சாலை விபத்து: ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 10 பேர் பலியான பரிதாபம்

Report Print Gokulan Gokulan in இந்தியா

திருச்சியில் நேற்று நள்ளிரவில் நடந்த கொடூரமான சாலை விபத்தில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 10 பேர் பலியான சம்பவம் அனைவரையும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.

நாகர்கோவில் மாவட்டம் ஆரல்வாய்மொழியைச் சேர்ந்த வைத்திலிங்கம் என்பவர் குடும்பத்தினர் மற்றும் உறவினர்கள் சகிதமாக திருப்பதி கோவிலுக்கு திருச்சி வழியாக டெம்போ டிராவலர் வான் மூலம் நேற்று நண்பகலில் கிளம்பியுள்ளார்.

15 நபர்களுடன் கிளம்பிய இந்த வாகனத்தை ராஜேஷ் என்கிற டிரைவர் செலுத்தியுள்ளார்.

நள்ளிரவு 11.40 மணியளவில் திருச்சி மாவட்டம் துவரக்குறிச்சி அருகே வந்துகொண்டிருந்த போது தேசிய நெடுஞ்சாலையில் உள்ள துவரக்குறிச்சி ஊருக்குள் செல்லும் மூரணிமலை திருப்பத்தில் சர்விஸ் ரோட்டில் சென்றுகொண்டிருந்த போது முன்னாள் சென்ற போர்வெல் லொறி மீது பயங்கரமாக மோதியுள்ளது.

விபத்துகுறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த பொலிஸ் இன்ஸ்பெக்டர் அப்துல்கபூர் தலைமையிலான பொலிசார் மற்றும் தீயணைப்புப் படை வீரர்கள், கடுமையாக நசுங்கியிருந்த வானிலிருந்து 1 மணி நேரத்திற்கும் மேல் போராடி பயணிகள் அனைவரையும் மீட்டுள்ளனர்.

இந்த கோர விபத்தில் வைத்திலிங்கம் உள்ளிட்ட 5 ஆண்கள், 3 பெண்கள் மற்றும் 2 குழந்தைகள் சம்பவ இடத்திலேயே பலியாகியுள்ளனர்.

படுகாயங்களுடன் மீட்கப்பட்ட டிரைவர் ராஜேஷ் உள்ளிட்ட 5 பேர் திருச்சி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

பொலிஸ் விசாரணையில் திருச்செங்கோடு பகுதியிலிருந்து போர்வெல் போடும் பணிக்காக துவரக்குறிச்சி நோக்கி சென்று கொண்டிருந்த லொறியை டிரைவர் சந்திரசேகரன் என்பவர் செலுத்தியுள்ளார்.

போர்வெல் ஆப்ரேட்டர் ஸ்ரீரங்கன் உள்ளிட்ட பத்துக்கும் மேற்பட்டவர்கள் ஜெனரேட்டர் வண்டியில் உட்கார்ந்து வந்துள்ளனர்.

வேளைப்பளு காரணமாக ஓய்வெடுக்க இடம் தேடிக்கொண்டே லொறி பொறுமையாக சென்றுள்ளது.

அப்போது பின்னால் வந்த வான் மோதியதால் விபத்து ஏற்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது. மேலும் விபத்து குறித்து விசாரணை நடைபெற்று வருவதாக பொலிசார் கூறியுள்ளனர்.

மேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்