நெகிழ்ச்சியடைந்த பொதுமக்கள்..ஆச்சரியப்பட வைத்த சிறுமிகள்: அப்படி என்ன செய்தார்கள்?

Report Print Santhan in இந்தியா

தமிழகத்தில் கண்மாய் தூர்வாரும் பணிக்காக தாங்கள் சேமித்து வைத்திருந்த உண்டியல் தொகையினை பள்ளிச் சிறுமிகள் கொடுத்த சம்பவம் அனைவரையும் நெகிழ்ச்சியடைய வைத்துள்ளது.

உசிலம்பட்டியின் மையப்பகுதியில் அமைந்துள்ள கண்மாய் கடந்த 40 ஆண்டுகள் தூர்வாரப்படாமல் இருந்ததால், அந்த கண்மாயில் இறைச்சி கழிவுகள் மற்றும் சீமைக்கருவேல மரங்கள் என மோசமான நிலையில் காட்சி அளித்தது.

இதனால் கண்மாயை சீரமைக்க பல முறை மனு அளித்தும் பலன் அளிக்காததால், தன்னார்வ அமைப்பினர் பொதுப்பணித்துறையிடம் அனுமதி கோரினர்.

இதற்கான அனுமதி கடந்த ஆண்டே கிடைத்ததால், கண்மாய் இரண்டே மாதங்களில் தூர்வாரப்பட்டது.

இதைத் தொடர்ந்து மீண்டும் சீமை கருவேல மரங்கள் வளர்ந்ததால் இரண்டாவது முறையாக கண்மாயை தூர்வாரும் பணி துவங்கப்பட்டது.

இவர்களுக்கு லயன்ஸ் கிளப் ஜே.சி.பி இயந்திரம் கொடுத்து உதவியது. கோட்டாச்சியர் சுகன்யா இந்த பணியைத் துவக்கி வைத்தார்.

7 நாட்களாக நடந்துவரும் இப்பணிக்கு, பள்ளிக் குழந்தைகள் தியாகேஷ், இளமதி, தர்ணிஸ்ரீ ஆகியோர் தங்களின் சிறுசேமிப்புத் தொகையான 40 ரூபாயை உண்டியலுடன் வழங்கினர்.

இதே போன்று தியானேஷ் என்ற 10-ஆம்‌ வகுப்பு மாணவரும் தனது சிறுசேமிப்பு தொகையான 2,000 ரூபாய் பணத்தை கண்மாய் தூர்வாரும் பணிகளுக்காக அளித்துள்ளார். இந்த இளம் தலைமுறையினரின் செயல் அப்பகுதி மக்களை நெகிழவைத்துள்ளது.

மேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்