ஒரே ஒருமுறை இப்போதாவது ‘அப்பா’ என அழைத்து கொள்ளட்டுமா தலைவரே: ஸ்டாலின் இரங்கற் கவிதை

Report Print Arbin Arbin in இந்தியா

திமுக தலைவர் கருணாநிதியின் மறைவுக்கு அவரது மகன் மு.க.ஸ்டாலின் உருக்கமான கவிதை ஒன்றை கைப்பட எழுதி தமது டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.

அதில், உணர்வில், உடலில், சிந்தனையில் கலந்தவரே ஒரே ஒருமுறை இப்போதேனும் அப்பா என அழைத்துக் கொள்ளட்டுமா தலைவரே என உருக்கமாக பதிவிட்டுள்ளார்.

எங்கு சென்றாலும் சொல்லி விட்டுச் செல்லும்
எனது ஆருயிர்த் தலைவரே, இம்முறை ஏன்
சொல்லாமல் சென்றீர்கள்?
என் உணர்வில், என் உடலில் ரத்தத்தில்,
சிந்தனையில் இதயத்தில் இரண்டறக் கலந்து விட்ட
தலைவா! எங்களையெல்லாம் இங்கேயே
ஏங்கவிட்டு எங்கே சென்றீர்கள்?
"ஓய்வெடுக்காமல் உழைத்தவன் இதோ ஓய்வு
கொண்டிருக்கிறான்" என்று நினைவிடத்தில் எழுத
வேண்டும் என்று 33 ஆண்டுகளுக்கு முன்பே
எழுதினீர்கள். இந்த தமிழ் சமூகத்துக்காக
இடையறாது உழைத்தது போதும் என்ற மன நிறைவுடன்
புறப்ப்பட்டு விட்டீர்களா?
95 வயதில், 80 ஆண்டு பொதுவாழ்வுடன்
சளைக்காமல் ஓடி, "நாம் தாண்ட வேண்டிய உயரத்தை
யார் தாண்டுவார்கள் பார்ப்போம்' என்று போட்டி
வைத்துவிட்டு மறைந்து காத்திருக்கிறீர்களா?
திருவாரூர் மண்ணில் உங்கள் 95வதுபிறந்தநாளாம்
சூன் 3ஆம் நாள் நான் பேசும்போது, 'உங்கள்
சக்தியில் பாதியைத் தாருங்கள்'என்றேன். அந்த சக்தியையும்,
பேரறிஞர் அண்ணாவிடம் நீங்கள் இரவலாகப் பெற்ற
இதயத்தையும் யாசிக்கிறேன்.
தருவீர்களா தலைவரே!
அந்தக் கொடையோடு, இன்னும் நிறைவேறாத
உங்கள் கனவுகளையும், இலட்சியங்களையும்
வென்று காட்டுவோம்.
கோடானுகோடி உடன்பிறப்புகளின் இதயத்திலிருந்து
ஒரு வேண்டுகோள்.... ஒரே ஒரு முறை...
"என் உயிரினும் மேலான அன்பு உடன்பிறப்புகளே...!"
என்று சொல்லுங்கள் தலைவரே! அது ஒரு
நூறாண்டு எங்களை இனமொழி உணர்வோடு
இயங்க வைத்திடுமே!

"அப்பா அப்பா" என்பதை விட, "தலைவரே தலைவரே"
என நான் உச்சரித்ததுதான் என் வாழ்நாளில் அதிகம்.
அதனால் ஒரே ஒருமுறை, இப்போது 'அப்பா'
என்று அழைத்துக்கொள்ளட்டுமா தலைவரே?

மேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers