ஆர்.கே.நகர் தேர்தல் களேபரம்: நடிகர் விஷால், ஜெ.தீபா வேட்புமனு நிராகரிப்பு; விஷால் மீது கிரிமினல் நடவடிக்கை?

Report Print Arbin Arbin in இந்தியா

சென்னை ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் ஜெயலலிதா அண்ணன் மகள் தீபா மற்றும் நடிகர் விஷால் ஆகியோர் தாக்கல் செய்த வேட்புமனுவை தேர்தல் அதிகாரி நிராகரித்துள்ளார்.

தீபா தாக்கல் செய்த வேட்பு மனுவில் படிவம் 26-ல் சொத்துக்கள் மற்றும் வழக்குகள் தொடர்பான தகவல்களை நிரப்பாமல் விட்டதே காரணம் என கூறப்படுகிறது.

இதேபோன்று நடிகர் விஷாலுக்கு முன்மொழிந்தவர்களின் பெயர்கள் தவறாக உள்ளதால் வேட்புமனு நிராகரிக்கப்பட்டுள்ளதாக தேர்தல் அதிகாரி தெரிவித்துள்ளார்.

சென்னை ராதாகிருஷ்ணன் நகர் இடைத்தேர்தலில் போட்டியிடுவதற்காக சுயேச்சையாக களமிறங்கிய நடிகர் விஷாலின் கனவு வேட்பு மனுவோடு தடைபட்டுள்ளது.

அப்போது விஷாலின் வேட்பு மனுக்களை முன்மொழிந்தவர்களில் 2 பேரின் கையெழுத்து போலி என்பது கண்டறியப்பட்டது.

முன்மொழிந்த 2 பேரே நேரில் வந்து தேர்தல் அதிகாரியிடம் இது தங்களின் கையெழுத்து அல்ல என்று சொன்னதையடுத்து அவரது மனு நிராகரிக்கப்பட்டுள்ளதாக தெரிகிறது.

மேலும் விஷால் தன்னுடைய பல்வேறு வங்கிக் கணக்குகளை மறைத்துள்ளதாகவும் சொல்லப்படுகிறது. தேர்தல் ஆணையத்தையே ஏமாற்றும் நோக்கில் போலி கையெழுத்துகளை போட்டுள்ளதால், நடிகர் விஷால் மீது கிரிமினல் நடவடிக்கை பாயலாம் என்று சட்டநிபுணர்கள் தெரிவிக்கின்றனர்.

இதனிடையே தமது வேட்புமனு நிராகரிக்கப்பட்டதை அடுத்து தர்ணாவில் ஈடுபட்ட நடிகர் விஷாலை பொலிசார் குண்டுகட்டாக தூக்கி அப்புறப்படுத்தியுள்ளனர்.

சென்னை ஆர்.கே.நகரில் டிசம்பர் 21 ஆம் திகதி இடைத்தேர்தல் நடைபெறவுள்ளது. இதற்கான வேட்புமனு தாக்கல் நேற்றுடன் நிறைவடைந்தது. 131 பேர் வேட்புமனுக்களை தாக்கல் செய்துள்ளனர்.

மேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்