தாய் கண்முன்னே மகன் கொடூர கொலை: குற்றவாளிக்கு தூக்கு தண்டனை

Report Print Kabilan in இந்தியா

தமிழகத்தில் குடும்ப பிரச்சனை காரணமாக 5 வயது சிறுவனை கொடூரமாக வெட்டிக் கொலை செய்த குற்றவாளிக்கு தூக்கு தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

திருநெல்வேலி மாவட்டம் பேட்டை பகுதியைச் சேர்ந்தவர் இசக்கியப்பன், இவரது மனைவி பிரேமா மற்றும் மகன் தருண் மாதவ்(5). தருண், தனது வீட்டின் அருகில் உள்ள பள்ளியில் UKG படித்து வந்துள்ளார்.

இசக்கியப்பனின் வீட்டின் அருகில் வசித்து வந்தவர் ஆறுமுகம். இவரது மனைவி குடும்ப பிரச்சனை காரணமாக, ஆறுமுகத்தை விட்டு பிரிந்து தனியாக வசித்து வந்தார்.

தனது மனைவி தன்னை விட்டு பிரிந்து சென்றதற்கு, பிரேமா தான் காரணம் என்று நினைத்த ஆறுமுகம், அடிக்கடி அவருடன் தகராறில் ஈடுபட்டு வந்துள்ளார்.

இந்நிலையில், கடந்த 2016ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் 8ஆம் திகதி, பிரேமா தனது மகனை பள்ளியிலிருந்து வீட்டுக்கு அழைத்துக் கொண்டு வந்துள்ளார்.

அப்போது அவரை வழிமறித்த ஆறுமுகம், தகராறில் ஈடுபட்டதோடு தான் வைத்திருந்த அரிவாளால் பிரேமாவின் கண் முன்னாலேயே, அவரது மகன் தருணை கொடூரமாக வெட்டி கொலை செய்தார். அதனைத் தடுக்க வந்த பிரேமாவுக்கும் பலத்த வெட்டுக் காயம் ஏற்பட்டது.

இதனைத் தொடர்ந்து, உயிருக்கு போராடிய பிரேமா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். சம்பவம் நடந்த பின்னர் அங்கிருந்த மக்கள், ஆறுமுகத்தை விரட்டிப் பிடித்து பொலிசில் ஒப்படைத்தனர்.

இந்த வழக்கின் விசாரணை நேற்று நிறைவடைந்தது, அதனைத் தொடர்ந்து, குற்றவாளிக்கு என்ன தண்டனை என்பதை மறுநாள் அறிவிப்பதாக நீதிமன்றம் தெரிவித்தது.

அதன்படி, இன்று குற்றவாளி ஆறுமுகத்திற்கு தூக்கு தண்டனை மற்றும் இசக்கியப்பன் குடும்பத்திற்கு ரு.51,00,000யை வழங்கவேண்டும் என்றும் உத்தரவிட்டுள்ளது.

மேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்