வலுக்கும் நீட் போராட்டம்: சென்னை மாணவிக்கு பொலிஸ் சம்மன்

Report Print Arbin Arbin in இந்தியா

நீட் தேர்வு முறைக்கு எதிராகப் போராடியதாக, சென்னைக் கல்லூரி மாணவிக்கு பொலிஸார் சம்மன் அனுப்பியுள்ளனர்.

சென்னை பிராட்வே, பாரதி மகளிர் கலைக்கல்லூரி மாணவி, மஞ்சுளா. கல்லூரிக்கு அருகேயுள்ள பி.ஆர்.என். கார்டன் பகுதியில் வசிக்கிறார்.

நேற்று இரவு 8.30 மணிக்கு, பாரதி மகளிர் கலைக்கல்லூரியின் எல்லைக்குட்பட்ட முத்தியால் பேட்டை பொலிஸார், மஞ்சுளாவின் வீட்டுக்குச் சென்று அவரது தந்தையிடம் சம்மனை அளித்துள்ளதாக தெரிய வந்துள்ளது.

அதில், "சென்னை பாரதி கலைக்கல்லூரி மாணவியரை உச்ச நீதிமன்ற ஆணைக்கு எதிராக, 'நீட்' தேர்வு முறைக்கு எதிர்ப்புத் தெரிவிக்கும் விதமாக, ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்க வலியுறுத்திக் கலவரம் மற்றும் அமைதியற்ற சூழ்நிலையை சகமாணவியரிடம் உருவாக்கி, அதன் விளைவாக அந்தப் பகுதியில் அமைதியற்ற நிலை ஏற்படும் வகையில் செயல்பட்டு, பொது அமைதியைச் சீர்குலைக்கும் வகையில் இருந்ததன் பேரில் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

அரசுத் தரப்புப் புகாரின்படி, நீர் ஏற்கெனவே, N.3.ps/ முத்தியால்பேட்டை காவல்நிலையம் cr.no.1500/20177 என்ற வழக்கிலும் சம்பந்தப்பட்டுள்ளது தெரியவந்துள்ளதால், ஏன் உங்களை ரூ. 5 ஆயிரம் அபராதத்துடன் கூடிய 6 மாத

காலத்துக்கான நன்னடத்தைக்கான பத்திரமொன்றைத் தகுந்த பிணையாட்களுடன் எழுதித்தர கு.வி.மு.ச.பிரிவு 107-ன்படி வரையறைக்கு உட்படுத்தக்கூடாது என்று விளக்குமாறு பணிக்கப்படுகிறது" என்று கூறப்பட்டுள்ளது.

இன்று காலை முதல், பாரதி மகளிர் கலைக் கல்லூரி வாசலிலும், அருகிலும் வாகனங்களுடன் பொலிஸார் குவிக்கப்பட்டுள்ளனர். இச்சம்பவம் மாணவர்கள் மத்தியில் கடும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது.

மேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்