இந்திய ஒரு ரூபாய் தாளுக்கு வயது என்ன தெரியுமா?

Report Print Arbin Arbin in இந்தியா

முதன் முதலாக ஒரு ரூபாய் தாள் நவம்பர் 30, 1917-ம் ஆண்டு 5-ம் ஜார்ஜ் மன்னன் படத்துடன் ஆங்கிலேயர்களால் அறிமுகம் செய்யப்பட்டது, இன்றைய தினம் ஒரு ரூபாய் தாளுக்கு வயது 100.

முதலாம் உலகப் போர் காலக்கட்டத்தில் உலோக நாணயங்கள் தயாரிக்க முடியாத போது காலனியாதிக்க பிரிட்டிஷ் ரூ.1 தாளை அறிமுகம் செய்தது.

1926-ம் ஆண்டு செலவு மறு ஆய்வு பரிசீலனைகளுக்காக ஒரு ரூபாய் தாள்கள் அச்சிடுவது நிறுத்தப்பட்டதாக இந்திய ரிசர்வ் வங்கி இணையதளத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.

1940-ம் ஆண்டு மீண்டும் ஒரு ரூபாய் தாள்கள் அறிமுகம் செய்யப்பட்டு பின்னர் 54 ஆண்டுகள் சென்று 1994-ம் ஆண்டு மீண்டும் நிறுத்தப்பட்டது. பிறகு 2015-ம் ஆண்டு மீண்டும் புழக்கத்துக்கு வந்தது.

இத்தகைய வரலாறு கொண்ட ரூ.1 தாளின் தனித்துவம் என்னவெனில் இது அரசாங்கத்தால் வெளியிடப்படுவது, இந்திய ரிசர்வ் வங்கியினால் அல்ல.

மேலும் இந்த ஒரு ரூபாய் தாள்களில் மட்டும்தான் இந்திய ரிசர்வ் வங்கி கவர்னர் கையெழுத்து இருக்காது. நிதிச்செயலர் கையெழுத்தே இருக்கும்.

ரூ.1 தாள்கள் அறிமுகம் செய்யப்பட்ட போது இது வெள்ளி நாணயத்துக்கு மாற்றாக அமைந்தது.

முதலாம் உலகப்போரின் போது வெள்ளி விலை உயர்ந்தது. அதனால்தான் முதன் முதலில் ஒரு ரூபாய் தாள்கள் அறிமுகம் ஆனபோது பழைய வெள்ளி நாணயத்தின் படமும் சேர்த்தே அச்சிடப்பட்டது.

அதிலிருந்து ரூ.1 தாள்களில் அப்போது உள்ள உலோக நாணய படமும் சேர்த்து அச்சிடப்படுவது வழக்கமானது என ரூபாய், நாணயங்கள் சேகரிப்பாளர் கிரீஷ் வீரா என்பவர் தெரிவித்துள்ளார்.

மேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers

loading...