பட்டப்பகலில் ஓட ஓட வெட்டிக்கொலை செய்யப்பட்ட நபர்! பேனரால் வந்த விபரீதம்

Report Print Deepthi Deepthi in இந்தியா

சென்னை தேனாம்பேட்டை பகுதியில் திருமண பேனர் வைத்த விவகாரத்தில் நபர் ஒருவர் பட்டப்பகலில் 8 பேர் கொண்ட கும்பலால் ஓட ஓட விரட்டி கொலைசெய்யப்பட்டுள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

சவுண்ட் சர்வீஸ் வைத்து நடத்தி வரும் மதன் என்பவர், கடந்த வாரம் மற்றொரு பகுதியைச் சேர்ந்த தனது நண்பர் மார்ட்டினின் திருமணத்துக்கு வாழ்த்து தெரிவிக்கும் பேனர் ஒன்றை அங்கு வைத்துள்ளார்.

அந்தப் பகுதியில் அரசியல் மற்றும் சினிமா ரசிகர் மன்ற பேனர்கள் மட்டுமே வைக்க வேண்டும் என்பது அந்த பகுதியை சேர்ந்தவர்கள் பின்பற்றும் நடைமுறை என்று கூறப்படுகிறது.

இதற்கு மாறாக மதன், திருமண வாழ்த்து பேனர் வைத்ததால், சத்தியமூர்த்தி நகரைச் சேர்ந்த குமரேசன் உள்ளிட்ட சிலர் பேனரை அகற்றுமாறு கூறியுள்ளனர்.

இதுகுறித்து நேற்றிரவு பிரச்சினை எழுந்தபோது, இன்று காலை பேனரை அகற்றிவிடுவதாக மதன் உறுதியளித்ததாக சொல்லப்படுகிறது.

ஆனால் பேனர் அகற்றப்படவில்லை. இதனால் குமரேசன் தரப்பினர், பேனர் வைத்த மதனை செல்போன் மூலம் வீட்டுக்கு வெளியே அழைத்து, கற்களை வீசி தாக்கியுள்ளனர்.

இதில் தப்பி ஓட முயன்ற மதனை, அவர்கள் ஓட ஓட விரட்டி திருமண பேனருக்குக் கீழேயே வெட்டிக் கொன்றதாக அப்பகுதி மக்கள் தெரிவித்துள்ளனர்.

மதனை வெட்டிக் கொன்ற கும்பல், தலைமறைவாகியுள்ளது. மதன் வெட்டிக் கொல்லப்பட்டதை அறிந்த அவரது நண்பர்கள், குமரேசன் தரப்பினர் விட்டுச் சென்ற வாகனங்களை அடித்து நொறுக்க முற்பட்டனர்.

இதற்கிடையில், இந்த சம்பவத்தில் ஈடுபட்ட 8 பேர் கொண்ட கும்பலில் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிசார் தெரிவித்துள்ளனர்.

மேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்