தென் மாவட்டங்களை உலுக்கிய காவல்துறையின் துப்பாக்கிச்சூடு சம்பவங்கள்: ஒரு பிளாஷ்பேக்

Report Print Arbin Arbin in இந்தியா

வறட்சியும் வேலைவாய்ப்பின்மையும் வாட்டும் தென்மாவட்டங்களில் வன்முறைகள் தொடர்ந்து அரங்கேறி வருகின்றன.

தூத்துக்குடி மாவட்டத்தில் நேற்று நடந்த துப்பாக்கிசூடு 3வது முக்கிய சம்பவமாக அரங்கேறி உள்ளது.

வறட்சி மற்றும் இளைஞர்களுக்கான வேலைவாய்ப்பின்மை காரணமாக தென்மாவட்டங்களில் அடிக்கடி வன்முறைகள் நடப்பதுண்டு.

அத்துடன் சாதி மோதல்கள் அடிக்கடி நடைபெறும். இதனால் ஏற்படும் கலவரங்களும் தென்மாவட்டங்களில் அதிகம்.

தொழிலாளர்களின், பொதுமக்களின் போராட்டங்களை அடக்க காவல்துறை நடத்தும் அடக்குமுறைகளும் கலவரத்திற்கு இழுத்து செல்வதுண்டு.

இந்த நிலையில், நேற்று நடந்த தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு சம்பவம் தென் மாவட்டங்களில் அரங்கேறிய 3வது முக்கிய சம்பவம் என கூறப்படுகிறது.

கடந்த 1999 ஆம் ஆண்டு ஜூலை 23 அன்று ஊதிய உயர்வு கேட்டு நெல்லையில் மாஞ்சோலை தேயிலை தோட்ட தொழிலாளர்கள் பேரணி நடத்தினர்.

அப்போது, காவல் துறை தடியடி நடத்தினர். இதையடுத்து தப்பிக்க வழிதேடி பெருவாரியானோர் தாமிரபரணி ஆற்றுக்குள் குதித்து தப்பிக்க முயன்றதில் ஒன்றரை வயது குழந்தை விக்னேஷ் உட்பட பதினேழு பேர் மரணமடைந்தனர்.

அரசு அதிகாரிகள், மற்றும் பத்திரிகையாளர் உட்பட 500 பேருக்கும் மேல் இதில் காயமடைந்தனர்.

கடந்த 2011ம்ஆண்டு செப்டம்பர் 11ம் திகதி இம்மானுவேல் குருபூஜையின் போது பரமக்குடியில் வன்முறை வெடித்தது.

அப்போது போராட்டக்காரர்கள் மீது நடத்தப்பட்ட துப்பாக்கிச் சூட்டில் 6 பேர் உயிரிழந்தனர்.

இந்த நிலையில், தூத்துக்குடியில் ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக நேற்று நடைபெற்ற போராட்டத்தின்போது பொலிசார் துப்பாக்கிச்சூடு நடத்தினர்.

கண்ணீர் புகைக்குண்டுகளை வீசியும் தடியடியும் நடத்தினர். இதில் 10ம் வகுப்பு மாணவி உட்பட 13 பேர் கொல்லப்பட்டனர்.

இந்தியாவையே உலுக்கிய கூடங்குளம் போராட்டமும் நெல்லை மாவட்டத்தில் மாதக்கணக்கில் நடத்தப்பட்டு தடியடி உள்ளிட்ட சம்பவங்களை எதிர்கொண்டது குறிப்பிடத்தக்கது.

மேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers

loading...