தமிழக அரசியலையே புரட்டிப்போடும் நிர்மலா தேவி: காவிரி விவகாரம் மறக்கடிக்கப்பட்டதா?

Report Print Athavan in இந்தியா

விருதுநகர் தனியார் கல்லூரியில் பேராசிரியையாக உள்ள நிர்மலா தேவி, அங்கு படிக்கும் மாணவிகளை மதுரை காமராஜர் பல்கலைக்கழக உயரதிகாரிகளுடன் படுக்கையை பங்கிட்டு கொள்ளுமாறு அழைப்பு விடுத்திருந்த சம்பவம் தற்போது தமிழக அரசியலையே புரட்டிப்போட்டுள்ளது.

காவிரி, நியூட்ரினோ, ஸ்டெர்லைட் போன்ற மக்களின் உணர்வுப் பூர்வமான பிரட்சனைகளை கனநொடியில் காணாமல் போகச் செய்ததோடு இன்றோ நாளையோ கவிழும் என்று எதிர்பார்க்கப்பட்ட தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமியின் ஆட்சியையும் ஸ்திரப்படுத்தியுள்ளது.

பல்கலைகழக துணைவேந்தர் பதவியை கைப்பற்றவே பேராசிரியர் நிர்மலா தேவி பாலியல் ரீதியாக மாணவிகளிடம் செல்போனில் வற்புறுத்தி பேசியுள்ளார். ஆனால் அந்த பதவிகளை குறிவைத்து காத்திருக்கும் மற்றவர்கள் இந்த ஆடியோ டேப்பை வெளியிட்டு அவரை சிக்கவைத்து விட்டார்கள் என ஒரு தரப்பினர் கூறுகின்றனர்.

ஆனால் மற்றொரு தரப்பினரோ தமிழக கவர்னர் பன்வாரிலால் புரோகித்துக்கு இந்த சர்ச்சை ஆடியோ வெளியானதினால் அதிக அவமானம் ஏற்பட்டுள்ளது. இதை ஆளும் கட்சியில் உள்ள முக்கிய புள்ளிகள் சிலர் தான் வேண்டும் என்றே இந்த அவமானத்தை ஏற்படுத்தியுள்ளதாக அவர்கள் கூறுகின்றனர்.

அந்த ஆடியோ பதிவில் உள்ள ”இந்த காரியத்தை உங்க அப்பா அம்மா-விடம் சொல்லிவிட்டே வந்து செய்யுங்கள்” என்றும், கவர்னரை குறிப்பிடும் விதமாக சில நொடிகள் “ அவங்க ரொம்ப ஹையர் ஆபீசர்ஸ், கவர்னர் தாத்தா இல்லை “ போன்ற இந்த வார்த்தைகளிலேயே பேராசிரியையின் நோக்கமும் அதன் பின்னால் இருக்கும் ஆபாசமும் வெட்ட வெளிச்சம் ஆகிவிடுகிறது.

அருப்புக்கோட்டை லோக்கல் போலீஸார் நிர்மலாவை ஏப்ரல் 16ம் தேதி மாலை முதல் 17ம் தேதி மாலை வரை துருவித் துருவி விசாரித்தனர். உதவி பேராசிரியர் உள்ளிட்ட சிலரை அடுத்தகட்ட விசாரணைக்காக அழைக்கத் தயாரானார்கள.

அடுத்தகட்ட ஆதார சேகரிப்பு நடவடிக்கையில் இறங்கப்போக...திடீரென வழக்கை சி.பி.சி.ஐ.டி போலீஸுக்கு மாற்றிவிட்டார் டி.ஜி.பியான ராஜேந்திரன். வழக்கமாக தமிழக அரசு தான் இந்த மாதிரி உத்தரவிடும் ஆனால் இதில் டி.ஜி.பி உத்தரவிட்டதன் பின்ணனியில் சி.பி.சி.ஐ.டி-க்கு வழக்கு சென்றால் ஒரு வருடமோ இரண்டு வருடமோ வழக்கை இழுத்தடிக்கலாம் எனும் நோக்கில் தான் என்கின்றனர்.

இந்த விவகாரம் விஸ்வரூபம் எடுத்த பின்னர் ஓய்வு பெற்ற ஐ.ஏ.எஸ். அதிகாரியான சந்தானம் தலைமையில் ஒரு உயர்மட்ட விசாரணைக்கு உத்தரவிட்டிருக்கிறார் கவர்னர் பன்வாரிலால் புரோகித் இதில் வினோதம் என்னவென்றால் கவர்னர் மீது தான் பரவலாக சந்தேகம் எழுப்படுகிறது.

