செருப்பு தைக்கும் இளைஞர்: ஜனாதிபதி விருது பெற்றவரின் பரிதாப நிலை

Report Print Kabilan in இந்தியா

உத்தரபிரதேசத்தைச் சேர்ந்த இளைஞர் ஒருவர் பத்து ஆண்டுகளுக்கு முன்னர் நதியில் விழுந்த இருவரை காப்பாற்றியதற்காக ஜனாதிபதியிடம் துணிச்சலுக்கான விருதினை பெற்றார்.

ஆனால், அவர் தற்போது வாரம் வெறும் 500 ரூபாய்க்காக காலணி தொழிற்சாலையில் வேலை செய்து வருகிறார்.

ஆக்ராவைச் சேர்ந்த 21 வயது இளைஞர் ஷஹான்ஷா, இவர் தனக்கு 11 வயதாக இருந்தபோது, யமுனா நதியில் விழுந்த இருவரை துணிச்சலுடன் ஆற்றில் குதித்து காப்பாற்றினார்.

இவரின் இந்த செயலுக்காக கடந்த 2009ஆம் ஆண்டு அப்போதைய இந்திய ஜனாதிபதி பிரதீபா பட்டீல், ‘Gallantry Award' எனும் துணிச்சலுக்கான விருதை வழங்கினார். மேலும் சோனியா காந்தி, ஷீலா தீட்சித் போன்ற தலைவர்களும் இவரை பாராட்டினர்.

அத்துடன், ஷஹான்ஷாவின் கல்விச் செலவினை அரசே ஏற்கும் என்றும் அறிவிக்கப்பட்டது, அதன்படி உதவித் தொகையின் மூலமாக 12ஆம் வகுப்பு வரை படித்து முடித்தார்.

அதன் பிறகு இவருக்கு உதவித் தொகை வரவில்லை, இதுகுறித்து டெல்லிக்கு பலமுறை மனு அனுப்பியும் பலனில்லாமல் போனது.

ஆனால் உயர் அதிகாரிகளோ 2014ஆம் ஆண்டு ஏற்பட்ட ஆட்சி மாற்றத்தினால் தங்களால் உதவித்தொகை கொடுக்க முடியவில்லை என்று தெரிவித்துள்ளார்.

இதன் காரணமாக தனது குடும்பத்தின் கஷ்டத்திற்காக மேற்படிப்பை தொடராமல், காலணி தொழிற்சாலை ஒன்றில் வேலைக்கு சேர்ந்தார் ஷஹான்ஷா.

தற்போது இவர் வாரம் ரூ.500 என்ற சொற்ப ஊதியத்திற்காக வேலை செய்து வருகிறார். இது தொடர்பாக ஷஹான்ஷா கூறுகையில், ‘நான் அந்த விருதை பெற்றபோது மிகவும் மகிழ்ச்சியடைந்தேன்.

அது எனது வாழ்வையும், எனது குடும்பத்தினரின் வாழ்வையும் மாற்றும் என்று நினைத்தேன், ஆனால் ஆண்டுகள் கடந்த பிறகு ஒருவரும் எங்களுக்கு உதவ முன்வரவில்லை.

அதனால் தான் எனது படிப்பை நிறுத்திவிட்டு, வேலைக்கு செல்ல ஆரம்பித்தேன். தற்போது குறைந்த ஊதியத்திற்கு வாழ பழகிக் கொண்டேன் என தெரிவித்துள்ளார்.

ஷஹான்ஷா விருதினை பெற்றபோது, தான் ஒரு பொலிஸ் அதிகாரியாக வேண்டும் என்று ஜனாதிபதியிடம் தெரிவித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்