பலரின் வயிற்றை குளிர வைத்த நான் இன்று வயிறு எரிந்து நிற்கிறேன்: கண்கலங்கும் மாற்றுத்திறனாளி

Report Print Santhan in இந்தியா
691Shares
691Shares
lankasrimarket.com

தமிழகத்தில் பார்வையற்ற மாற்றுத்திறனாளி நடத்தி வந்த இளநீர் கடை அடையாளம் தெரியாத நபர்களால் தீ வைத்து எரிந்து நாசம் செய்யப்பட்டதால், அவர் கண்ணீர் விட்டு கலங்கியுள்ளார்.

மதுரை ஊமச்சிகுளம் பகுதியைச் சேர்ந்தவர் ராஜா. சுமார் 15 ஆண்டுகளுக்கு முன் தனது பார்வையை இழந்த இவர் இளநீர் கடை நடத்திவந்துள்ளார்.

இவரது இளநீர் கடை புதுநத்தம் சாலையில் அரசு மருத்துவமனை ஊழியர் குடியிருப்பு முன்பாக சாலையோரத்தில் உள்ளது. கண்கள் இல்லை என்றாலும் இளநீரை எளிமையாக வெட்டும் பழக்கம் கொண்ட இவர் யாருடைய உதவியும் இன்றி இளநீர் கடையை நடத்தி வந்தார்.

இந்நிலையில், கடந்த செவ்வாய்க்கிழமை இரவு 500-க்கும் மேற்பட்ட இளநீர் காய்களை இறக்கி வைத்துவிட்டு அதிகாலை வீட்டுக்குச் சென்றுள்ளார்.

அதன் பின் யாரோ அடையாளம் தெரியாத நபர்கள் இளநீர் கடைக்கு தீவைத்துள்ளனர். இதில் கடையில் வைத்திருந்த 500-க்கும் மேற்பட்ட இளநீர் காய்கள், தென்னங்கூரையால் அமைக்கப்பட்ட கடை ஆகியவை தீயில் முழுவதும் எரிந்து நாசமானது.

இதனால் அவருக்கு 50 ஆயிரத்திற்கும் மேல் சேதம் ஏற்பட்டுள்ளது. காலையில் கடைக்கு வந்த ராஜா, எரிந்துகிடந்த சம்பவத்தை அறிந்து கண் கலங்கினார்.

இது குறித்து காவல்நிலையத்தில் புகார் தெரிவித்துள்ள இவர், எனக்கு இளநீர் வியாபாரம் தொழிலைத் தவிர வேறெதுவும் தெரியாது, சமூக விரோதிகள் என் கடையில் தீ வைக்கவில்லை என் வயிற்றில் தீயை வைத்துவிட்டனர்.

பலரின் வயிற்றை குளிரவைத்த நான் வயிறு எரிந்து நிற்கிறேன். இந்த இளநீர் கடைவருமானத்தை வைத்துதான் என் குடும்பத்தைக் காப்பாற்றிவருகிறேன். எனவே, எனது வாழ்வாதாரத்தைக் காப்பாற்றும் வகையில் மாவட்ட ஆட்சியர் உதவி செய்ய வேண்டும் என கூறியுள்ளார்.

மேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்