ஆகவே போலீஸ் வழக்கு பதிவு செய்த பின்னர் அதை குழப்பிவிடும் நோக்கில் இவராக ஒரு அதிகாரியை நியமிப்பது பரவலாக சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

பொதுவாக பல்கலைக்கழக புகார்கள் மற்றும் முறைகேடுகளை சம்பந்தப்பட்ட பல்கலைக் கழகம் குழு அமைத்து தான் விசாரணை நடத்தும்.

அப்படி காமராஜர் பல்கலைக்கழக துணைவேந்தரால் முதலில் அமைக்கப்பட்ட ஐந்து பேர் கொண்ட விசாரணைக்குழுவையும் கலைத்துள்ளார்கள். ஆனால் என்ன காரணத்திற்காக அந்த குழு கலைக்கப்பட்டது என தெரிவிக்கப்படவில்லை.

தமிழகத்தில் நடப்பது எடப்பாடி அரசு அல்ல மோடியின் எடுபிடி அரசு என்ற விமர்சனம் பரவலாகவே தமிழக எதிர்கட்சிகள் தொடர்ந்து முன்வைக்கும் நிலையில், அதை மெய்பிக்கும் வகையிலேயே காவிரி, நீட், உதய் போன்ற திட்டங்களில் மத்திய அரசுடன் அளவுக்கு அதிகமான மென்மைப் போக்கையே எடப்பாடி அரசு கடைப்பிடித்து வந்தது.

இருப்பினும் ஆளும் கட்சியினர் மீது உள்ள அதிகப்படியான ஊழல் குற்றச்சாட்டுகளால் எடப்பாடி அரசைக் கலைத்துவிட்டு மோடியின் மத்திய அரசு கவர்னர் ஆட்சியை தமிழகத்தில் அடுத்த சில மாதங்களில் கொண்டு வர திட்டமிட்டிருக்கிறது.

ஆட்சியின் நாள்கள் தற்போது எண்ணப்படுகின்றன என்று தமிழக உளவுத்துறையினர் கொடுத்த தகவல் மாநில அரசின் உயர்மட்டதில் உள்ளவர்களை அதிரச் செய்தது.

நமக்கு மோடி தயவு இருக்கிறது என்று எதைபற்றியும் கவலைப்படாமல் ஆளுங்கட்சி இருந்த போது கவர்னர் போர்வையில் குடைச்சல் வரத்தொடங்கியது. ஆளும் கட்சிக்கும் கவர்னருக்கும் ஒரு மாதகாலமாக மோதல் நடக்கிறது.

தமிழக அரசின் ஊழல் முறைகேடுகளை அப்படியே டெல்லியில் கவர்னர் சொல்லி விடுகிறார், மாநில அரசின் மீது மக்களுக்கு நல்லெண்ணம் இல்லை அவர்கள் மீது ஊழல் குற்றச்சாட்டு இருக்கிறது என மத்திய அரசிடம் தமிழக ஆளுனர் அறிக்கை அளித்தது போன்றவை எடப்பாடி-பன்னீர் அரசுக்கு கோபத்தை ஏற்படுத்தியவாறு இருந்தது.

இப்படிபட்ட ஒரு இக்கட்டான நேரத்தில் ஆளுங்கட்சி இருந்த சமயத்தில் தான் இப்படி ஒரு ஆடியோ சிக்கியதும் பொலிஸ் துணையுடன் லீக் செய்தது என்கிறது ஒரு தரப்பு. காரணம் அந்த ஆடியோவில் சில இடங்கள் கவனமாக மியூட் செய்யப்பட்டுள்ளது ஆனால் கவர்னரைப் பற்றி வரும் வார்த்தைகள் தெளிவாக உள்ளன.

எனவே உண்மையில் அந்த ஆடியோவை சாதாரண ஒருத்தர் வெளியிட்டு இருந்தால் அதில் மியூட் செய்யப்பட்டிருக்காது என கூறப்படுகிறது.

இவ்வளவு காலம் மத்திய அரசை எதிர்த்து பேசாத அமைச்சர் ஜெயக்குமார் காவிரி விவகாரத்தில் “ ஸ்கீம் “ என்றால் என்ன என்று அர்த்தம் தெரியவில்லை என்றால் டிக்ஸ்னரியை பார்க்க வேண்டியது தானே என வழக்கத்துக்கு மாறாக மத்திய அரசை கடுமையாக விமர்சித்தார்.

