பெரியபாண்டியன் மனைவியின் காலில் விழுந்து மன்னிப்பு கேட்ட முனிசேகர்

Report Print Kabilan in இந்தியா
265Shares

ராஜஸ்தானில் நடந்த சம்பவத்தை விளக்கி, காவல் ஆய்வாளர் பெரியபாண்டியன் மனைவியின் காலில் விழுந்து கண்ணீருடன் மன்னிப்பு கேட்டுள்ளார் சக காவல் ஆய்வாளர் முனிசேகர்.

மதுரவாயலில் காவல் ஆய்வாளராக இருந்தவர் பெரியபாண்டியன். இவர் கொள்ளைச் சம்பவம் ஒன்றிற்காக, வட மாநில கொள்ளையர்களை பிடிக்க ராஜஸ்தான் மாநிலத்திற்கு, ஐந்து பொலிசாருடன் சென்றுள்ளார்.

ராஜஸ்தான் மாநிலம் பாலி மாவட்டத்தில், நாதுராம் எனும் கொள்ளையனை சுற்றி வளைத்து பிடிக்கும் முயற்சியில் துப்பாக்கிச் சூடு நடந்துள்ளது. இதில் ஆய்வாளர் பெரியபாண்டி உயிரிழந்தார்.

இவரின் மரணத்திற்கு காரணம் கொள்ளையர்களின் துப்பாக்கியில் இருந்து வந்த தோட்டா எனவும், ஆய்வாளர் முனிசேகரின் துப்பாக்கி தவறி விழுந்ததில், அதனை எடுத்து கொள்ளையர்கள் சுட்டதாகவும் கூறப்பட்டது.

இதனைத் தொடர்ந்து ராஜஸ்தான் பொலிஸார் நடத்திய விசாரணையில், தமிழக பொலிஸாரின் துப்பாக்கி சுட்டதில் தான், பெரியபாண்டியன் உயிரிழந்துள்ளார் என்று தெரிவிக்கப்பட்டது.

எனினும் பெரியபாண்டியின் மனைவி பானுரேகா அதனை நம்ப மறுத்தார். மேலும் முனிசேகர் தன் கணவரின் நெருங்கிய நண்பர் என்றும், அவர் சுட்டிருக்க வாய்ப்பில்லை என்றும் தெரிவித்தார்.

இதனைத் தொடர்ந்து கடந்த ஞாயிற்றுக்கிழமை பெரியபாண்டிக்கு அவரது சொந்த ஊரான சங்கரன் கோவில் அருகில் உள்ள மூவிருந்தாளியில் 16ஆம் நாள் காரியம் நடத்தப்பட்டது.

அதில் கலந்து கொள்ள சென்ற முனிசேகர், ராஜஸ்தானில் நடந்த சம்பவங்களை கூறி, பானுரேகாவின் காலில் விழுந்து கண்ணீருடன் மன்னிப்பு கேட்டுள்ளார்.

மேலும் பெரியபாண்டியனின் தந்தையின் காலிலும் விழுந்து மன்னிப்பு கேட்டுள்ளார். முனிசேகரின் துப்பாக்கியால் கொள்ளையர்களை சுட்டபோது, குறி தவறி பெரியபாண்டியனின் உயிரை பறித்துள்ளது.

இதனை அறிந்த உயர் அதிகாரிகள் தான் முனிசேகரை மன்னிப்பு கோர அறிவுறுத்தியதாக கூறப்படுகிறது.

மேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்