டி.என்.ஏ பரிசோதனைக்கு நடிகர் தனுஷ் எதிர்ப்பு: அம்பலமாகும் உண்மைகள்

Report Print Arbin Arbin in இந்தியா

நடிகர் தனுஷை தங்கள் மகன் என்று உரிமை கோரும் மேலூர் தம்பதியின் டிஎன்ஏ பரிசோதனைக்கு தனுஷ் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளார்.

நடிகர் தனுஷ் தங்கள் மகன் என மேலூரை சேர்ந்த கதிரேசன்-மீனாட்சி தம்பதியினர் மேலூர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளனர்.

இந்த வழக்கு தொடர்பாக பலகட்ட விசாரணை முடிவடைந்த நிலையில் அங்க அடையாளங்கள் மாற்றியமைப்பு, கல்விச் சான்றிதழ்களில் முறைகேடு என தனுஷ் மீது மேலூர் தம்பதி வழக்கறிஞர் பல்வேறு குற்றச்சாட்டுகளை முன்வைத்துள்ளார்.

இந்நிலையில் மேலூர் நீதிமன்றத்தில் வழக்கு நிலுவையில் உள்ள நிலையில், நடிகர் தனுஷ் தரப்பில் மதுரை உயர் நீதிமன்ற கிளையில் மனு ஒன்று தாக்கல் செய்யப்பட்டது.

அந்த மனுவில், கதிரேசன்-மீனாட்சி தம்பதி தாக்கல் செய்துள்ள மனு பொய்யானது. எனவே, இந்த வழக்கை ரத்து செய்ய உத்தரவிட வேண்டும் என்று கூறப்பட்டிருந்தது.

வாதத்தின்போது மேலூர் தம்பதியர் சார்பில் ஆஜரான வழக்கறிஞர், கதிரேசன், மீனாட்சி தம்பதியர் டி.என்.ஏ பரிசோதனைக்கு தயாராக உள்ளனர் என்றும் இதுகுறித்து ஏற்கெனவே தாக்கல் செய்த மனுவில் குறிப்பிடப்பட்டுள்ளதாகவும் கூறினார்.

இதற்கு எதிர்ப்பு தெரிவித்த தனுஷ் தரப்பு வழக்கறிஞர், மேலூர் தம்பதியர் தாக்கல் செய்துள்ள மனுவில் எந்தவித உண்மையும் இல்லை.

எனவே டி.என்.ஏ. பரிசோதனை செய்ய வேண்டிய அவசியம் இல்லை. அவ்வாறு பரிசோதனை செய்வது தனுஷின் தனித்தன்மையையும், சுதந்திரத்தையும் பாதிக்கும் என்றார்.

இரு தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதி தீர்ப்பை திகதி குறிப்பிடாமல் ஒத்தி வைத்துள்ளார்.

மேலும் டி.என்.ஏ. பரிசோதனை குறித்து நீதிமன்றமே முடிவு செய்யும் எனவும் இதற்கு மனு தாக்கல் செய்தவர்களின் பதிலும் பெறப்பட வேண்டும் என்றும் நீதிபதி தெரிவித்துள்ளார்.

மேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Comments