என் மனைவியின் வயிற்றில் பொலிசார் அடித்த அடி! தூத்துக்குடியில் கண்ணீர் விட்ட கணவர்

Report Print Santhan in இந்தியா

தமிழகத்தில் போராட்டத்தின் போது பொலிசார் என் மனைவியின் வயிற்றில் பலமாக அடித்ததாகாவும், இதனால் அவள் வயிற்றில் ரத்தம் பீறிட்டு வந்தது என்று கணவர் கண்ணீர் மல்க கூறியுள்ளார்.

தூத்துக்குடி மாவட்டத்தில் இயங்கி வரும் ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக பொதுமக்கள் நடத்திய போராட்டம் கலவரமாக மாறியது.

இதனால் தற்போது வரை உறுதியான தகவலின் படி 13 பேர் பலியாகியிருப்பதாகவும், நூற்றுக்கும் மேற்பட்டோர் காயமடைந்திருப்பதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

அமைதியான முறையில் கடந்த 99 நாட்கள் நடந்த போராட்டம் 100-வது நாளின் போது மட்டும் எப்படி கலவரமாக மாறும், அதற்கும் காரணம் பொலிசார் தான் என்று கூறப்படுகிறது.

ஏனெனில் தூத்துக்குடியில் பொலிசார் அவர்களே சில பகுதிகளில் தீ வைத்தது தொடர்பான வீடியோக்கள் வெளியாகின. ஒரு சில தாய்மார்களும் தங்கள் பிள்ளைகளின் நிலை என்ன என்பது குறித்து தெரியாமல், அங்கிருக்கும் பொலிஸ் அதிகாரிகள் கெஞ்சி வருகின்றனர்.

இது இப்படி இருக்கையில், இந்த போராட்டத்தில் கலந்து கொண்ட என் மனைவி உயிருக்கு போராடி வருவதாக பாக்கியராஜ் என்பவர் கண்ணீர் மல்க கூறியுள்ளார்.

அவர், நேற்று முன் தினம் தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தை முற்றுகையிடுவதற்காக அமைதியான முறையில் மக்கள் சென்று கொண்டிருந்தோம்.

அப்போது பொலிசார் எங்களை தடுத்து முதலில் தாக்கத் துவங்கினர். குழந்தைகள், பெண்கள் என்று கூட பாராமல் சரமாரியாக தாக்கினார்கள்.

அவர்களைப் பாதுகாப்பதற்காகவே பேரணியில் சென்ற ஆண்கள் அனைவரும் பொலிசாருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். அதன் பின் குழுமியிருந்த அனைவரையுமே தடியால் அடிக்கத் தொடங்கினார்கள்.

இதனால் என்ன செய்வது என்றே தெரியவில்லை. அப்போது திடீரென்று துப்பாக்கி சத்தம் கேட்டது. எங்கு பார்ததாலும் இரத்த வெள்ளம்.

அங்கிருந்த பொலிஸ்காரர்களில் நான்கு பேர் என் மனைவியின் வயிற்றில் லத்தியால் அடித்தார்கள். தடுக்கச்சென்ற என்னையும் பலமாகத் தாக்கினார்கள்.

என் மனைவிக்கு வயிற்றிலிருந்து இரத்தம் பீறிட்டது. ஆம்புலன்சை தொடர்பு கொண்டேன், அவர்கள் கலவரத்தைக் காரணம்காட்டி வர முடியாது என்று சொல்லிவிட்டார்கள்.

அதன் பின் நானும் இன்னொரு நபரும் சேர்ந்து உயிருக்குப் போராடிக்கொண்டிருந்த என் மனைவியை மீட்டு, சுமார் 13 கிலோ மீற்றர் தொலைவுக்குச் சுற்றி மருத்துவமனைக்குக் கொண்டு சென்றோம்.

மனைவிக்கு காயத்தினால் ஏற்பட்ட ரத்தப்போக்கு இன்னமும் நிற்கவில்லை. என் மனைவி விரைவில் நலம் பெற வேண்டும் என்பதுதான் இப்போதைய வேண்டுதல்.

எந்தளவு கஷ்டமானாலும் நாங்கள் தாங்கிக் கொள்கிறோம். எப்படியாவது ஸ்டெர்லைட் ஆலையை மூடினால் அதுவே எங்களுக்குப் போதும் என்று கண்ணீருடன் கூறியுள்ளார்.

மேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers