பஸ் டிரைவர் 40 கோடிக்கு அதிபதியான கதை: விசாரணையில் திடுக்கிடும் தகவல்கள்

Report Print Santhan in இந்தியா
1049Shares
1049Shares
ibctamil.com

தமிழகத்தில் பள்ளி பேருந்துக்கு டிரைவராக இருந்தவர் தற்போது 40 கோடிக்கு அதிபராக சொகுசு வாழ்க்கை வாழ்ந்துள்ள சம்பவம் வெளிச்சத்திற்கு வந்துள்ளது.

சென்னை கேளம்பாக்கத்தைச் சேர்ந்தவர் வெங்கடரமணன், இவருக்கு மூன்று குழந்தைகள் உள்ளனர், இவரது மனைவி அரசுப் பள்ளியில் பணியாற்றி வருகிறார்.

தனியார் பள்ளிக்கு டிரைவான வெங்கடரமணன் அதற்கிடையில் ரியல் எஸ்டேட் தொழில் செய்து வந்துள்ளார்.

இதில் வருமானம் அதிகம் வருவதைக் கண்ட அவர், டிரைவர் வேலையை உதறி தள்ளிவிட்டு முழுநேரம் ரியல் எஸ்டேட் தொழிலில் இறங்கினார்.

அதன்பின் சென்னையில் ஒரு அலுவலகம் சொகுசு கார் என பந்தாவாக இருந்துள்ளார், அந்த நேரத்தில் பிரதீப்குமார் என்பவர், காஞ்சிபுரம் மாவட்டத்தில் 35 ஏக்கர் நிலம் வாங்கித்தரும்படி வெங்கடரமணனை அணுகியுள்ளார்.

இதில் வெங்கடரமணன் 1.70 கோடி ரூபாயை ஏமாற்றிவிட்டதாக கூறி, பிரதீப் குமார் காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளார். இதையடுத்து பொலிசார் வெங்கடரமணனை பிடிக்க தனிப்படை அமைத்தனர்.

அதற்குள் சென்னையைச் சேர்ந்த மற்றொரு நபரும் அவர் மீது மோசடி புகார் கொடுத்துள்ளார். தொடர்ந்து அவர் மீது மோசடி புகார்கள் வந்ததால், பொலிசார் அவரை கூடிய விரைவில் பிடிப்பதற்கு துரிதமாக செயல்பட்டனர்.

இதை அறிந்த வெங்கடரமணன் வடமாநிலத்திற்கு தப்பிச் சென்றுள்ளார். இதனால் மூன்று வருடமாக வடமாநிலத்தில் அவர் தலைமறைவாக இருந்துள்ளார்.

தொடர்ந்து பொலிசார் அவரை தேடிவந்த வேளையில், அவர் மஹாராஷ்டிராவில் இருக்கும் தகவல் பொலிசாருக்கு தெரியவந்துள்ளது.

உடனடியாக அங்கு விரைந்த பொலிசார் அவர் குறித்து விசாரணை மேற்கொண்ட போது, அங்கு நிறுவனம் ஒன்று நடத்தி வருவதை கண்டுபிடித்துள்ளனர்.

நிறுவனத்திற்கு சென்ற பொலிசார் அவரின் புகைப்படத்தை காண்பித்து கேட்ட போது, அவர்கள் வெங்கடரமணா இருக்கும் இடத்தை கூறியுள்ளனர்.

குறித்த இடத்திற்கு சென்ற பொலிசார் அவரை பொறி வைத்து மடக்கி பிடித்து சென்னைக்கு அழைத்து சென்றனர்.

இது குறித்து பொலிசார் கூறுகையில், இவர் மீது 40 கோடி ரூபாய்க்கு மோசடி புகார்கள் வந்துள்ளன. சென்னையில் ரியல் எஸ்டேட் அலுவலகம் நடத்தியபோது மஹாராஷ்டிராவைச் சேர்ந்த பெண் பணியாற்றியுள்ளார்.

தமிழகத்தில் பொலிசார் இவரை தேடுகின்றனர் என்று தெரிந்தவுடன் அப்பெண் உதவியுடன் மஹாராஷ்டிராவிற்கு சென்றுள்ளார், அங்கு ஒரு கம்பெனியை நடத்தி வந்ததுடன், மும்பையில் இந்திரா ஏர் பிரைவேட் லிமிடெட் என்ற பெயரில் ஹெலிகாப்டரை வாடகைக்கு விட்டுள்ளார்.

இதற்காக 6 கோடி ரூபாய்க்கு ஹெலிகாப்டர் வாங்கியுள்ளார். பொலிசார் தொடர்ந்து தேடி வந்ததால் மும்பை, மஹாராஷ்டிரா என தலைமறைவாக வாழ்ந்து வந்துள்ளார்.

அதுமட்டுமின்றி பொலிசாரிடம் சிக்காமல் இருக்க வேண்டும் என்பதற்காக செயற்கை போனை அவர் பயன்படுத்தியுள்ளார். உடனடியாக அவர் குறித்து தகவல் வந்ததால், அவரை அங்கு சென்று கைது செய்தோம்.

கைது செய்யப்பட்ட அவர் என் மீது புகார் கொடுத்த அனைவருக்கும் நான் கொடுக்க வேண்டிய பணங்களை கொடுத்து விடுகிறேன், எனக்கு கோடிக் கணக்கில் சொத்து இருக்கிறது என்னை விட்டு விடுங்கள் என்று கூறினார்.

இருந்த போதிலும் அவரது சொத்து விவரங்கள் குறித்து தொடர்ந்து விவரங்களை சேகரித்து வருவதாக கூறியுள்ளனர்.

மேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்