கலவர பூமியான புனே: பதற்றத்தில் மகாராஷ்டிரா

Report Print Kabilan in இந்தியா

பீமா கோரேகான் போர் நினைவு தினத்தை தலித் பிரிவினர் கொண்டாட, இந்துத்துவா அமைப்பினர் எதிர்ப்பு தெரிவித்ததால் மகாராஷ்டிரா மாநிலம் புனேவில் பெரும் கலவரம் ஏற்பட்டுள்ளது.

சுமார் 200 ஆண்டுகளுக்கு முன்பு, பீமா கோரேகான் என்னும் இடத்தில் தலித் பிரிவினருக்கு எதிரான அடக்குமுறையை கண்டித்து, இரு பிரிவினருக்கு இடையே நடைபெற்ற சண்டையில் தலித் பிரிவினர் வெற்றி பெற்றனர்.

இந்த வெற்றி தினத்தை ஆண்டுதோறும் ஜனவரி 1ஆம் திகதி, அப்பிரிவினர் கொண்டாடுவது வழக்கம். இந்த ஆண்டு 200வது நினைவு தினம் என்பதால், மிகப் பெரிய அளவில் மக்கள் திரளாக கூடினர்.

இந்த விழாவில் புகுந்த இந்துத்துவா அமைப்பினர் அங்கு கூடியிருந்த தலித் மக்களை தாக்க தொடங்கியுள்ளனர். அதன் பின்னர், இது பெரிய கலவரமாக மாறியுள்ளது.

இந்த கலவரத்தில் தலித் குழுவைச் சேர்ந்த ஒருவர், கல்லால் தாக்கப்பட்டு கொல்லப்பட்டார். இதனைத் தொடர்ந்து, புனே முழுக்க உள்ள தலித் குழுக்கள் கலவரத்தில் ஈடுபட்டனர்.

புனேவில் இருக்கும் கடைகள், பொது சொத்துக்கள், கார்கள் என அனைத்து தீவைத்து எரிக்கப்பட்டன.

நிலைமை மிகவும் மோசமாகி, மும்பை நகருக்கும் பரவியது. அங்கும் கலவரம் வெடித்ததைத் தொடர்ந்து, மும்பை - புனே சாலை மூடப்பட்டது.

இந்த கலவரத்தில் இதுவரை எத்தனை பேர் இறந்தார்கள் என்று தெரியவில்லை. இந்நிலையில் தலித்துகள் மீதான தாக்குதலைக் கண்டித்து மகாராஷ்டிராவில் இன்று முழு அடைப்பு போராட்டம் நடைபெற்று வருகிறது.

மேலும் நாளை வரை அங்கு ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

மேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்