இன்று செய்தியாளர்களிடம் பேசும் போதும் பேராசிரியை ஆடியோ விவகாரத்தில் சிபிஐ விசாரணை தேவைப்பட்டால் அதில் ஆட்சேபமில்லை; ஆனால் மாநில காவல்துறையே சிறப்பாக விசாரணை நடத்தி வருகிறது. சிபிசிஐடி விசாரணை உண்மை நிலையை வெளிப்படுத்தும் என அமைச்சர் ஜெயக்குமார் கூறியுள்ளார்.

தற்போதைய நிலவரப்படி தமிழக அரசியல் களமே பாலியல் ஆடியோ வெளியாவதற்கு முன் மற்றும் பின் என தலைகீழாக மாறிவிட்டது.

பாலியல் ஆடியோ வெளியாவதற்கு முன்பாக மத்திய அரசின் திட்டங்களான நியூட்டிரினோ, ஹைட்ரோ கார்பன், கெயில் திட்டம்.. போன்றவற்றை அசுர வேகத்தில் மத்திய அரசு நிறைவேற்ற மறைமுக ஆதரவை தமிழக அரசு வழங்கி வந்தது. இருந்தாலும், தமிழக அரசுக்குத் தரவேண்டிய மத்திய நிதியைச் சரிவர ஒதுக்கவில்லை என்பதில் ஆரம்பித்து பலவித கோபங்கள் இருந்தன.

ஆனால் பாலியல் ஆடியோ வெளியான பின்னர் இப்போதைய தமிழக அரசியல் சூழ்நிலையில், அ.தி.மு.க. ஆட்சியைக் கலைத்தால்... ``காவிரிப் பிரச்னையில் குரல்கொடுத்ததால், கலைத்தனர்" என்கிற அவச்சொல்லுக்கு மோடி அரசு ஆளாகட்டும். இரண்டு... பாலியல் புகாரில் கவர்னர் சிக்கியுள்ளார். இந்த விஷயம் பெரிதாகும். கிண்டி ராஜ்பவனில் முடங்கிக்கிடக்க வேண்டும்.

இதை எதிர்பார்த்து, கவர்னரை மிரட்டும் விதமாக, சம்பந்தப்பட்ட உதவி பேராசிரியை நிர்மலா மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் எனத் தமிழக அரசு தரப்பில் தெரிவித்துள்ளது. விசாரணையையும் தீவிரமாக முடுக்கிவிட்டுள்ளது.

எதிர்கட்சியான தி.மு.க காவிரி மீட்பு பயணம் என்ற ஒன்றை அறிவித்து அதை நிறைவு செய்த மறுதினம் கவர்னரை சந்தித்து காவிரி மேலான்மை வாரியம் அமைக்க கோரி பிரதமர் மோடியிடம் பேச நேரம் ஒதுக்கி தர கேட்டார் . கவர்னரும் அதற்கு ஒப்புதல் தெரிவித்தார் என செய்தி வெளியாகின.

இந்நிலையில் பெண் செய்தியாளரின் கண்ணத்தை ஒழுக்கமின்றி தொட்ட விவாகரத்தில் சென்னை சைதாப்பேட்டையில் இருந்து திமுக எம்எல்ஏ மா.சுப்பிரமணியன் தலைமையில் அக்கட்சியினர் ஆளுநர் மாளிகையை முற்றுகையிட சென்றனர். இதையடுத்து அவர்களை தடுத்து நிறுத்திய போலீசார் அவர்களை கைது செய்தனர்.

இதனால் காவிரி விவகாரம் முற்றிலும் மறக்கடிக்கப்பட்டுவிட்டன. தினம் தினம் எடப்பாடி அரசை விமர்சித்தவர்களும் இப்போது ஆளுனரை விமர்சிக்க தொடங்கிவிட்டனர்.

தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் பெண் செய்தியாளரின் கண்ணத்தை ஒழுக்கமின்றி தொட்ட விவாகரத்தில் மன்னிப்பு போதாது ஆளுநர் பதவி விலகும் வரை போராட்டம் தொடரும் என திமுக செயல் தலைவர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார். இந்நிலையில் தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் நாளை டெல்லி செல்கிறார். தொடரும் சர்ச்சைகள் மற்றும் எதிர்ப்புகளுக்கு நடுவே ஆளுநர் டெல்லி செல்வது அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

வரும் நாட்களில் தமிழக அரசியல் களம் மேலும் குழப்பமடையும் சூழல் உள்ளது.

மேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்