11 ஆண்டுகளுக்கு பின் தற்போது நிறைவேறியுள்ள கருணாநிதியின் கனவு! என்ன தெரியுமா?

Report Print Santhan in இந்தியா
173Shares
173Shares
lankasrimarket.com

தமிழக அறநிலையத்துறையால் நிர்ணயிக்கப்படும் கோவிலில் வரலாற்றிலேயே முதன் முறையாக பிராமணர் அல்லாத ஒருவர் அர்ச்சகராக நியமிக்கப்பட்டுள்ளதால், கருணாநிதியின் கனவு தற்போது 11 ஆண்டுகளுக்கு பின் நிறைவேறியுள்ளது.

கோவில்களில் பிராமணர் அல்லாத இதர ஜாதியினரும் அர்ச்சகராக நியமிக்கப்பட வேண்டும் என அறுபது ஆண்டுகளுக்கு மேலாக சமூகநீதி போராட்டம் நடந்துவந்தது.

இந்த போராட்டத்துக்கு முடிவுகட்டும் வகையில் அனைத்து ஜாதியினரும் அர்ச்சகர் ஆகலாம் என்ற அரசாணையை 2006-ஆம் ஆண்டு முதலமைச்சராக இருந்த கலைஞர் கருணாநிதி பிறப்பித்தார்.

அதை எதிர்த்த பலர் கோவிலில் குறிப்பிட்ட சமூகத்தினரே அர்ச்சகராக இருக்கவேண்டும் எனக் கூறி உச்சநீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்தனர்.

இதற்கிடையில் கடந்த 2007-ஆம் ஆண்டு ஸ்ரீரங்கம் ரங்கநாதசுவாமி கோவில் மற்றும் சென்னை திருவல்லிக்கேணி பார்த்தசாரதி கோவிலில் வைணவ ஆகம விதிகளின்படியும், திருச்செந்தூர், மதுரை, திருவண்ணாமலை மற்றும் பழனி ஆகிய இடங்களில் உள்ள அறநிலையத்துறைக்குச் சொந்தமான கோவில்களில் சைவ ஆகம விதிகளின்படியும், அர்ச்சகராவதற்கு பயிற்சி வகுப்புகளை தமிழக அரசு தொடங்கியது. அங்கு 2008-ஆம் ஆண்டு மே மாதத்தில் இருந்து 206 பேர் பயிற்சி முடித்தனர்.

இதைத் தொடர்ந்து 2015-ஆம் ஆண்டு உச்ச நீதிமன்றம் ஆகம விதிகளை மீறினால் பணிநீக்கம் செய்யலாம் என்ற சில நிபந்தனைகளுடன் தீர்ப்பு வழங்கியது.

இருப்பினும் தமிழக அரசிடம் பயிற்சி பெற்ற 206 பேருக்கு வேலைத் தரப்படாமல் இருந்த நிலையில், கடந்த 2018-ஆம் ஆண்டு மார்ச் மாதத்தில் மதுரை தல்லாகுளத்தில் உள்ள ஐயப்பன் கோவிலில் 206 பேரில் ஒருவரான மாரிச்சாமி என்பவருக்கு அர்ச்சகர் பணியை தமிழக அரசு வழங்கியுள்ளது.

இந்நிலையில் தமிழ்நாடு பயிற்சி பெற்ற அர்ச்சகர்கள் சங்கத் தலைவர் ரங்கநாதன் கூறுகையில், ஒரு கோவிலில் வேலை கொடுத்தால் மட்டும் போதாது அர்ச்சகர்பணி கிடைக்காமல் உள்ள 205 பேருக்கும் இதர கோவில்களில் வேலை வாய்ப்பை வழங்கவேண்டும் என்று கூறியுள்ளார்.

அனைத்து ஜாதியினரும் அர்ச்சகராகலாம் என்ற உத்தரவைப் பிறப்பித்த கருணாநிதி, தன் கனவு நனவானதை அறியாமல் மருத்துவமனையில் போராடி வருகிறார்.

மேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்