விரைவாக பரவும் நிபா வைரஸ்: இரண்டு வாரங்களில் 15 பேர் பலி

Report Print Kabilan in இந்தியா

இந்தியாவின் கேரள மாநிலத்தில், நிபா வைரஸ் தாக்கி இதுவரை 15 பேர் உயிரிழந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கேரள மாநிலம் கோழிக்கோடு மாவட்டத்தில் முகமது ஸாலிஹ், அவரின் சகோதரர் முகமது ஸாபித் மற்றும் இவர்களின் உறவினர் மரியம் ஆகியோர் அடுத்தடுத்து மர்மமான முறையில் இறந்தனர்.

மருத்துவர்கள் அவர்களை பரிசோதித்தபோது நிபா வைரஸ் தாக்கியிருந்தது தெரிய வந்தது. முகமது ஸாபித்தை பராமரித்த செயவிலியர் லினி(31) இந்த வைரஸ் தாக்குதலால் இறந்தார். இந்நிலையில், உயிரிழந்த முகமது ஸாலிஹ் சகோதர்களின் தந்தை மூஸக்கையும் நிபா வைரஸ் தொற்றியுள்ளது.

இதனைத் தொடர்ந்து, முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக லினியின் உடல் அவரின் உறவினர்களிடம் ஒப்படைக்கப்படவில்லை.

இதேபோல, பெரம்பாரா கிராமத்தில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 3 பேர் மற்றும் மலப்புரம் மாவட்டத்தில் 7 பேர் என கடந்த இரண்டு வாரங்களில் மட்டும் நிபா வைரஸ் தாக்குதலினால் 15 பேர் உயிரிழந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

நிபா வைரஸ், வௌவ்வால்களிடமிருந்து மிருகங்களுக்கும், மனிதர்களுக்கும் பரவுகிறது. அத்துடன், இந்த வைரஸால் தாக்கப்பட்ட மிருகங்கள், பறவைகளிடம் இருந்து மனிதர்களுக்கு இது எளிதாக பரவுவதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.

மேலும், வௌவ்வால் கடித்த பழங்களைச் சாப்பிடக் கூடாது என்றும், மாம்பழங்களை நன்கு கழுவி சாப்பிட வேண்டும் என்று மருத்துவர்கள் எச்சரிக்கை செய்துள்ளனர்.

இந்த வைரஸ் தாக்கினால் முதலில் லேசான காய்ச்சல் ஏற்படும். பிறகு, மூச்சு விடுவதில் சிரமம், கடினமான தலைவலி ஏற்படும். பின்னர் அந்த தலைவலி மூளைக்காய்ச்சலாக மாறும். இந்த வைரஸ் தாக்கினால் 75 சதவிதம் இறப்பு உறுதி என்று கூறப்படுகிறது.

இதுதொடர்பாக கோழிக்கோடு மாவட்ட தலைமை சுகாதார அலுவலர் ஜெயஸ்ரீ கூறுகையில், ‘பெரம்பாரா கிராமத்தில் ஒரே குடும்பத்தை சேர்ந்த மூன்று பேர் இறந்து போனார்கள். அவர்களின் ரத்த மாதிரியில் நிபா வைரஸ் இருப்பதை, புனேவில் உள்ள தேசிய வைரலாஜி நிறுவனம் உறுதி செய்துள்ளது.

தகுந்த பாதுகாப்புகளுடன் நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்குமாறு மருத்துவர்கள், செவிலியர்களை அறிவுறுத்தியுள்ளோம்’ என தெரிவித்துள்ளார்.

மேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்