கவலைக்கிடமான நிலையில் கருணாநிதி! கூடுதல் மருத்துவர்கள் வருகை- பதற்றத்தில் தமிழகம்

Report Print Vijay Amburore in இந்தியா

திமுக தலைவர் கருணாநிதியின் உடல்நிலையை சோதனை செய்வதற்காக காவேரி மருத்துவமனையை சேர்ந்த கூடுதல் மருத்துவர்கள் கோபாலபுரத்திற்கு வருகை தந்துள்ளதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

தமிழகத்தின் தவிர்க்க முடியாத ஆளுமைகளில் ஒருவரும், மூத்த அரசியல்வாதியுமான கலைஞர் கருணாநிதி கடந்த சில ஆண்டுகளாகவே உடல்நிலை சரியில்லாத காரணத்தால் அரசியல் உட்பட வெளி நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வதை தவிர்த்து வந்தார்.

இதற்கிடையில் நுரையீரல் பகுதியில் அதிகமாக இருந்த சளியின் காரணமாக மூச்சு விடுவதற்கு சிரமப்பட்டார். இதனால் அவருக்கு தொண்டைப்பகுதியில் ட்ரக்கியோஸ்டோமி என்ற கருவி பொருத்தப்பட்டது.

அந்த கருவியினை மாற்றுவதற்காக கடந்த 18ம் தேதியன்று மீண்டும் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அதற்குள் வந்ததிகள் ஒரு பக்கம் வேகமாக பரவ, கலைஞர் சீரான உடல்நிலையில் இருப்பதாக கோபாலபுர வட்டாரங்கள் அறிவிப்பினை வெளியிட்டன.

இந்த நிலையில், அவருக்கு சிறுநீரக நோய்த்தொற்றின் காரணமாக, காய்ச்சலுடன் சேர்ந்து உடல்நிலையும் நேற்று மோசமானதாக தெரிகிறது.

இதனையடுத்து கோபாலபுரத்திற்கு விரைந்த 2 மருத்துவர்கள் மற்றும் சில செவிலியர்கள் தீவிர சிகிச்சை அளிக்க ஆரம்பித்தனர். இதனால் அரசியல் தளத்தில் பெரும் பரபரப்பு ஏற்பட ஆரம்பித்தது.

இதனையடுத்து தமிழகத்தின் முக்கிய அரசியல்வாதிகள் பலரும் கோபாலபுரத்திற்கு விரைந்து கருணாநிதியின் உடல்நலம் குறித்து கேட்டறிந்தனர். திமுக தொண்டர்கள் மட்டுமல்லாது, தமிழக அரசியல் தலைவர்கள் மற்றும் பொதுமக்கள் மத்தியில் பெரும் கவலையை ஏற்படுத்தியிருக்க கூடிய இச்சம்பவத்தால், தமிழகமே சோகத்தில் மூழ்கியுள்ளது.

சென்னை கோபாலபுரத்தில் அமைந்துள்ள அவரது வீட்டின் முன்பு ஏராளமான தொண்டர்கள் குவிந்து வரும் நிலையில், கருணாநிதியின் உடல்நிலையை பரிசோதனை செய்வதற்காக, தற்போது காவேரி மருத்துவமனையில் இருந்து கூடுதலாக 4 மருத்துவர்கள் கோபாலபுரத்திற்கு விரைந்துள்ளனர்.

அவர்கள் தேவையான உபகரணங்களையும் எடுத்து சென்றுள்ளனர். சிகிச்சை முடிந்த பின்னர் கருணாநிதியின் உடல்நிலை குறித்து தகவல் வெளியிடுவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. ஒருவேளை நோய்த்தொற்று குறையாவிட்டால் கருணாநிதியை மருத்துவமனைக்கு அழைத்து செல்லலாம் எனவும் கோபாலபுர பகுதிகள் தெரிவிக்கின்றன. இதனால் அப்பகுதி இன்னும் பதற்றமாக காணப்படுகிறது.

மேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்