! துர்நாற்றத்திற்கு நடுவே வாழும் அவலம்- கண்டுகொள்ளுமா ஓபிஎஸ் அரசு?

Report Print Fathima Fathima in இந்தியா

சுடுகாடு, இடுகாடு, மயானம் என்றதுமே நம் மனதில் ஒரு பயம் தொற்றிக் கொள்ளும்.

இரவு நேரங்களில் ஏன் காலை வேளையில் கூட அந்த பக்கம் செல்வதற்கு சற்று யோசிப்போம்.

கிராமங்களில் எல்லாம் ஊருக்கு ஒதுக்குபுறமாக அதாவது ஊருக்கு வெளியே தான் சுடுகாடு இருக்கும்.

இதற்கு ஆன்மீக ரீதியாக காரணங்கள் சொல்லப்பட்டாலும் அறிவியல் ரீதியான காரணங்களும் பல உண்டு.

காற்று, நீர் மாசுபாடு, கிருமித் தொற்று என அடுக்கிக் கொண்டே போகலாம்.

இதனால் தான் நம் முன்னோர்கள் ஊருக்கு வெளியே இடத்தை தெரிவு செய்தனர்.

ஆனால் இன்றோ நகர்புறங்களில் மக்கள் குடியிருப்புகளுக்கு அருகே சுடுகாடுகள் இருப்பதை பார்த்திருப்போம்.

இதிலும் கொடுமை என்னவென்றால் அரசு பதிவேடுகளில் இருப்பது ஒன்று, ஆனால் நிஜ வாழ்க்கையில் நடப்பது வேறு.

உதாரணத்திற்கு சென்னை மாநகராட்சியின் பொன்னியம்மன் மேடு சுடுகாடு- இடுகாடு மக்கள் குடியிருப்புக்கு நடுவே அமைந்துள்ளது.

ஆனால் அந்த இடம் போக்குவரத்து சாலை என அரசு பதிவேடுகளில் பதிவாக உள்ளது.

இங்கு தினமும் மனித பிணங்களை எரிப்பதை குழந்தைகள் முதல் பெரியவர்கள் பார்த்து செல்கின்றனர்.

இறந்தவர்களின் உறவினர்கள் கதறி அழும் மரண ஓலம், தாரை, தப்பட்டை சத்தத்தால் மாணவ, மாணவிகளின் கல்வி பாழாகிறது.

அதுமட்டுமா இறந்தவர்களின் உடலில் இருந்து வெளியேறும் பூச்சி, புழுக்களால் சுகாதார கேடும் ஏற்படுகிறது.

துர்நாற்றம் வீசுவதுடன், நிலத்தடி நீரும் மாசடைகிறது. இதுகுறித்து வித்யா நகர், விபிசி நகர், கணேஷ் நகர், நாகவள்ளி அவென்யூ, கற்பகம் நகர், வள்ளியம்மை நகர், அன்னபூரணி நகர், சஞ்சய் நகர், பாலகிருஷ்ணன் நகர் மற்றும் பிரகாஷ் நகரில் குடியிருக்கும் மக்கள் முறையாக கோரிக்கை விடுத்தும் இதுவரையில் அதிகாரிகள் எந்தவித நடவடிக்கையும் எடுத்ததாக தெரியவில்லை.

அறிவியல், விஞ்ஞான ரீதியாக நாடு வளர்ச்சி அடைந்தாலும் சுகாதாரமான சூழலை, வாழ்க்கை முறையை மக்களுக்கு உருவாக்கி தருவதே ஒவ்வொரு அரசின் கடமையாகும்.

இதையெல்லாம் சீர்செய்து மக்கள் வாழ்வதற்கு ஏற்ற சூழலை உருவாக்குமா ஓபிஎஸ் அரசு!!! பொறுத்திருந்து பார்ப்போம்!!!

மேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Comments