டெபாசிட்டை இழந்த திமுக: தொண்டர்களுக்கு மு.க.ஸ்டாலின் கடிதம்

Report Print Fathima Fathima in இந்தியா

ஆர்.கே.நகர் தேர்தல் தோல்வி பற்றி திமுக செயல் தலைவர் மு.கஸ்டாலின் நீண்ட அறிக்கையை கடிதமாக தொண்டர்களுக்கு எழுதியுள்ளார்.

அவரது கடித அறிக்கை வருமாறு:

“என்ன இப்படி ஆகிவிட்டதே என்றும் இப்படியா நடக்கும் என்றும் ஆர்.கே.நகர் தொகுதி இடைத்தேர்தல் முடிவுகளால் அதிர்ச்சியும் ஆச்சரியமும் அடைந்துள்ளவர்கள் தொடர்ந்து கேட்டுக் கொண்டே இருக்கிறார்கள். தேர்தல் எனும் ஆற்றின் கரையோரமாக நிற்கும் ஜனநாயகக் குழந்தையை பணநாயக முதலை அப்படியே விழுங்கும்போது எல்லாருக்கும் அதிர்ச்சி ஏற்படுவது இயல்புதான்.

பணத்தை வாரி வாரி இறைத்த இரு தரப்பில் ஒரு தரப்பு வெற்றி பெற்றிருக்கும் நிலையில், ஜனநாயகத் தேர்தல் களத்தை நியாயமான முறையில் சட்டதிட்டங்களுக்கு உட்பட்டு சந்திக்க வேண்டும் என்கிற உறுதியுடன், திமுக ஜனநாயக நெறிகளையும் கோட்பாடுகளையும் பின்பற்றி செயல்பட்டதற்கு கிடைத்துள்ள பரிசுதான், ஆர்.கே.நகரில் கிடைத்துள்ள பின்னடைவு. இரண்டு அணிகளாய்ப் பிரிந்து நின்றவர்கள் கொட்டிக் கொடுத்த தொகையினால், திமுக வேட்பாளரின் டெபாசிட் தொகையும் பறிபோயிருக்கிறது.

திமுகவின் இடைத்தேர்தல் தோல்வியைப் பார்த்து எக்காளமிடுபவர்கள், ஏளனம் செய்பவர்கள் இந்தத் தேர்தலில் நடந்த அத்துமீறல்களையும் துஷ்பிரயோகங்களையும் மறைப்பதற்கு நேரடியாகவோ-மறைமுகமாகவோ துணை போகிறார்கள். காரணம், ஆர்.கே.நகரில் தோற்றது, தி.மு.க அல்ல; இந்தியாவின் பெருமை எனக் கொண்டாடப்படும் மிகப்பெரிய ஜனநாயகம்.

கடந்த முறை ஆர்.கே.நகர் இடைத்தேர்தல் ஒத்திவைக்கப்படுவதற்கு என்னென்ன காரணங்கள் சொல்லப்பட்டனவோ அத்தனையும் இந்தத் தேர்தலிலும் அரங்கேறின. ஆனால், தேர்தல் ஆணையம் கண்களையும் காதுகளையும் பொத்திக்கொண்டு, வாய்ப்பந்தல் மட்டுமே வாளாவிருந்தன் விளைவாகவே ஜனநாயகத்தைப் பணநாயகம் வென்றிருக்கிறது.

கடந்த முறை பிடிபட்ட 89 கோடி ரூபாய் தொடர்பான ஆவணங்கள் மீது எந்த நடவடிக்கையும் இல்லை என்பதால் முதலமைச்சர் உள்ளிட்ட சம்பந்தப்பட்ட அனைவருக்கும் துளிர்விட்டு போய்விட்டது. இந்த முறை, ஆர்.கே.நகரிலும் அருகிலுள்ள தொகுதிகளிலும் இடைத்தேர்தலில் வாக்குரிமையுள்ளவர்களை வரவழைத்து தேர்தல் ஆணையத்தின் கண்ணெதிரே பணப்பட்டுவாடா செய்யப்படுவதை தொலைக்காட்சிகள் நேரலையாக ஒளிபரப்பியும் நடவடிக்கை இல்லை.

ஓட்டுக்கு 6000 ரூபாய் என விலை நிர்ணயித்து வழங்கிய ஆட்சியாளர்களையும், 20 ரூபாய் டோக்கன் கொடுத்து வாக்களித்தபின் 10 ஆயிரம் ரூபாய் டெபாசிட் செய்த ஹவாலா அரசியல்வாதிகளையும் தேர்தல் ஆணையம் சிறிதும் கண்டுகொள்ளவேயில்லை. அரசு இயந்திரத்தை, குறிப்பாக காவல்துறையிலும் அதன் பிரிவான உளவுத்துறையிலும் உள்ள தங்கள் சமுதாயத்து அதிகாரிகள் மூலமாக ஜனநாயகத்தை விலை பேசும் செயல்பாடுகள் கச்சிதமாக நடந்து முடியும்வரை தேர்தல் ஆணையம் வேடிக்கை பார்த்து கொண்டு தான் இருந்தது.

விலை கொடுத்து வாங்கப்பட்ட இந்த வெற்றி என்பது அவர்களுக்கு வெகுமானமல்ல, பெரிய அவமானம். அதே நேரத்தில், வாக்காளர்களுக்குப் பணம் கொடுத்து வாக்குகளுக்கு விலை பேசக் கூடாது என்ற ஜனநாயகத்தின் அடிப்படை கொள்கையை கடைப்பிடித்த தி.மு.க தோல்வியடைந்திருப்பது இலட்சிய ரீதியான தன்மானம்.

