நீ மற்றவர்களுக்கு அழகாய் தெரியக் கூடாது... காதலியின் பற்களை உடைத்த காதலன்

Report Print Kabilan in இந்தியா

இந்தியாவில் தனது காதலி மற்றவர்களுக்கு அழகாக தெரியக் கூடாது என்று, அவரது முன் பற்களை காதலன் உடைத்த சம்பவம் நடந்துள்ளது.

குஜராத் மாநிலம் அகமதாபாத்தைச் சேர்ந்தவர் கீதா பென்(55). இவரது காதலர் ரமேஷ்(57) ஆட்டோ ஓட்டுநராக பணிபுரிந்து வருகிறார். இவர்கள் இருவரும் ஏற்கனவே திருமணம் ஆனவர்கள். 15 ஆண்டுகளுக்கு முன்பு தங்களது குடும்பத்தை விடுத்து, இவர்கள் இருவரும் தனியாக வீடு எடுத்து வசித்து வருகின்றனர்.

இந்நிலையில், வேலைக்கு செல்லும் கீதாவின் மீது ரமேஷுக்கு சந்தேகம் வந்துள்ளது. அதனால் அவரை வேலைக்கு போக வேண்டாம் என்று கூறினார். கீதாவும் அதனை ஏற்று வீட்டிலேயே இருந்தார்.

அதன் பின்னர், சில நாட்கள் கழித்து ‘உன் முன் பற்களை எடுத்துவிடு. அப்போது தான் மற்றவர்கள் உன்னை பார்க்க மாட்டார்கள்’ என்று ரமேஷ் கூறியுள்ளார். இதனைக் கேட்டு அதிர்ச்சியடைந்த கீதா பற்களை எடுக்க மறுத்தார்.

ஆனால், ரமேஷ் அவரை கட்டாயப்படுத்தி முன் பற்களை நீக்க வைத்தார். அதனையும் கீதா பொறுத்துக் கொண்டு ரமேஷுடன் வாழ்ந்து வந்தார். சில நாட்களில் கீதாவின் மீது ரமேஷுக்கு சந்தேகம் அதிகரிக்க, வீட்டு ஜன்னல்களை பிளாஸ்டிக் அட்டைகளை வைத்து அடைத்தார்.

அதன் பின்னர், நீ வீட்டில் வேலையில்லாமல் தானே இருக்கிறாய், என்னுடன் ஆட்டோவிலேயே வா என்று கூறி கீதாவையும் தன்னுடனே ஆட்டோவில் கூட்டிச் சென்றார் ரமேஷ்.

இந்த கொடுமையை தாங்கிக் கொள்ள முடியாத கீதா, ஓடும் ஆட்டோவில் இருந்து குதித்துள்ளார். இதனைக் கண்ட பொதுமக்கள் பெண்கள் உதவி மையத்துக்கு தகவல் தெரிவித்தனர். அவர்கள் கீதாவை விசாரித்த போது தனக்கு நடந்த கொடுமைகளை கூறினார்.

மேலும், ரமேஷ் தான் இன்னும் காதலிப்பதாகவும், அவர் மீது வழக்கு எதுவும் போடாமல் எச்சரித்து புரிய வைத்தால் மட்டும் போதும் என்றும் கீதா தெரிவித்துள்ளார். அதனைத் தொடர்ந்து, அந்த அமைப்பினர் ரமேஷுக்கு அறிவுரைகள் வழங்கி அனுப்பி வைத்துள்ளனர்.

மேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers