காதல் திருமணம் செய்த மகளை வலுக்கட்டாயமாக இழுத்துச் சென்ற தந்தை: 10 பேர் கைது

Report Print Arbin Arbin in இந்தியா

மதுரை மாவட்டத்தில், ஓடும் பேருந்தை மறித்து, காதல் திருமணம் செய்த மகளை வலுக்கட்டாயமாக அழைத்துச் சென்ற தந்தை உட்பட பத்து பேர் காவல்துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

திருச்சி மாவட்டம் பெட்டவாய்த்தலையை சேர்ந்த செல்வம் என்பவரது மகள் ஸ்வேதா. இவர் கல்லூரியில் தன்னுடன் படித்த மனிதநேயம் என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்டார். இவர்களின் திருமணத்தை எதிர்த்து பெண்ணின் தந்தை, உயர்நீதிமன்ற மதுரை கிளையில் வழக்கு தொடர்ந்தார்.

இந்த வழக்கு நேற்று விசாரணக்கு வந்தது. அதில், காதல் தம்பதிகள் இருவரும் மேஜர் என்ற காரணத்தால் இவர்கள் இணைந்து வாழ உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவு பிறப்பித்தது.

வழக்கு முடிந்து இருவரும் மதுரையில் இருந்து புதுக்கோட்டைக்கு பேருந்தில் சென்று கொண்டிருந்தனர். அப்போது மதுரை அருகே அந்த பேருந்தை வழிமறித்த பெண்ணின் தந்தை செல்வம், ஸ்வேதாவை வலுக்கட்டாயமாக கீழே இறக்கி காரில் ஏற்றிச் சென்றுள்ளார். இதைப்பார்த்து அதிர்ச்சியடைந்த மனிதநேயம், காவல்துறையில் புகார் அளித்துள்ளார்.

மனிதநேயம் அளித்த புகாரின் பேரில் கரூர் அருகே தான்தோன்றிமலையில் ஸ்வேதாவை மீட்டு, மதுரைக்கு பொலிசார் அழைத்துச் சென்றுள்ளனர். மேலும் பெண்ணின் தந்தை உட்பட பத்து பேர் காவல்துறையினரால் கைது செய்யப்பட்டு விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

சாதிமறுப்பு திருமணம் செய்து ஆணவக்கொலை செய்யப்பட்ட சங்கரின் கொலை வழக்கில் குற்றவாளிகளுக்கு மரணதண்டனை வழங்கி நீதிமன்றம் தீர்ப்பளித்தது. அந்த விவகாரத்தின் தாக்கம் மறையும் முன்பாகவே, ஓடும் பேருந்தை மறித்து, காதல் திருமணம் செய்த மகளை வலுக்கட்டாயமாக அழைத்துச் சென்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

மேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்