சர்ச்சையில் சிக்கிய "சர்கார்".. நடிகர் விஜய் மீது பாயும் வழக்கு?

Report Print Vijay Amburore in இந்தியா

ஏ.ஆர். முருகதாஸ் இயக்கத்தில், விஜய் நடிப்பில் உருவாகி வரும் 'சர்கார்' திரைப்படம் வரும் தீபாவளிக்கு வெளியாக உள்ளது. ஏற்கனவே இவர்களது கூட்டணியில் உருவான இரண்டு படங்களும் மிகப்பெரிய வெற்றி அடைந்ததுடன், சமூகத்திற்கு தேவையான கருத்துக்களை, ஆழமான முறையில் எடுத்துரைத்ததால், மூன்றாவது படத்திற்கும் ரசிகர்கள் மத்தியில் நல்ல எதிர்பார்ப்பு இருந்து வருகிறது.

சன்பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கும் இப்படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் மற்றும் படத்தின் தலைப்பு, விஜய்யின் பிறந்தநாளை முன்னிட்டு நேற்றைக்கு முன்தினம் மாலை வெளியானது. ஒரு புறம் விஜய் ரசிகர்கள் அனைவரும் அதனை பிரமாண்டமாக கொண்டாடினாலும், வழக்கம்போல விஜய் படத்திற்கு எதிர்ப்பு தெரிவிப்பதாக நினைத்துக்கொண்டு படத்தை உலகளவில் இலவசமாக ப்ரமோஷன் செய்யும் குழுவினரும் அதற்கான வேலைகளை பார்த்து வருகின்றனர்.

படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டரில் நடிகர் விஜய் புகைபிடிப்பதை போல இடம்பெற்றிருக்கும் காட்சிக்கு, பலரும் எதிர்ப்பு தெரிவித்து வரும் நிலையில், விஜய்யின் செயல், புகையிலை விளம்பர தடைச் சட்டத்தை மீறும் செயல் எனவும், அதனை பார்த்து இளைஞர்கள் பலரும் கெட்டுப்போய் விடுவார்கள் எனவும் புகையிலை கட்டுப்பாட்டுக்கான தமிழக மக்கள் அமைப்பின் ஒருங்கிணைப்பாளர் சிரில் அலக்ஸாண்டர், மாநில கண்காணிப்புக் குழுவுக்கும், இந்திய திரைப்படத் தணிக்கைக் குழுவுக்கும் கடிதம் எழுதியுள்ளார்.

மேலும் சட்டத்தை மீறியதற்காக நடிகர் விஜய் மீது, சென்னை உயர்நீதிமன்றத்தில் விரைவில் வழக்கு தொடுக்க உள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

மேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்