ரஷ்யாவில் தமிழக மாணவர்கள் கருங்கடலில் குளிக்க சென்ற இடத்தில் அலையில் சிக்கி உயிரிழந்துள்ளது சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
திருவள்ளூர் மாவட்டம் அத்திப்பட்டு பகுதியை சேர்ந்தவ ராம்குமார் - பரமேஸ்வரி தம்பதியினரின் ஒரே மகன் ஜெய்வந்த்.
ரஷ்யாவின் சிம்பரபூல் பகுதியில் உள்ள கிருமியா பல்கலைக்கழகத்தில் மருத்துவ படிப்பான எம்டி படிப்பில் முதலாம் ஆண்டு படித்து வருகிறார், இந்த மாணவனோடு சேர்ந்து காரைக்குடியை சேர்ந்த நவீன் கிறிஸ்டோபர் என்ற மாணவனும் ரஷ்யாவில் படித்து வருகிறார்.
3 நாட்கள் விடுமுறை என்பதால், ஜெய்வந்த், தமது நண்பர் நவீன் உட்பட 3 பேர் அங்குள்ள கருங்கடலில் குளித்துள்ளனர். நண்பர் நவீன் கடலின் சுழலில் சிக்கிக்கொள்ள அவரை காப்பாற்றும் முயற்சியில் ஈடுபட்ட ஜெய்வந்தும் நீரில் மூழ்கி இருவரும் உயிரிழந்தனர்.
நேற்று காலை 11 மணிக்கு நடந்த சம்பவத்தை மாலை 6 மணிக்கு தான் பல்கலைக்கழகம் ஜெய்வந்தின் பெற்றோருக்கு தகவல் அளித்துள்ளது.
மருத்துவராகி தாய் நாட்டிற்கு வருவான் என எதிர்பார்த்த மகன், மருத்துவ உடற்கூறியல் செய்யப்பட்டு வரும் செய்தி கேட்டு அதிர்ச்சியில் ஆழ்ந்துள்ளார் தாய் பரமேஸ்வரி. ஒரே மகனை பறிகொடுத்துள்ள அந்த குடும்பமே பெரும் சோகத்தில் ஆழ்ந்துள்ளது.
இறைவன் அவனுக்கு விதித்த விதி அவ்வளவுதான் என்று நினைத்து என் மனதை தேற்றிக்கொண்டிருக்கிறேன் என கண்ணீர் மல்க நவீனின் தந்தை கூறியுள்ளார்.
ரஷ்ய தூதரக அதிகாரிகளிடமும், வெளியுறவு துறை அமைச்சர் சுஷ்மா சுவராஜின் ட்விட்டரிலும் தகவல் அளித்துள்ளதாகவும் ஆனால் தமது மகனின் சடலத்தை தாய் நாடு கொண்டு வர யாரும் உதவ முன் வரவில்லை என்று உயிரிழந்த மாணவன் ஜெய்வந்தின் தந்தை ராம்குமார் தெரிவித்துள்ளார்.