60க்கும் மேற்பட்ட புகைப்படங்கள்....என் உயிருக்கு ஆபத்து: வழக்கறிஞரிடம் தெரிவித்த நிர்மலா தேவி

Report Print Deepthi Deepthi in இந்தியா

பேராசிரியை நிர்மலா தேவியின் உயிருக்கு ஆபத்து ஏற்படலாம் என பாமக நிறுவனர் ராமதாஸ் குற்றம்சாட்டியுள்ளார்.

இதுதொடர்பாக அவர் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில், கைது செய்யப்பட்ட பேராசிரியை நிர்மலா தேவியிடமிருந்து 3 செல்பேசிகள் கைப்பற்றப்பட்டுள்ளன. அவற்றிலிருந்து பல்வேறு பெரிய மனிதர்களை தொடர்பு கொண்டதற்கான ஆதாரங்களும், 60-க்கும் மேற்பட்ட புகைப்படங்களும் கைப்பற்றப்பட்டுள்ளன.

இந்த விவகாரத்தில் தொடர்புடைய பல பெரிய மனிதர்களின் பெயர்களை பட்டியலிட்ட நிர்மலா தேவி, அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க காவல்துறைக்கு துணிச்சல் உண்டா? என்று சவால் விடுத்துள்ளார். அதைத்தொடர்ந்து தான் நிர்மலாதேவி மீதான வழக்கு விசாரணையை சிபிசிஐடிக்கு மாற்றி காவல்துறை தலைமை இயக்குனர் ஆணையிட்டுள்ளார்.

இது குற்றவாளிகளை காப்பாற்றும் முயற்சியே தவிர, அவர்களை தண்டிப்பதற்கான நடவடிக்கை அல்ல. இந்த விவகாரத்தில் குறிப்பிடப்பட வேண்டிய இன்னொரு அம்சம் துணைவேந்தர் முதல் ஆளுநர் வரை அனைவருமே, இந்த அவலச் செயலை நிர்மலாதேவி மட்டுமே செய்ததாகவும், அதில் வேறு யாருக்கும் சம்பந்தமில்லை என்பது போன்றும் ஒரு தோற்றத்தை ஏற்படுத்த முயலுகின்றனர். இது உண்மை அல்ல.

காமராசர் பல்கலைக்கழகத்தின் உயர்பதவியில் உள்ள ஒருவர் இந்த விஷயத்தில் மோசமானவர் என்று பல்கலைக்கழக பேராசிரியர்களே குற்றம் சாட்டுகின்றனர். உண்மை அவ்வாறு இருக்கும்போது நிர்மலா தேவியை பலிகடாவாக்கி விட்டு, அதிகார உச்சியில் உள்ள பெரிய மனிதர்களைக் காப்பாற்றும் சதி தான் இதுவாகும்.

இந்த சதித்திட்டத்தில் நிர்மலாதேவியின் உயிருக்குக்கூட ஆபத்து ஏற்படலாம்.கல்வி கற்பதற்காக வந்த மாணவிகளை காமத்திற்காக பயன்படுத்திக் கொள்ள துடித்த காட்டுமிராண்டிகள் யாராக இருந்தாலும் அவர்களை தண்டிக்காமல் தப்பவிடக்கூடாது.

இவ்விஷயத்தில் தம் மீது தவறு இல்லையெனில் அதை நிரூபிப்பதற்கான முயற்சிகளில் தான் ஆளுநர் ஈடுபட வேண்டுமே தவிர, இல்லாத அதிகாரத்தைப் பயன்படுத்தி குற்றவாளிகளைக் காப்பாற்றுவதற்கான நடவடிக்கைகளில் ஒருபோதும் ஈடுபடக்கூடாது.

இந்த வழக்கில் பல்கலைக்கழகவேந்தர், துணைவேந்தர் எந்த வகையிலும் தலையிடக்கூடாது. மாறாக இந்த வழக்கை சிபிஐ விசாரணைக்கு மாற்றி அரசு ஆணையிட வேண்டும்,’’ எனக் கூறியுள்ளார்.

இதற்கிடையில், மதுரை மத்தியச் சிறையில் அடைக்கப்பட்டுள்ள நிர்மலா தேவியை அவரது வழக்கறிஞர் பாலசுப்ரமணியன் இன்று சந்தித்துப் பேசினார்.

இந்தச் சந்திப்புக்குப் பின் செய்தியார்களிடம் பேசிய வழக்கறிஞர் பாலசுப்ரமணியன், ``தனது உயிருக்கு ஆபத்து ஏற்படுகிற வகையில் சிறைக்குள் அசாதாரண சூழ்நிலை நிலவுவதாக நிர்மலா தேவி கூறினார். அவருக்குத் தனி அறை கொடுக்கவில்லை, நாங்களும் கேட்கவில்லை.

ஆடியோவில் பேசியது தான்தான் என்றும், ஆனால், வெளிவந்த ஆடியோ எடிட் செய்யப்பட்டு வெளியிடப்பட்டுள்ளதாகவும் அவர் கூறினார்.

அருப்புக்கோட்டையில் உள்ள கல்வி நிறுவனங்களுக்கிடையே உள்ள போட்டியின் காரணமாகத் தம்மை வைத்து தேவாங்கர் கல்லூரிக்கு அவப்பெயர் ஏற்படுத்தும் முயற்சி நடைபெற்று வருவதாகவும் நிர்மலா தேவி என்னிடம் கூறினார்.

சிறைக்குள் அதிகாரிகள் அருகிலேயே இருந்ததால் நீண்ட நேரம் பேச முடியவில்லை. அடுத்து, சி.பி.சி.ஐ.டி வழக்கை விசாரிக்கும்போது, மீண்டும் நிர்மலாதேவியைச் சந்தித்துப் பேசுவேன் என்று கூறியுள்ளார்.

மேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்