3 மாத பெண் குழந்தையை கொடூரமாக கொன்ற தாயார்! அதிர்ச்சி வாக்குமூலம்

Report Print Arbin Arbin in இந்தியா

மூன்றுமாத பெண் குழந்தையைக் கொலைசெய்து புதருக்குள் வீசிய தாயாரிடம் பொலிசார் தீவிர விசாரணையில் ஈடுபட்டுள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

தமிழகத்தின் கோவை சரவணம்பட்டியை அடுத்த சிவானந்தபுரம் பகுதியைச் சேர்ந்தவர்கள் கார்த்திக்- வனிதா தம்பதி.

இவர்களுக்கு ஏற்கெனவே ஒன்றரை வயதில் பெண் குழந்தை இருக்கிறது. இந்நிலையில், கடந்த மூன்று மாதத்துக்கு முன்பு இரண்டாவதாக ஓர் பெண் குழந்தைப் பிறந்துள்ளது.

இதையடுத்து, தன் முதல் குழந்தையைத் திண்டுக்கல் சிறுமலை பகுதியிலுள்ள தன்னுடைய அம்மா வீட்டில் கொண்டுபோய்விட்ட வனிதா தன் மூன்று மாதக் குழந்தையான கவிஸ்ரீயை வளர்த்து வந்துள்ளார்.

இந்நிலையில், வீட்டில் தூங்கிக் கொண்டிருந்த குழந்தையை யாரோ தூக்கிச் சென்றுவிட்டதாக தமது கணவருக்கு வனிதா தொலைபேசியில் தகவல் அளித்துள்ளார்.

தகவலறிந்து வீட்டுக்கு விரைந்து வந்த கார்த்திக், தன் மனைவி வனிதாவுடன் சென்று சரவணம்பட்டி காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.

காவல்துறையினர் வனிதாவிடம் நடத்திய விசாரணையில் அவர் முன்னுக்குப் பின் முரணாகப் பதிலளித்துள்ளார். இதில் சந்தேகமடைந்த பொலிசார், வனிதாவை தனியாக விசாரித்துள்ளனர்.

ஒருகட்டத்தில் பொலிசாரிடம் பொய்சொல்ல முடியாமல் திணறிய வனிதா, குழந்தையைத் தானே கொலை செய்ததாக ஒப்புக்கொண்டார்.

நடந்த விவகாரம் தொடர்பில் பொலிசாரிடம் அவர் அளித்த வாக்குமூலத்தில், "முதல் குழந்தை பெண்ணாகப் பிறந்ததால், இராண்டாவது ஆண் குழந்தை பிறக்கும் என நினைத்திருந்தேன்.

ஆனால், இரண்டாவது குழந்தையும் பெண்ணாகப் பிறந்ததால் குடும்பத்தினரால் ஒதுக்கி வைக்கப்பட்டுவிடுவோம் என்ற பயம் இருந்தது.

அதுமட்டுமல்லாது, இந்தக் குழந்தை எப்போதும் அழுதுகொண்டிருந்தது. இதனால் எனக்கு கடுமையான மன உளைச்சல் ஏற்பட்டது.

அதனால் குழந்தையைக் கொன்று வீட்டின் பின்புறம் உள்ள புதரில் வீசினேன். அதை மறைப்பதற்காகக் குழந்தை கடத்தப்பட்டதாக நாடகமாடினேன் என்று கூறியிருக்கிறார் வனிதா.

இதைத் தொடர்ந்து சம்பவ இடத்துக்கு விரைந்த பொலிசார், குழந்தையின் சடலத்தை மீட்டு பிரேதப் பரிசோதனைக்காகக் கோவை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர்.

இச்சம்பவம் அப்பகுதியில் உள்ள மக்களிடையே கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

மேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers

loading...