சக மாணவிகள் கிண்டல் செய்ததால் தீக்குளித்த மாணவி: அதிர்ச்சி சம்பவம்

Report Print Kabilan in இந்தியா
45Shares
45Shares
ibctamil.com

தமிழகத்தில் பதினொன்றாம் வகுப்பு மாணவி ஒருவர், சக மாணவிகள் குண்டாக இருப்பதாக கிண்டல் செய்ததால் மனமுடைந்து தற்கொலை செய்துகொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

சென்னை பல்லாவரத்தை அடுத்த திருநீர்மலைப் பகுதியில் வசித்து வருபவர் ரமேஷ் பாபு. இவரது மகள் திவ்யா, அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் 11ஆம் வகுப்பு படித்து வந்தார்.

இந்நிலையில், திவ்யாவின் வகுப்பில் மாணவிகள் சிலர் அவர் உடல் பருமனாக இருப்பதாகக் கூறி கிண்டல் செய்து வந்துள்ளனர்.

இதனால் மனமுடைந்த திவ்யா, இதுதொடர்பாக ஆசிரியர்களிடம் புகார் அளித்துள்ளார். மேலும் தனது பெற்றோரிடமும் இதுகுறித்து கூறியுள்ளார்.

திவ்யாவின் பெற்றோர் ஆசிரியர்களை சந்தித்து இதுகுறித்து புகார் கூறியதைத் தொடர்ந்து, திவ்யாவை வேறு வகுப்பிற்கு மாற்றுவதாக அவர்கள் தெரிவித்துள்ளனர். ஆனால், திவ்யா வேறு வகுப்பிற்கு மாற்றப்படவில்லை.

மேலும், சக மாணவிகள் அவரை தொடர்ந்து கிண்டல் செய்து வந்துள்ளனர். இதனால் விரக்தியடைந்த திவ்யா, வீட்டிற்கு சென்று தனது தாயாரிடம் புலம்பியுள்ளார்.

இந்நிலையில், நேற்று முன்தினம் இரவு வீட்டில் அனைவரும் தூங்கிக் கொண்டிருந்த சமயத்தில், திவ்யா மண்ணெண்ணையை ஊற்றி தீக்குளித்தார்.

அவரது அலறல் சத்தம் கேட்ட பெற்றோர் உடனடியாக அவரை மீட்டு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். ஆனால், திவ்யா சிகிச்சை பலனின்றி நேற்று காலை மரணமடைந்தார்.

இச்சம்பவம் தொடர்பாக வழக்குப்பதிவு செய்த பொலிசார் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

மேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்