அந்தப் பெருமிதத்துடன், தோல்வியின் சுவடே தெரியாதபடி, தலைநிமிர்ந்து மக்களை சந்தித்து அவர்கள் பக்கம் என்றைக்கும் நின்று பணியாற்றும் கடமையுணர்வு கொண்டவர்கள்தான் இருவண்ணக் கரை போட்ட வேட்டி அணிந்துள்ள திமுகவினர். வெற்றி பெற்றால் வெறிகொண்டு ஆடுவதுமில்லை, தோல்வி கண்டால் துவளுவதுமில்லை என்பதே தலைவர் கருணாநிதி நமக்குக் கற்றத் தந்துள்ள அரசியல் பாடம்.

இமயமே சரிந்தாலும் நிலைகுலையாமல் நெஞ்சுறுதியுடன் நிற்கும் தி.மு.க எனும் பேரியக்கத்திற்கு இடைத்தேர்தல் சறுக்கல்கள் சாதாரணமானவை. இன்னும் சில மாதங்களில் பொதுத்தேர்தல் வரவேண்டும் என்கிற மக்களின் எதிர்பார்ப்பு நிறைவேறுவதற்கான வாய்ப்பு உருவாகியுள்ள நிலையில், அதில் திமுகவின் வெற்றி உறுதியாக எழுதப்பட்டுள்ளதால், எப்படியாவது அதனைத் தகர்த்துவிடவேண்டும் என இடைத்தேர்தல் முடிவுகளை கொண்டு திமுகவை பலவீனப்படுத்த நினைக்கும் ஆதிக்க சக்திகளைக் கண்டு சிறிதும் மயங்கிட வேண்டியதில்லை.

இப்போதும்கூட சில கட்சியினர், தாங்கள் அடைந்துள்ள படுதோல்வியை மறைத்துக் கொண்டு, திமுகவின் தோல்வி குறித்து பேசி சிலாகிக்கிறார்கள். அத்தகைய நிரந்தர மனோ வியாதிக்காரர்கள் நிறைந்துள்ள நிலையில், கட்சியினர் மேலும் மனஉறுதியுடன் செயல்படவேண்டியது மிக மிக அவசியம். இரண்டு அணிகளாகப் பிரிந்து நின்றவர்களில் வென்றோரும் தோற்றோரும் உச்சநீதிமன்றத்தால் குற்றவாளிகள் என நிரூபிக்கப்பட்டு தீர்ப்பளிக்கப்பட்டகளின் வழி வந்தவர்கள்.

திமுகவோ, அவதூறு வழக்கை-அவமானப்படுத்தி அழித்துவிடலாம் என்ற நம்பாசையில் போடப்பட்ட வழக்கை ஒரு சிலர் போல தப்பிக்கும் எண்ணத்தோடு வாய்தாவுக்கு மேல் வாய்தா வாங்கிக் காலம் கடத்தாமல் சட்டரீதியாக எதிர்கொண்டு, நீதியை நிலைநாட்டி, புடம் போட்ட தங்கமாக ஒளிர்கின்ற இயக்கம்.

திமுக பெற்றுள்ள சட்டரீதியான வெற்றியைப் பொறுத்து கொள்ள முடியாதவர்கள், இடைத்தேர்தலில் நாம் பெற்ற தோல்வியை ஊதிப் பெரிதாக்கி தங்களுக்குத் தாங்களே சந்தோஷம் கொள்கிறார்கள். அதன் மூலம் கட்சித் தொண்டர்களின் மன உறுதியைக் குலைத்துவிடலாம் என கணக்குப் போடுகிறார்கள். அண்ணாவின் வழியில் தலைவர் கருணாநிதி கட்டிக்காத்த இந்தக் கட்சியை யாராலும் எந்தக் காலத்திலும் தொட்டுக்கூடப் பார்க்க முடியாது. இமயத்தை வாயால் ஊதிச் சாய்த்திட இயலுமா?

பணம் விளையாடிய இந்த இடைத்தேர்தல் களத்தில் கட்சியின் சார்பில் மேற்கொள்ளப்பட்ட பணிகள், வகுக்கப்பட்ட வியூகங்கள், அவை செயல்படுத்தப்பட்ட விதம், எங்கெங்கே கவனக்குறைவு, எவரெவரிடம் அலட்சியம், கட்சி வாக்குகளில் ஏற்பட்ட சரிவு இவை அனைத்தும் முழுமையான ஆய்வுக்குட்படுத்தப்படும். பயிர் விளையும் கழனியில் உள்ள களைகள் அகற்றப்பட்டு, ஆயிரங்காலத்துப் பயிரான திமுக எந்நாளும் காப்பாற்றப்படும்.

இடைத்தேர்தல் எனும் தற்காலிக பின்னடைவை கடந்து, 2ஜி எனும் பொய் வழக்கை தவிடுபொடியாக்கி, நீதியின் கரங்கள் நமக்களித்துள்ளது நிரந்தர வெற்றி. இடைத்தேர்தலில் பின்னடைவை சந்தித்து, அடுத்து நடந்த பொதுத்தேர்தலில் அதே கட்சி வெற்றி பெற்று ஆட்சியமைத்த நிகழ்வு தமிழக தேர்தல் களத்தில் ஏற்கனவே நடந்திருப்பதை நீ அறிவாய். எனவே, ஆர்.கே.நகர் தொகுதி இடைத்தேர்தலில் பணநாயகம் பெற்றுள்ள வெற்றியால், பின்னடைவு நமக்கல்ல தோழா. நம் உயிர் நிகர் தலைவர் கருணாநிதியின் வழியில் பயணத்தைத் தொடர்வோம் வா.. வா. ”

இவ்வாறு மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

மேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்