தூத்துக்குடியில் தமிழர்கள் மீது துப்பாக்கி சூடு: உயர்நீதிமன்றம் அதிரடி

Report Print Vijay Amburore in இந்தியா

தூத்துக்குடியில் அப்பாவி பொதுமக்கள் மீது நடத்தப்பட்ட துப்பாக்கி சூடு தொடர்பாக சென்னை உயர்நீதிமன்ற மதுரைக்கிளை அதிரடி தீர்ப்பினை வழங்கியுள்ளது.

தூத்துக்குடி சிப்காட் வளாகத்தில் செயல்பட்டு வந்த ஸ்டெர்லைட் ஆலையினால் சுற்றுச்சூழல் பாதிக்கப்படுவதோடு, பொதுமக்களும் பல்வேறு நோய் தாக்குதல்களுக்கு உள்ளாவதாக குற்றச்சாட்டு எழுந்தது.

இதனையடுத்து பொதுமக்களின் நலனுக்கு கேடுவிளைவிக்கும் ஸ்டெர்லைட் ஆலையினை நிரந்தரமாக மூட வேண்டும் என்ற கோரிக்கையினை வலியுறுத்தி நீண்ட நாட்களாக அறவழியில் போராட்டம் நடத்தி வந்த 18 கிராமங்களை சேர்ந்த பொதுமக்கள், கடந்த மே மாதம் 22-ம் திகதியன்று மிகப்பெரிய பேரணியினை முன்னெடுத்தனர்.

அவர்களின் போராட்டத்தை கட்டுப்படுத்த முடியாமல் திணறிய தமிழக பொலிஸார், அதிகாரத்தின் உச்சகட்டமாக மனித நாகரிகமற்ற முறையில் கண்மூடித்தனமான துப்பாக்கி சூடு நடத்தினர்.

அப்பட்டமான இந்த படுகொலை சம்பவத்தில் 16 பொதுமக்கள் பலியானதோடு, ஏராளமானோர் படுகாயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.

உலகின் பல பகுதிகளில் வாழும் தமிழர்கள் மத்தியில் பலத்த அதிர்வலைகளை ஏற்படுத்திய இச்சம்பவம் குறித்து தமிழக அரசுக்கு எதிராக கடும் கண்டனங்கள் எழத்தொடங்கின.

அதேசமயம் சமூக ஆர்வலர்கள் பலரும், துப்பாக்கிசூட்டிற்கு எதிராக வழக்குகளை தொடர்ந்தனர்.

இந்த நிலையில் இதுதொடர்பான 10 பொதுநல வழக்குகள் சென்னை உயர்நீதிமன்ற மதுரைக்கிளையில் இன்று விசாரணைக்கு வந்தது. அதனை விசாரித்த நீதிபதிகள் சி.டி செல்வம், பஷீர் அகமது கொண்ட அமர்வு, துப்பாக்கி சூடு நடத்திய தமிழக அரசிற்கு கடுமையான கண்டனங்களை தெரிவித்ததோடு, மக்கள் அதிகாரம் அமைப்பை சேர்ந்த 6 பேர் மீது பதியப்பட்ட தேசிய பாதுகாப்பு சட்டத்தையும் ரத்து செய்து அதிரடி உத்தரவிட்டனர்.

மேலும் துப்பாக்கி சூடு நடத்தியது தவறு என்றும், விசாரணையை சிபிஐக்கு மாற்றியும் அதிரடி உத்தரவு பிறப்பித்தனர்.

மேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்