5 லட்சம் மாணவர்களை ஏமாற்றி 2 கோடி வசூலித்த ஆறுமுகம்: பரபரப்பு தகவல்கள்

Report Print Kabilan in இந்தியா

தமிழகத்தின் கோவை மாவட்டத்தில் பயிற்சியின்போது மாணவி மரணமடைந்த நிலையில், குறித்த பயிற்சியாளர் கடந்த 6 ஆண்டுகளில் மாணவர்களை ஏமாற்றி ரூ.2 கோடியே 50 லட்சம் வரை வசூலித்திருப்பது தெரிய வந்துள்ளது.

கோவையை அடுத்த தொண்டாமுத்தூர் நரசிபுரம் கல்லூரியில், நேற்று முன் தினம் நடந்த பேரிடர் மேலாண்மை பயிற்சியின்போது லோகேஸ்வரி எனும் மாணவி பலியான சம்பவம், தமிழகம் முழுவதும் பெரும் சோகத்தையும், அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது.

இச்சம்பவத்தில் தொடர்புடையவர் போலி பயிற்சியாளர் என்பது தெரிய வந்தது. தற்போது விசாரணை வளையத்தில் இருக்கும் போலி பயிற்சியாளர் ஆறுமுகத்திடம் நடத்தப்பட்ட விசாரணையில், பல மாணவ-மாணவிகளுக்கு அவர் பேரிடர் மேலாண்மை அமைப்பின் அனுமதி பெறாமலேயே பயிற்சியளித்துள்ளது தெரிய வந்துள்ளது.

மேலும், நெல்லை மாவட்டத்தைச் சேர்ந்த ஆறுமுகம், சென்னையில் உள்ள தேசிய பேரிடர் மேலாண்மை பயிற்சி மையத்தில் பயிற்சியாளராக வேலை பார்ப்பதாக தெரிவித்து பல பள்ளி, கல்லூரிகளுக்கு சென்று ஒத்திகை நிகழ்ச்சி நடத்தியுள்ளார்.

போலி சான்றிதழ்களை காண்பித்து கடந்த 6 ஆண்டுகளாக, தமிழகம் முழுவதும் 1,275 பள்ளி, கல்லூரிகளில் பேரிடர் மேலாண்மை பயிற்சி அளித்துள்ளார். இவர் இதற்காக கல்வி நிறுவனங்களிடம் பணம் ஏதும் பெறவில்லை.

ஆனால், பயிற்சி முடிந்த பின்னர் மாணவ-மாணவிகளிடம் இருந்து தலா ரூ.50 வசூலித்து கொண்டு போலியாக சான்றிதழ் வழங்கியுள்ளார். இதேபோல் கடந்த 6 ஆண்டுகளில் 5 லட்சம் மாணவர்களிடம் ரூ.2 கோடியே 50 லட்சம் வசூலித்து இருப்பது தெரிய வந்துள்ளது.

அத்துடன் இவருக்கு பின்னால் பெரிய கும்பல் செயல்படுவதும் தெரிய வந்ததால், இதுதொடர்பாக தனிப்படை பொலிசார் விசாரணையை முடுக்கி விட்டுள்ளனர்.

மேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers