பாசப்போராட்டம் நடத்திய மாணவர்கள்...காரணம் கூறும் ஆசிரியர் பகவான்!

Report Print Vijay Amburore in இந்தியா

திருவள்ளூரில் ஆசிரியரின் பணியிடை மாற்றத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து பள்ளி மாணவர்கள் அனைவரும் நடத்திய பாசப்போராட்டத்திற்கான காரணம் குறித்து, ஆசிரியர் பகவான் மனம் திறந்து பேசியுள்ளார்.

திருவள்ளூர் மாவட்டம் வெள்ளியகரம் அருகே உள்ள உயர்நிலைப்பள்ளியில், கடந்த 5 ஆண்டுகளாக ஆங்கில ஆசிரியராக பணியாற்றி வந்த பகவான் என்பவர் கடந்த சில நாட்களுக்கு முன்பு, திருத்தணி அருகே உள்ள பள்ளிக்கு பணியிடை மாற்றம் செய்யப்பட்டார். இதனை அறிந்த பள்ளி மாணவர்கள், பள்ளியில் பணிவிடுப்பு கடிதம் வாங்க வந்த ஆசிரியரை வெளியில் விடாமல், அவரை கட்டிப்பிடித்து கதறி அழுது தங்களது பாசத்தை வெளிப்படுத்தினர். மாணவர்களின் பாசத்தை கண்டு வியந்த ஆசிரியரும் கண்ணீர் விட்டு அழ ஆரம்பிக்க, அந்த பாசப்போராட்ட காணொளி காட்சிகள் தேசிய அளவில் அனைத்து ஊடங்கங்களிலும் இடம்பெற்றன.

இதனையடுத்து சம்மந்தப்பட்ட ஆசிரியருக்கு பல்வேறு பக்கங்களில் இருந்தும் வாழ்த்துக்கள் குவிந்த நிலையில், அவரது பணியிடை மாற்றத்தை 10 நாட்களுக்கு மாவட்ட கல்வி நிர்வாகம் நிறுத்தி வைத்துள்ளது. இந்த நிலையில், மாணவர்களின் பாசம் குறித்து ஆசிரியர் பகவான் மனம் திறந்துள்ளார். இதுகுறித்து அவர் பேசுகையில், நான் இதுவரை எந்த மாணவர்களையும் திட்டியது இல்லை. எனது பணியை மட்டுமே செய்து வந்தேன். அதற்கு பிரதிபலனாக மாணவர்கள் இவ்வளவு பெரிய பாசப்போராட்டத்தை நடத்துவார்கள் என எதிர்ப்பார்க்கவில்லை. இது என்னுடைய வாழ்வில் மறக்க முடியாத தருணம் என தெரிவித்துள்ளார்.

மேலும் பேசுகையில், கிராமப்புறங்களிளில் இருக்கும் மாணவர்களுக்கு ஆங்கிலம் என்பது எட்டாக்கனியாக உள்ளதாகவும், தன்னால் முடிந்த வரை சிறப்பான கல்வியை மாணவர்களுக்கு அளிக்க உள்ளதாகவும் தெரிவித்தார்

மேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers