மனோ எரிவதை நின்று பார்த்தோம்: கொலையாளிகள் பகீர் வாக்குமூலம்

Report Print Fathima Fathima in இந்தியா

சிறப்புக்குழந்தை தகுதிநிலை கொண்ட மனோ, சென்னையில் கல்லால் அடித்தும், எரித்தும் கொலை செய்யப்பட்டார். இந்த விவகாரத்தில் போலீஸார் இருவரைக் கைது செய்துள்ளனர். பெற்றோரால் கைவிடப் பட்ட ஒருவரும், மனச்சிதைவுக்கு ஆளான ஒருவரும்தான் கொலைக்குக் காரணம் என்பது அதிர்ச்சியூட்டும் திருப்பம்.

திருவல்லிக்கேணி பறக்கும் ரயில் நுழைவாயிலில் இருக்கும் தரைவெளிதான் மனோவின் இரவு நேரப் படுக்கையாக இருந்து வந்துள்ளது. 'இருபத்தியெட்டு வயதான போதும் மனதளவில் மனோ, ஒரு குழந்தைதான்' என்கின்றனர், அயோத்திக்குப்பம் பகுதி மக்கள்.

துப்புரவுத் தொழிலாளியான மனோவின் அம்மா அஞ்சலைதேவி, கணவனை இழந்தவர். திருவல்லிக்கேணி ரயில் நிலையப் பகுதியைச் சுத்தம் செய்யும் கூலித் தொழிலாளி. வேலையை முடித்து விட்டு கடற்கரை மணல் வெளியில் அஞ்சலைதேவி உறங்கப் போய்விடுவார்.

அம்மாவோடு கொஞ்சநேரம் பேசிவிட்டு அப்படியே தூங்குவது, சில நாள்களில் திருவல்லிக்கேணி ரயில் நிலைய வாசலில் படுத்துக்கொள்வது என்று குழந்தைத் தனமாகவே, மனோவின் நாள்கள் இருந்திருக்கிறது.

இந்நிலையில்தான் கடந்த 12-ம் தேதி கொடூரமான முறையில் கல்லால் அடித்தும், பெட்ரோல் ஊற்றி எரித்தும் மனோ கொலை செய்யப்பட்டார். இது தொடர்பாக போலீஸார், வினோத், கார்த்திக் என்ற இருவரைக் கைது செய்துள்ளனர்.

போலீஸாரிடம் கார்த்திக் அளித்த வாக்குமூலத்தில், "சென்னை மெரீனா உள்ளிட்ட சுற்றுப்பகுதிகளில் கோணி மூட்டையில் காகிதம், பாட்டில்களைச் சேகரித்து கடைகளுக்கு விற்பேன்.

ஈரோடுதான் சொந்த ஊர். 'நீ எங்களுக்குப் பிறக்கவில்லை, உன்னைத் தத்து எடுத்துதான் வளர்த்தோம்.' என்று அடிக்கடி என் அம்மா சொல்வார். இந்த வார்த்தையைக் கேட்க முடியாமல் சில ஆண்டுகளுக்கு முன் சென்னைக்கு வந்து விட்டேன்.

படிப்பு இல்லாததால், வேலை கிடைக்கவில்லை. காகித மூட்டையைச் சுமந்தேன். மனோ, படுத்துத் தூங்கும் இடத்துக்குப் பக்கத்தில்தான் படுப்பேன். அவனுக்கும் எனக்கும் அடிக்கடி சண்டை வரும், கற்களால் பலமுறை அடித்துக் கொண்டிருக்கிறோம். எங்களுக்குள் விரோதம் அதிகமானது.

மனோ மீது எனக்குத் தெரிந்த வினோத் என்பவனுக்கும் முன் விரோதம் இருந்தது. அயோத்திக் குப்பத்துக்கு அருகில் உள்ள மாட்டாங்குப்பத்தில் வசிக்கும் வினோத்தை நேரில் பார்த்து விஷயத்தைச் சொன்னேன்.

என்னுடன் வர வினோத் சம்மதித்தான். பின்னர் இருவரும் 12-ம் தேதி இரவு 11 மணியளவில், மனோவைத் தேடிப் போனோம். கொசுக்கடிக்கு பயந்து முகத்தில் ஜமுக்காளத்தைப் போர்த்தியபடி ரயில்வே ஸ்டேசன் வாசலில் மனோ, படுத்திருந்தான்.

என்னுடன் வந்த வினோத், குவார்ட்டர் மதுபாட்டிலில் பெட்ரோலை நிரப்பிக் கொண்டு வந்திருந்தான். அதைத் தூங்கிக்கொண்டிருந்த மனோ முகத்தில் ஊற்றிவிட்டு தீயை வைத்தான். மனோ அலறிக்கொண்டு எழுந்தான், எரிச்சல் தாளமுடியாமல் கதறினான். அங்கிருந்து தப்பித்து ஓடமுயன்ற போது அவனை ஓடவிடாமல் நான் கல்லால் அடித்துக் கொண்டே இருந்தேன்.

ஆனால், மனோ அங்கிருந்து எரிந்தபடியே பீச் ரோட்டுக்கு ஓடிவிட்டான். போலீஸ் அவனைக் காப்பாற்றி மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கேதான் அவன் எங்கள் பெயர்களைச் சொல்லி விட்டான்" இவ்வாறு கார்த்திக் வாக்குமூலத்தில் கூறியிருக்கிறார்.

கார்த்திக் அளித்த வாக்குமூலத்தை விட, வினோத் பற்றி கிடைத்த தகவல்களால் போலீஸார், அதிர்ந்துள்ளனர். "வினோத், சாதாரண விஷயத்துக்கும், சத்தம் போட்டுக் கத்தி ஊரைக் கூட்டி விடுவார்.

அவருக்கு சைக்கோ மனநிலை உண்டு. அடுக்கு மாடி குடியிருப்புகளிலிருந்து, அடிக்கடி கீழே குதிக்கும் பழக்கமும் உள்ளவர். லேட்டஸ்ட்டாக அப்படிக் கடந்த மாதம் குதித்திருக்கிறார். குடியிருப்புப் பகுதியில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த மோட்டார் சைக்கிள்களைப் பலமுறை எரித்திருக்கிறார்.

'சிறப்புக் குழந்தை' யான மனோ மீது பெட்ரோலை ஊற்றிக் கொளுத்திவிட்டு அவர் எரிவதை பொறுமையாக நின்று பார்த்திருக்கிறார்" என்ற தகவல் போலீஸாருக்குக் கிடைத்துள்ளது.

போலீஸாரிடம் வினோத் அளித்த வாக்குமூலத்தில், "எனக்கு, மனோவைப் பிடிக்காது, அவனுடன் சண்டை இருந்தது, முன் விரோதமும் இருந்தது. அதனால்தான் இப்படிச் செய்தோம்" என்று கூறினாராம். சம்பவ இடத்தில் போதைப்பொருள்களைப் பயன்படுத்தும் ஆசாமிகளின் நடமாட்டம் அதிகமாக இருப்பது குறித்து போலீஸ் தரப்பில் சுட்டிக்காட்டினோம். நம்மிடம் பேசிய மயிலாப்பூர் போலீஸ் உதவிகமிஷனர் விஸ்வேஸ்வரய்யா, "அந்தப் பகுதியில் தீவிரக் கண்காணிப்பைச் செலுத்தி வருகிறோம். காகிதம், பாட்டில்களைச் சேகரித்து விற்று சாப்பிடும் அன்றாடக் கூலிகள் இங்கே அதிகமாக இருக்கிறார்கள்.

இவர்கள் உண்பது, உறங்குவது என்று எல்லாமே திருவல்லிக்கேணி பறக்கும் ரயில்வே நடைபாதைப் பகுதியில்தான் இருக்கிறது. போக்கிரிகள், வன்முறையைத் தூண்டும் சமூகவிரோதிகள் என்று இந்தப் பகுதியில் யாரும் இல்லை. முன்விரோதம் காரணமாகவே வளர்ச்சியற்ற ஓர் இளைஞரைக் கொலை செய்துள்ளனர், உண்மையிலேயே இது வருத்தம் தருகிற சம்பவம்தான். படுக்க இடமில்லாமல் இங்கே தங்கி விடுகிறார்கள், இரவுகளில் தவறாமல் போலீஸார் ரோந்தும் போகிறார்கள்.

அன்றாடக் கூலிகளுக்கும், போதை குறித்த விழிப்புஉணர்வை ஏற்படுத்தும் முயற்சியில் இறங்கியிருக்கிறோம்" என்று பொறுப்புடன் பதிலளித்தார், போலீஸ் உதவிகமிஷனர் விஸ்வேஸ்வரய்யா. திருவல்லிக்கேணி பறக்கும் ரயில்நிலைய நுழைவாயிலிலும் சி.சி.டி.வி. கேமராக்கள் இல்லை என்பதை கண்டிப்பாகச் சொல்லியாக வேண்டும்.

- Vikatan

மேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்