பெட்டிக்கடை வைத்திருந்தவரின் மகன் இன்று நாட்டின் ஜனாதிபதி

Report Print Deepthi Deepthi in இந்தியா

இந்தியாவின் 14 வது ஜனாதிபதியாக ராம்நாத் கோவிந்த் பதவியேற்றுள்ளார்.

1945 ஆம் ஆண்டு தெஹாத் கான்பூர் மாவட்டத்தில் தலித் குடும்பத்தில் ராம்நாத் கோவிந்த் பிறந்துள்ளார்.

இவரின் தந்தையின் பெயர் மைகுலா, 5 மகன்கள் மற்றும் 2 பெண் குழந்தைகள் கொண்ட குடும்பத்தில் ராம்நாத் கடைக்குட்டியாகப் பிறந்தார்.

குடும்பச் செலவுகளுக்காகவும், தனிப்பட்ட காரணங்களுக்காகவும் தனது பாரம்பரிய தொழிலான நெசவு தொழிலை செய்யாமல் ஒரு சிறிய பெட்டிக்கடையை வைத்திருந்தார் ராம்நாத் அவர்களின் சந்தை மைகுலா.

மண் தரையில் பிறந்த ராம்நாத் கோவிந்த், தான் 5 வயதாக இருக்கும் போது தனது வீட்டில் ஏற்பட்ட தீ விபத்தில் தனது தாயையும், வீட்டையும் இழந்தார்.

கான்பூர் கிராமத்தில் இருந்து 8 கிலோமீட்டர் தொலைவில் இருக்கும் பள்ளியில் தனது பள்ளிப்படிப்பை முடித்த ராம்நாத், டிஏவி கல்லூரியில் காமர்ஸ் மற்றும் சட்ட படிப்புகளை முடித்துப் பட்டம் பெற்றார்

ராம்நாத் கோவிந்த் கான்பூர் கல்லூரியில் பட்டப்படிப்பை முடித்து விட்டு டெல்லிக்குச் சென்று ஐஏஎஸ் நுழைவுத் தேர்வுக்குத் தயாரானார்.

ஆனால் இரண்டு முறை ஐஏஎஸ் தேர்வு எழுதியும் அவரால் வெற்றி பெற முடியவில்லை. மூன்றாவது முறை மறுபடியும் எழுதி ஒரு வழியாகத் தேர்ச்சி பெற்றார்.

ஆனால், ஒரு ஐஎஸ் அதிகாரியாக தனது பணியை தொடரவில்லை. மாறாக வழக்கறிஞர் படிப்பினை படித்து முடித்த இவர், 1977 ஆம் ஆண்டு முதல் 1979 வரை டெல்லி உயர் நீதிமன்றத்தில் மத்திய அரசின் வழக்கறிஞராக பணிபுரிந்திருக்கிறார்.

பின்னர் 1980லிருந்து 1993வரை அவர் உச்சநீதிமன்றத்தில் இந்திய அரசின் வழக்கறிஞராக இருந்தார்.

டெல்லி உயர் நீதிமன்றம் மற்றும் உச்ச நீதிமன்றத்தில் 16 ஆண்டுகள் வழக்கறிஞராக பணிபுரிந்த ராம்நாத் கோவிந்த், 1971 இல் டெல்லி பார் கவுன்சிலில் வழக்கறிஞராக தம்மைப் பதிவு செய்து கொண்டார்.

1994 ஆம் ஆண்டில் உத்தரப்பிரதேச மாநிலத்தில் இருந்து நாடாளுமன்ற மாநிலங்களவை உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்பட்ட ராம்நாத் கோவிந்த், 12 ஆண்டுகள் மாநிலங்களவை உறுப்பினராகவும் பணியாற்றியிருக்கிறார்.

பழங்குடியினர், உள்துறை, பெட்ரோலியம் மற்றும் இயற்கை எரிவாயு, சமூக நீதி, சட்டம் - நீதி அமைப்பு மற்றும் மாநிலங்களவை குழு என பல கமிட்டிகளில் உறுப்பினராக ராம்நாத் கோவிந்த் பணியாற்றியிருக்கிறார்.

கடந்த 1977ல் ஜனதா கட்சியின் ஆட்சியின் போது முன்னாள் பிரதமர் மொரார்ஜி தேசாயின் உதவியாளராக கோவிந்த் பணியாற்றினார். இதுவே கோவிந்தின் அரசியல் வாழ்க்கைக்கு அடித்தளமிட்டது.

கடந்த 1990 மக்களவைத் தேர்தலில் பாஜக வேட்பாளராக களமிறங்கிய ராம்நாத் கோவிந்த், அந்த தேர்தலில் தோல்வியைத் தழுவினார்.

அதேநேரம், உத்தரப்பிரதேச மாநிலத்தில் இருந்து இரு முறை மாநிலங்களவை எம்பியாகவும் கோவிந்த் தேர்ந்தெடுக்கப்பட்டிருந்தார். பாஜகவின் தலித் பிரிவான தலித் மோர்ச்சாவின் தலைவராக 1998ம் ஆண்டிலிருந்து 2002ம் ஆண்டு வரை ராம்நாத் கோவிந்த் பதவி வகித்துள்ளார். பாரதிய ஜனதா கட்சியின் செய்தித் தொடர்பாளர் பொறுப்பையும் ராம்நாத் கோவிந்த் வகித்துள்ளார்.

தலித் சமூகத்தின் பிரதிநிதியாக பார்க்கப்படும் கோவிந்த், மாணவ பருவத்தில் எஸ்சி, எஸ்டி மற்றும் பெண்களுடன் இணைந்து சிறப்பாக பணியாற்றியிருக்கிறார்.

மேலும், பாஜனவின் மூத்த தலைவர்களின் நன்மதிப்பை பெற்றுள்ள இவர் அந்த கட்சியால் ஜனாதிபதி வேட்பாளராக அறிவிக்கப்பட்டு அதில் வெற்றியும் பெற்று, இந்தியாவின் 14 வது ஜனாதிபதி ஆகியுள்ளார்.

மேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers