டெல்லியில் பெரும் தீ விபத்து: 17 பேர் உடல் கருகி பலி

Report Print Arbin Arbin in இந்தியா
83Shares

இந்திய தலைநகர் டெல்லியில் உள்ள பாவனா தொழிற்பேட்டை பகுதியில் பட்டாசு கிடங்கில் நேற்று மாலை ஏற்பட்ட மிகப் பெரிய தீ விபத்தில் 17 பேர் உடல் கருகி பலியாகியுள்ளனர்.

இந்த விபத்து தொடர்பில் விசாரணை நடத்த டெல்லி மாநில அரசு உத்தரவிட்டுள்ளது.

டெல்லி பாவனா தொழிற்பேட்டை பகுதியில் உள்ள 2 அடுக்கு தளத்தில் தீ விபத்து ஏற்பட்டதாக சனிக்கிழமை மாலை 6 மணிக்கு தொலைபேசி அழைப்பு வந்தது.

இதையடுத்து, அங்கு 10க்கும் மேற்பட்ட தீ தடுப்பு வாகனங்களுடன் சென்று தீயை அணைக்கும் பணி முடுக்கி விடப்பட்டது. ஏறக்குறைய 3 மணி நேர போராட்டத்துக்குப் பின், தீ கட்டுக்குள் கொண்டு வரப்பட்டது.

குறித்த கட்டிடத்தில் பட்டாசுகள் விற்பனைக்காக வைக்கப்பட்டு இருந்ததாக முதல் கட்ட விசாரணையில் தெரியவந்தது. இந்த தீ விபத்தில் 7 பெண்கள் உள்பட 17 பேர் உயிரிழந்துள்ளனர்.

கட்டிடத்தின் கீழ் தளத்தில் இருந்து ஒருவர் உடலும், முதல் தளத்தில் இருந்து 16 பேரின் உடலும் மீட்கப்பட்டுள்ளன.

ஒருவர் உயிரைக் காப்பாற்றிக் கொள்ள 2-வது தளத்தில் இருந்து குதிக்கும் போது கால் எலும்பு முறிவு ஏற்பட்டது அவரை காயத்துடன் மீட்டு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்துள்ளனர்.

மேலும் காயங்களுடன் 2 பெண்கள் மீட்கப்பட்டனர். இது தொடர்பாக விசாரணை நடந்து வருகிறது.

டெல்லி ரோகினி பகுதி பொலிஸ் துணை ஆணையர் ராஜ்னீஷ் குப்தா கூறுகையில், தீ விபத்து தொடர்பாக வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறோம்.

உயிரிழப்பை ஏற்படுத்துதல், கவனக்குறைவாக இருத்தல், தீ விபத்தை உண்டாக்கும் விதத்தில் பொருட்களை பதுக்கி வைத்தல், உள்ளிட்ட பிரிவுகளில் வழக்குப் பதிவு செய்துள்ளோம் என்றார்.

இதனிடையே குறித்த பட்டாசு கிடங்கை நடத்தி வந்த மனோஜ் ஜெயின், மற்றொருவர் லலித் கோயல் ஆகியோர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

தீ விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தாருக்கு ரூ. 5 லட்சம் நிதி உதவியும், காயம் அடைந்தவர்களுக்கு ரூ. ஓரு லட்சம் நிதி உதவியும் அளிக்கப்படும் என டெல்லி முதல்வர் கேஜ்ரிவால் தெரிவித்துள்ளார்.

மேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்