மக்களுக்கு இடைஞ்சல் இல்லாமல் போராட வேண்டும்: கமல்ஹாசன்

Report Print Kabilan in இந்தியா
46Shares

எந்த போராட்டம் நடத்தினாலும் மக்களுக்கு இடைஞ்சல் தரக்கூடாது என அரசியல் கட்சிகளுக்கு, மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

திருச்சியில் மக்கள் நீதி மய்யம் கட்சி பொதுக்கூட்டம் இன்று மாலை நடக்கிறது. இதற்காக, நேற்று பிற்பகல் 1.40 மணிக்கு சென்னை எழும்பூர் ரயில் நிலையத்துக்கு கமல்ஹாசன் வந்தார்.

அப்போது செய்தியாளர்களிடம் பேசிய கமல்ஹாசன், ’ரயில் பயணம் எனக்கு புதிதா என்று கேட்கிறார்கள். அவ்வப்போது நான் ரயிலில் செல்வேன். அது வெளிப்படையாக தெரிந்தால், மக்களுக்கு இடைஞ்சலாக அமையலாம்.

அதனால் அதைப் பற்றி சொல்வதில்லை. இப்போதும் ரயில் நிலையங்களில் ஆங்காங்கே மக்களை சந்திக்க நினைத்தேன். ஆனால் அது மற்ற பயணிகளுக்கு இடைஞ்சலாக அமைந்துவிடும்.

அதனால் தவிர்த்து விட்டேன். மக்களோடு மக்களாக ரயிலில் பயணிக்க விரும்பினேன். அதனாலேயே இப்போது இந்த பயணம்.

தமிழக அரசு சார்பில் நடைபெறும் உண்ணாவிரத போராட்டம், எதிர்க்கட்சிகளின் மறியல் போராட்டங்கள் பற்றி கேட்கிறீர்கள். எல்லாமே மத்திய அரசுக்கு அழுத்தம் தரவே நடைபெறுகிறது.

காவிரி மேலாண்மை வாரியம் அமைக்காமல் தட்டிக்கழித்துக் கொண்டே செல்கிறார்கள் என்ற கோபம் எழுந்தாலும், அதை விதி என ஏற்றுக் கொள்ளாமல், மதியாலோ நீதியாலோ வென்றே ஆக வேண்டும்.

அதே சமயம், மக்களுக்கு இடைஞ்சல் இல்லாமல் போராட்டங்கள் நடத்தப்பட வேண்டும். காவிரி மேலாண்மை வாரியத்திற்காக ஒத்துழையாமை இயக்கம் என்பது வரை போனாலும் தப்பில்லை.

முதலமைச்சர், துணை முதலமைச்சர் ஒரு புறம் உண்ணாவிரதம் இருந்துகொண்டே, இளைஞர்கள் போராட்டம் நடத்த அனுமதி மறுப்பது அரசியல் இடக்கரடக்கல் என்றும், தொட்டிலையும் ஆட்டி பிள்ளையையும் கிள்ளும் வேலை.

ரஜினியை எதிர்ப்பதற்கான சூழ்நிலை ஏற்படாமல் இருந்தால் நல்லது எனக் கூறிய கமல்ஹாசன், அரசியலில் ரஜினியை எதிர்க்கும் நிலை ஏற்பட்டால், எதிர்த்துத்தான் ஆக வேண்டும் என கூறிய கமல், தாழ்த்தப்பட்டோர் வன்கொடுமை தடுப்புச் சட்டத்தில் மாற்றம் செய்யவே கூடாது எனவும் தெரிவித்துள்ளார்.

மேலும், திருச்சியில் பத்திரிக்கையாளர்களை சந்தித்த கமல்ஹாசன் கூறுகையில், ‘உச்சநீதிமன்ற இறுதி தீர்ப்பால் காவிரி மேலாண்மை வாரியம் அமையும் என நம்பிக்கையுடன் இருந்தோம்.

திருச்சி பொதுக்கூட்டத்தில் காவிரி பிரச்சினைக்கான தீர்வு பற்றி எடுத்துரைக்கப்படும் அதிமுகவின் போலியான உண்ணாவிரதத்தால் எதுவும் நடக்கப்போவதில்லை. மத்திய அரசின் எடுபிடிகளை போல் தமிழக அரசு செயல்படுகிறது என தெரிவித்தார்.

மேலும், காவிரி விவகாரத்தில், 2016ம் ஆண்டு நடந்த நாடகமே தற்போதும் நடப்பதாக தோன்றுகிறது. காவிரி மேலாண்மை வாரியம் அமைப்பது மத்திய அரசின் கடமை.

காவிரி விவகாரத்தில், 8-ம் தேதி திரையுலகினர் நடத்தும் போராட்டத்தில் பங்கேற்பேன். அடுத்த 5 மாதங்களில் மக்கள் நீதி மய்யம் கட்சியின் கொள்கைகள் உருவாக்கப்படும் என்றும் தெரிவித்துள்ளார்.

மேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்