தமிழகம் முழுவதும் ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாக இளைஞர்கள், மாணவர்கள் ஆவேசமாக போராட்டம் நடத்தி வரும் நிலையில், முதல்வர் பன்னீர்செல்வம் ஆயிரத்தில் ஒருவன் படம் பார்த்து வருவது போராட்டக்காரர்கள் மத்தியில் கடும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது.
புரட்சித் தலைவர் எம்ஜிஆரின் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு ஆயிரத்தில் ஒருவன் படத்தின் டிஜிட்டல் மறுபதிப்பு குறிப்பிட்ட சில அரங்குகளில் இன்று சிறப்புத் காட்சி திரையிடப்பட்டன.
தமிழ் திரையுலகினர் சார்பில் எம்.ஜி.ஆர். நூற்றாண்டு விழாவை கொண்டாட முடிவு எடுக்கப்பட்டது. இதையொட்டி, சென்னை அபிராமி தியேட்டரில் ஆயிரத்தில் ஒருவன் படம் சிறப்பு காட்சி இன்று திரையிடப்பட்டது.
இந்தநிலையில் ஆயிரத்தில் ஒருவன் திரைப்படத்தின் சிறப்பு காட்சியை அபிராமி தியேட்டரில் முதலமைச்சர் பன்னீர்செல்வம் கண்டு களித்துள்ளார்.
இதை சமூகவலைதளத்தில் பொதுமக்கள் கடுமையாக விமர்சித்துள்ளனர். ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாக கோயம்புத்தூரில் மாற்றுத்திறனாளி ஒருவர் போராடி வரும் நிலையில், நம்முடைய முதல்வர் இந்தப் பிரச்சினை பற்றி எல்லாம் கவலைப் படாமல் ஆயிரத்தில் ஒருவன் படம் பார்த்து வருவது போன்று உள்ளது என கண்டனம் தெரிவித்துள்ளனர்.