மறக்க முடியாத கலைஞர்: சிங்கப்பூரிலிருந்து புகழாஞ்சலி

Report Print Arbin Arbin in இந்தியா

திமுக தலைவர் கருணாநிதியின் வாழ்க்கையின் ஒவ்வொரு துளியும் போராட்டத்தால் செதுக்கப்பட்டது. அவரது மறைவு குறித்து சிங்கப்பூர் வானொலி வெளியிட்ட இரங்கல் செய்தி:

இந்திய அரசியலில் தொடர்ந்து ஒரு பங்கு வகித்த மிக முக்கியமான மூத்த அரசியல் பிரமுகர்களுள் ஒருவர் 'முத்துவேல் கருணாநிதி'.

கருணாநிதி அவர்கள், திருக்குவளை என்ற சிறிய குக்கிராமத்தில், ஜூன் 3ஆம் திகதி, 1924ஆம் ஆண்டு, முத்துவேலர் மற்றும் அஞ்சுகம் அம்மையார் தம்பதிகளின் மகனாக பிறந்தார்.

அவர் திராவிட முன்னேற்ற கழகத்தின் (தி.மு.க.) ஒரு பகுதியாக இருந்து, உறுப்பினர்களை நிறுவி 1969 ல் இருந்து கட்சியை வழிவகுத்து வந்தார்.

சமூகப் பணியில் அவருக்கு இருந்த பேரார்வமே, தமிழ்நாட்டின் தலைச்சிறந்த முதலமைச்சராக அவரை செயல்பட வைத்தது.

60 ஆண்டுகளாக அரசியலில் தொடர்ந்து, ஒரு வலிமையான சக்தியாக இருந்து தனது கட்சி உறுப்பினர்களையும், ஆதரவாளர்களையும் திறம்பட வழி நடத்தினார்.

தமிழ்நாட்டு அரசியலில் தனக்கென ஒரு இடத்தைத் தக்கவைத்து, அசைக்க முடியாத ஒரு சக்தியாக விளங்குகிறார். தமிழ் இலக்கியத்தில் அவருடைய இலக்கிய பங்களிப்பைத் தவிர சமூகத்திலுள்ள ஏழை எளியவர்களின் நலனுக்காகவும் தன்னை அற்பணித்துக்கொண்டார்.

தனது அரசியல் வாழ்க்கையில் கருணாநிதி அவர்கள், சமூக பொருளாதார நிலைமைகளின் வளர்ச்சிக்காகவும், சீர்திருத்தத்திற்காகவும் போராடினார்.

அவருடைய ஆட்சியின் போது, கொண்டு வரப்பட்ட 'தமிழ்நாடு இலவச காப்பீட்டுத் திட்டம்', தமிழக ஏழை எளிய மக்களுக்கு ஒரு வரமாக இருந்தது. மாநில பொருளாதார வளர்ச்சியை மேம்படுத்துவதற்காக, தொழில்துறையில் பல சீர்திருத்தங்களைக் கொண்டு வந்தார்.

பெண்களுக்குச் சுய உதவிக் குழுக்கள், 8-வது வரை படித்தவர்களுக்குத் திருமண உதவித் தொகை வழங்கியது; விவசாயிகளுக்கு இலவச மின்சாரம் வழங்கியது என, யாராக இருந்தாலும் ஏதாவது ஒரு வகையில் தலைவர் "கலைஞர்" வாழ்க்கையுடன் தொடர்புடையவராக இருக்கிறார்கள்.

தமிழ் சினிமாவுக்குப் புதுத் தமிழ் ரத்தம் பாய்ச்சிய பெருமை, கலைஞருக்கு உண்டு. சுவாமி, நாதா, தேக பரிபாலனம், சொப்பனம் என மணிப்பிரவாளம் பேசிக்கொண்டிருந்த தமிழ் சினிமாவின் சட்டையைப் பிடித்து உலுக்கி, 'அம்பாள் எந்தக் காலத்துலடா பேசினாள்?!'என்றது கலைஞரின் தமிழ்.

'நீதிமன்றம், பல விசித்திரமான வழக்குகளைச் சந்தித்திருக்கிறது' என சிவாஜி கணேசன் முழக்கத்தில் வெளியான 'பராசக்தி'யின் நீதிமன்றக் காட்சி 65 ஆண்டுகள் கடந்த பிறகும் உயிர்ப்புடன் இருக்கிறது.

அந்த நீதிமன்றக் காட்சியில், சிவாஜி ஆவேசமாகப் பேசும்போது ஒரு வழக்குரைஞர் குறுக்குக் கேள்வி கேட்க எழுவார். சிவாஜியோ அவர் பேசுவதற்கு இடம் தராமல், ''உனக்கேன் அவ்வளவு அக்கறை... உலகத்தில் யாருக்கும் இல்லாத அக்கறை?'' என்பார்.

என்ன இப்படி ஒரு வழக்குரைஞரைப் பார்த்து இப்படிக் கேட்கிறாரே... கோர்ட்டில் அப்படிக் கேட்க முடியுமா, அது நீதிமன்றத்தை அவமதிப்பது ஆகாதா?' என்றெல்லாம் பல எண்ணங்கள் ஒரு விநாடி நமக்குள் ஓடும்.

ஆனால், சிவாஜி அந்த வாக்கியத்தை இப்படி முடிப்பார், ''என்று கேட்பீர்கள். என் சுயநலத்திலே பொது நலமும் கலந்திருக்கிறது. ஆகாரத்துக்காக அழுக்கைச் சாப்பிட்டு தடாகத்தைச் சுத்தப்படுத்துகிறதே மீன், அதைப்போல!''என அந்த வசனத்தின் ஒவ்வொரு வரியும் தீப்பொறியாகத் தெறிக்கும்.

ஆகாரத்துக்காக அழுக்கை உண்பது என்ன மாதிரியான சுயநலம்? ஆடம்பரமான ஒன்றை அனுபவித்தாலும் அதனால் பொதுமக்களுக்கு நன்மையே கிடைத்தது எனச் சொல்லாமல், எவ்வளவு ஜாக்கிரதையாக வார்த்தையைப் பிரயோகித்தார் என்பது கவனிக்கத்தக்கது.

மேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்