தமிழகத்தில் ஜல்லிக்கட்டு நடத்த முடியாது: கைவிரித்த மத்திய அரசு

Report Print Santhan in இந்தியா

தமிழகத்தில் ஜல்லிக்கட்டு நடத்துவதாக கொடுத்த வாக்குறுதியை நிறைவேற்ற முடியாமல் போனது மிகுந்த தலை குனிவை ஏற்படுத்தியுள்ளதாக மத்திய அமைச்சர் பொன்.இராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.

தமிழர்களின் பாரம்பரிய விளையாட்டான ஜல்லிக்கட்டு நடத்தப்பட வேண்டும் என்று தமிழகத்தில் உள்ள இளைஞர்கள், அரசியல் கட்சித்தலைவர்கள் மற்றும் முக்கிய பிரபலங்கள் அனைவரும் போராட்டம் நடத்தி வருகின்றனர்.

இதைத் தொடர்ந்து நேற்று நள்ளிரவு ஜல்லிக்கட்டு விவகாரம் தொடர்பாக மத்திய அரசு நல்ல ஒரு முடிவை அறிவிக்கும் என்று தகவல்கள் வெளியாகியதால், தமிழர்கள் அனைவரும் மிகுந்த மகிழ்ச்சியில் இருந்தனர்.

இந்நிலையில் மத்திய அமைச்சர் பொன்.இராதாகிருஷ்ணன் இதுகுறித்து கூறுகையில், தமிழர்களின் வாழ்வில் ஒரு அங்கமாகவும், கலாச்சாரத்தின் முக்கிய பங்காகவும், தமிழர்களின் வீரத்தை வெளிக் காட்டுவதாகவும் அமைந்துள்ள பல்லாயிரக்கணக்கான ஆண்டு பழமை வாய்ந்த ஜல்லிக்கட்டு விளையாட்டை நடத்த உச்சநீதிமன்றம் தடை செய்திருக்கிறது.

இந்த தடைக்கு மாற்றாக கடந்த 2016 ஆம் ஆண்டு ஜனவரி 8 ஆம் திகதி மத்திய அரசு காளையை காட்சிப்பொருள் பட்டியலில் இருந்து நீக்கியது.

ஜல்லிக்கட்டு தடைக்கு முக்கிய காரணமே காங்கிரஸ் கூட்டணி அரசாங்கம் செய்த மாபெரும் வரலாற்று பிழையின் தாக்கம் தான் என்று கூறியுள்ளார்.

இதில் ஜல்லிக்கட்டை எப்படியாவது நடத்தியே தீர வேண்டும் என்று முயற்சி மேற்கொண்டு வந்தேன், ஆனால் மத்திய அரசு ஜல்லிக்கட்டை நடத்த உரிய திருத்தங்களையும், ஆணைகளையும் பிறப்பிக்க தயாராக உள்ளது என்பது அரசின் அணுகுமுறையை நன்கு உணர்ந்த அனைவரும் அறிந்திருக்கிறார்கள்.

ஆனால், அப்படி ஒரு திருத்தும் கொண்டு வரப்பெற்று அவையும் நீதிமன்ற தடைக்கு ஆளானால் ஆயிரக்கணக்கான ஆண்டுகள் தமிழர்கள் விளையாடிவந்த ஜல்லிக்கட்டு விளையாட்டிற்கான முடிவு காலம் ஒட்டுமொத்தமாக வந்துவிடும் என்ற அச்சம் விவரம் அறிந்த அத்தனை பேருக்கும் தெரிந்துள்ளது.

இந்த நிலையை உச்சநீதிமன்றத்தில் நடந்துவந்த வழக்கு தமிழர் தரப்பு நியாயங்களை பல்வேறு கோணங்களில் எடுத்து வைத்து தமிழர்களின் வீர விளையாட்டை விளையாட, உச்சநீதிமன்றம் அனுமதி வழங்கிட வேண்டி மத்திய அரசு வழக்கறிஞர் மிக தெளிவாக ஆழமான கருத்துக்களை எடுத்து வைத்தார்.

வழக்கு இதற்கு முன்பாக நடந்த வழிமுறைகளை நான் தெரிந்திருந்தாலும், தற்போது வழக்கை கடைசி நிலையில் சிறப்பாக நடந்த விதத்தை தெரிந்திருந்தாலும், சர்வ நிச்சயமாக பொங்கல் பண்டிகைக்குள் உச்சநீதிமன்ற தீர்ப்பு வந்துவிடுமென நம்பி தமிழக மக்களிடம் என் ஆழ்ந்த நம்பிக்கையின் அடிப்படையில் ஜல்லிக்கட்டுடன் இப்பொங்கல் நன்னாளாக கொண்டாட முடியும் என்று 13.01.2017 மாலை வரை அசைக்க முடியாத நம்பிக்கையுடன் இருந்தேன்.

ஆனால், அன்று இரவு வரை நீதிமன்றத்தால் தீர்ப்பு வழங்கப்படவில்லை. ஆகையால் உரிமையோடு ஜல்லிக்கட்டு நடத்தும் நிலை தமிழர்களுக்கு கிடைக்கவில்லை.

இது என்னுடைய மனதை மிகவும் வேதனைக்கு ஆளாக்கி உள்ளது என்றும் ஜல்லிக்கட்டு நடத்துவதற்கான அனைத்து முயற்சிகளையும் தான் உறுதியாக எடுப்பேன் எனவும் கூறியுள்ளார்.

மேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Comments