187 இடங்களில் 60 போலி நிறுவனங்கள்: 2வது நாளாக தொடரும் ஐடி ரெய்டு

Report Print Santhan in இந்தியா

தமிழ்நாடு முழுவதும் நேற்று வருமான வரித்துறையினர் சசிகலா, தினகரன் மற்றும் அவர்களது உறவினர்கள் வீடுகளில் சோதனை நடத்தினர்.

இதில் முக்கிய ஆவணங்கள் சிக்கியதாக தகவல்கள் வெளியானது, எனினும் அதிகாரிகள் எந்த ஒரு தகவலும் தெரிவிக்கவில்லை.

இதைத் தொடர்ந்து தற்போது இரண்டாவது நாளாக அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர்.

இதுகுறித்து வருமான வரித்துறை புலனாய்வு இயக்குனர் கூறுகையில், சோதனையின் போது கைப்பற்றப்பட்ட ஆவணங்கள் குறித்து ஆய்வு மேற்கொள்ளப்பட்டு வருகிறது என்று தெரிவித்துள்ளார்.

மேலும் இந்த சோதனை ஆபரேஷன் கிளீன் பிளாக்மணி என்ற பெயரில் தமிழகத்தில் உள்ள 187 இடங்களில் நடைபெற்று வருகிறது என்றும் இதில் 215 சொத்துகள், 350 நபர்கள் விசாரணை வளையத்துக்குள் கொண்டுவரப்பட்டுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளது.

187 இடங்களில் நடைபெற்ற இந்த சோதனையில் 40 இடங்களில் சோதனை முடிந்துள்ளதாகவும், இன்று மீண்டும் 147 இடங்களில் சோதனை தொடர்கிறது எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த சோதனைக்காக டெல்லி, கொச்சி, ஹைதராபாத் போன்ற மாநிலங்களிலிருந்து கூடுதல் வருமான வரித்துறை அதிகாரிகள் வரவழைக்கப்பட்டு சோதனை நடத்தப்பட்டு வருகிறது.

இந்த சோதனையில் 60 போலி நிறுவனங்கள் குறித்து தகவல்கள் கிடைத்துள்ளதாகவும், சோதனையின் போது எவ்வளவு கருப்புப்பணம் பிடிபட்டது, டெபாசிட் செய்யப்பட்டுள்ள தொகைகள் மற்றும் எவ்வளவு பணம் கைப்பற்றப்பட்டுள்ளன என்பது குறித்து தொடர்ந்து பணி நடைபெற்று வருவதாகவும், இன்றும் சோதனைகள் தொடர்வதால், அனைத்தும் முடிந்த பின்னரே இறுதியான தகவல் தெரிவிக்கப்படும் என்று அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

இன்று தஞ்சையில் 7 இடங்களில் சோதனை மேற்கொண்டு வரும் அதிகாரிகள் சசிகலாவின் அண்ணன் மகன் மகாதேவன் வீடு, மருத்துவர் வெங்கடேஷ் மற்றும் அவரது நண்பர் ஆகியோர் வீடுகளிலும், சென்னை அண்ணா நகரில் விவேக் ஜெயராமனின் மாமனார் பாஸ்கர் வீட்டிலும், நாமக்கல்லில் சசிகலா வழக்கறிஞர் செந்தில் வீட்டிலும் செந்தில் நண்பர் சுப்பிரமணியன் வீட்டிலும் சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர்.

தற்போது வந்த தகவலின் படி புதுவையில் ஆரோவில் அருகே தினகரனின் 100 ஏக்கர் பரப்பளவில் உள்ள பண்ணை வீட்டில் வருமான துறை அதிகாரிகள் இரண்டாவது நாளாக சோதனை மேற்கொண்டு வருவதாகவும், நேற்று அந்த பண்ணை வீட்டில் இருந்து கைப்பற்றப்பட்ட பொருட்களை கார் ஒன்றில் வைத்து விளக்கு அணைத்தபடியே கொண்டு சென்றுவிட்டதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

மேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்