5 பெண்களை ஏமாற்றி மணந்த பலே ஆசாமி! மருத்துவராக வலம்வந்தது அம்பலம்

Report Print Kabilan in இந்தியா

ஆந்திராவில் ஐந்து பெண்களை ஏமாற்றி திருமணம் செய்த போலி மருத்துவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

ஆந்திர மாநிலம் பங்குலூரு மண்டலம், சின்னமல்லராணியைச் சேர்ந்தவர் வீர ஆஞ்சநேயலு, இவர், ஓங்கோல் என்னும் பகுதியில் உள்ள மருத்துவமனையில் உதவியாளராக பணியாற்றி வந்தார்.

பின்னர், அப்பணியில் இருந்து விலகிய ஆஞ்சநேயலு, குண்டூரில் கடந்த 2016ஆம் ஆண்டு ஜூனில் மருத்துவமனை ஒன்றை ஆரம்பித்தார்.

அங்கு தன்னை மருத்துவர் என்று கூறி சிகிச்சை அளித்து வந்தவர், அதே பகுதியைச் சேர்ந்த 25 வயது பெண்ணுக்கு மணமகன் தேவை என்ற அறிவிப்பை பார்த்துள்ளார்.

அப்பெண்ணின் வீட்டிற்கு சென்று, பெற்றோரின் சம்மதத்தை பெற்றுள்ளார். இதனைத் தொடர்ந்து, பெற்றோர் மற்றும் உறவினர்கள் என சிலரை பணம் கொடுத்து நடிக்க வைத்து, அந்த பெண்ணை திருமணம் செய்துள்ளார்.

இந்நிலையில், சில நாட்களிலேயே ஆஞ்சநேயலு மீது சந்தேகம் கொண்ட அப்பெண், குண்டூர் பொலிசில் புகார் அளித்துள்ளார். அதன்பேரில் ஆஞ்சநேயலுவை கைது செய்து விசாரித்த பொலிசாருக்கு, பல திடுக்கிடும் தகவல்கள் தெரிய வந்துள்ளது.

கடந்த 2015ஆம் ஆண்டு, வினுகொண்டா பகுதியில் மருத்துவமனை கட்டி, தன்னை மருத்துவர் என்று கூறி ஒரு பெண்ணை திருமணம் செய்துள்ளார் ஆஞ்சநேயலு. அதே ஆண்டு நவம்பர் மாதத்தில், ராஜமுந்திரியைச் சேர்ந்த ஒரு பெண்ணையும் ஏமாற்றி மணமுடித்துள்ளார்.

இதனைத் தொடர்ந்து, ரமேஷ்பாபு என்ற பெயரில் குண்டூரில் உள்ள செருகுபல்லி பகுதியில் ஒரு மருத்துவமனையைக் கட்டி, கடந்த ஆண்டு மார்ச்சில் ஒரு பெண்ணை திருமணம் செய்துள்ளார்.

மேலும், பிரகாசம் மாவட்டம் தூதிநாயினிபள்ளி பகுதியிலும் ஒரு பெண்ணை ஏமாற்றி திருமணம் செய்துள்ளார்.

ஆஞ்சநேயலுவின் கைது செய்யப்பட்டதை அறிந்த அந்த நான்கு பெண்களும், குண்டூர் காவல் நிலையத்திற்கு வந்தனர்.

அவர்கள் முன்னிலையில் விசாரணை நடத்திய பொலிசார், பின்னர் ஆஞ்சநேயலுவின் 3 மருத்துவமனைகளுக்கும் ‘சீல்’ வைத்தனர்.

மேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers