தங்க லாபம்: தமிழக மக்களின் உயிரை குடித்த ஸ்டெர்லைட் பற்றிய அதிர்ச்சி ரிப்போர்ட்

Report Print Deepthi Deepthi in இந்தியா

ஸ்டெர்லைட் ஆலை இண்டஸ்ட்ரீஸ் என்பது தமிழ்நாட்டின் தூத்துக்குடி மாவட்டத்தின் மீளவிட்டான் பகுதியில் அமைத்துள்ள தாமிர உருக்கு தொழிற்சாலை ஆகும்.

இதன் உரிமையாளர் அனில் அகர்வால் லண்டனை தலைமையிடமாக கொண்ட வேதாந்தா ரிசேர்ஸஸ் என்ற நிறுவனத்தின் தலைவர் ஆவார்.

வேதாந்தா நிறுவனத்திற்கு அவுஸ்திரேலியா உள்ளிட்ட பல நாடுகளில் தாமிரத்தாதுக்களை வெட்டி எடுக்கும் சுரங்கங்கள் இருக்கின்றன.

அனுமதி வழங்கிய தமிழ்நாடு

1995 ஆம் ஆண்டில் அனில் அகர்வால் இந்தியாவில் ஸ்டெர்லைட் தாமிர உருக்கு ஆலையை தொடங்க திட்டமிட்டது முதலில் குஜராத்தில் தான். இத்தகைய ஆலைக்கு குஜராத் மாநிலத்தில் அனுமதி கிடைக்காததையடுத்து பல மாநிலங்களில் ஆலை அமைக்க அனுமதி கோரப்பட்டது.

இறுதியாக 30.10.1994-ல் தமிழ்நாட்டின் தூத்துக்குடியில் மாவட்டத்தில் ஸ்டெர்லைட் ஆலை அமைக்க தமிழக அரசு அனுமதி அளித்தது.

கிடைக்கும் லாபம்

தூத்துக்குடி துறைமுக நகரம் என்பதால், அவுஸ்திரேலியாவில் வெட்டி எடுக்கப்படும் தாமிரங்களை எளிதாக கப்பல்கள் மூலம் கொண்டு வந்து விடலாம். இத்தகைய ஆலையில் தாமிரத்தை உருக்கி தகடுகளாக மாற்றும் போது ‘ பை ப்ராடக்ட் ‘ என்னும் முறையில் கிடைக்கக் கூடிய தங்கம், சல்ப்யூரிக் அமிலம், பாஸ்ஃபோரிக் அமிலம் ஆகியவற்றின் மூலமும் அதிக லாபம் ஈட்ட முடியும் .

மக்களின் போராட்டமும், வழக்கும்

ஸ்டெர்லைட் ஆலையில் இருந்து கந்தக-டை-ஆக்சைடுடன் நச்சு வாயுக்களும் வெளியாகி அப்பகுதியை சேர்ந்த மக்களுக்கு மூச்சு திணறல், தொண்டை மற்றும் கண் எரிச்சல் ஏற்பட்டது.

இதையடுத்து மக்கள் ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக போராட்டத்தில் ஈடுபட்டத் தொடங்கினர். மேலும், சமூக ஆர்வலர்கள் மக்களின் வாழ்வாதாரத்தையும், மன்னார் வளைகுடா சுற்றுச்சூழல் பாதிப்புகளையும் மேற்கோள்காட்டி ஆலைக்கு எதிராக வழக்குகளை தொடர்ந்தனர்.

சென்னை உயர் நீதிமன்றத்தில் ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக தொடரப்பட்ட வழக்கில் ஆலையை இயக்க தடை விதிக்கப்பட்டிருந்தது. இதை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் செய்யப்பட்ட மேல்முறையீடு வழக்கில், சுற்றுச்சூழல் பாதுகாப்பிற்காக ரூ.100 கோடியை நஷ்ட ஈடாக செலுத்த வேண்டும் என்ற நிபந்தனையுடன் 2013 ஏப்ரல் மாதத்தில் அனுமதி அளிக்கப்பட்டது.

இதற்கிடையில், மக்களுக்கு பாதிப்பை ஏற்படுத்துவதாகக் கூறி தமிழ்நாடு மாசுக்கட்டுப்பாடு வாரியம் ஸ்டெர்லைட் ஆலையை இழுத்து மூடியது. இதற்கு எதிராக ஸ்டெர்லைட் ஆலை வழக்கு தொடர்ந்தது. இதை விசாரித்த டெல்லி தேசிய பசுமை தீர்ப்பாயம் ஸ்டெர்லைட் ஆலை இயங்க அனுமதி அளித்தது.

ஸ்டெர்லைட் ஆலையில் இருந்து விஷ வாயு வெளியானதற்கு எத்தகைய ஆதாரங்களும் இல்லை, பல்வேறு தொழிற்சாலைகள் உள்ள இடத்தில் ஸ்டெர்லைட் ஆலையும் இருப்பதால் வாயு கசிவு குறிப்பிட்ட ஆலையில் இருந்து வந்தது என்று உறுதிப்படுத்த முடியாது என தீர்ப்பளித்தது தேசிய பசுமை தீர்ப்பாயம்.

2013-ல் ஸ்டெர்லைட் ஆலை இயங்க அனுமதி அளித்த தேசிய பசுமை தீர்ப்பாயத்தின் முடிவை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் தமிழ்நாடு மாசுக்கட்டுப்பாடு வாரியம் மேல்முறையீடு செய்தது. இந்த மனுவை விசாரித்த நீதிபதிகள் பட்நாயக், கெஹர் ஆகியோர் ஸ்டெர்லைட் ஆலைக்கு தடை விதிக்க மறுத்துவிட்டனர்.

இரண்டாவது ஆலையின் விரிவாக்கம்

20 ஆண்டுகள் இயங்கிவரும் இந்த ஆலை, தனது இரண்டாவது ஆலையின் விரிவாக்கத்திற்கு 640 ஏக்கர் நிலத்தை தமிழ்நாடு சிப்காட் மூலம் கையகப்படுத்தியுள்ளதாகக் கூறி, அதற்கு எதிர்ப்பு தெரிவித்த தூத்துக்குடி சுற்றுவட்டாரப் பகுதியை சேர்ந்த மக்கள் தொடர் போரட்டத்தில் இறங்கினர்.

100 நாட்கள் தொடர்ந்த இந்த போராட்டம் நேற்று உச்சகட்டத்தை எட்டியதில், பொலிசாரின் துப்பாக்கி சூட்டிற்கு 11 பேர் இரையாகினர் .

மேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers

loading...