ராஜீவ்காந்தி கொலை வழக்கில் 7 சிறைக்கைதிகள் பற்றிய தகவல்கள் இதோ

Report Print Deepthi Deepthi in இந்தியா

ராஜீவ்காந்தி கொலை வழக்கில் குற்றவாளிகளாக தண்டனை அனுபவித்து வரும் 7 தமிழர்களின் வாழ்க்கை குறிபபு இதோ

நளினி முருகன்

ராஜீவ் காந்தி கொலை வழக்கில், முதலாவது குற்றவாளியாக சேர்க்கப்பட்டவர் நளினி. 1991, ஜூன் 14-ஆம் தேதி கைது செய்யப்பட்ட இவருக்கு அரித்ரா என்ற மகள் உள்ளார். அவர் தற்போது லண்டனில் படிக்கிறார்.

2000 ஆம் ஆண்டு ஏப்ரலில் நளினியின் தூக்குத் தண்டனையை ஆயுள் தண்டனையாக குறைத்து அப்போதைய தமிழக ஆளுநர் உத்தரவிட்டார். 2008 மார்ச் மாதம் நளினியை சிறைச்சாலைக்கு சென்று ராஜீவ் காந்தியின் மகள் பிரியங்கா காந்தி சந்தித்துப் பேசியதன் தொடர்ச்சியாக, ராஜீவ் கொலைக்காக தாம் வருந்துவதாக நளினி தெரிவித்தார்.

டிப்ளமோ படிப்பை முடித்துள்ள நளினி, சிறையில் இருக்கும்போதே முதுகலை கணினி பயன்பாடுகள் படிப்பை முடித்தார். சிறையில் இருந்து கொண்டு இப்படிப்பை படித்த முதல் நபர் நளினிதான்.

சுதேந்திர ராஜா என்கிற சாந்தன்

சுதேந்திர ராஜா என்கிற சாந்தன் 1991 ஜூலை 22-ம் தேதி கைது செய்யப்பட்டார். இவர், விடுதலைப் புலிகள் இயக்கத்தின் உளவுத்துறை பிரிவில் உறுப்பினராக இருந்ததாக கூறப்படுகிறது. ராஜீவ் கொலை வழக்கில் இவருக்கு தூக்குத்தண்டனை விதிக்கப்பட, 2014-ம் ஆண்டு பிப்ரவரி 18-ம் தேதி உச்ச நீதிமன்றத்தால் ஆயுள் தண்டனையாக குறைக்கப்பட்டது.

ஸ்ரீஹரன் என்கிற முருகன்

ஒன்பது சகோதர-சகோதரிகளுடன் யாழ்ப்பாணத்தில் பிறந்தவர். 1987-ம் ஆண்டு விடுதலைப் புலிகள் அமைப்பில் சேர்ந்த முருகனுக்கு, இந்து என்று பெயர் சூட்டப்பட்டது. 1991 பிப்ரவரியில் நளினியுடனான முதல் சந்திப்பில், முருகனுக்கு காதல் மலர, அதே ஆண்டு ஏப்ரல் 22-ஆம் தேதி திருப்பதியில் இருவரும் திருமணம் செய்து கொண்டனர்.

ராஜீவ் கொலை வழக்கில் 1991 ஜூன் மாதம் 14-ஆம் தேதி முருகன் கைது செய்யப்பட்டார். ராஜீவ் கொலை வழக்கில் இவருக்கும் தூக்குத்தண்டனை விதிக்கப்பட, அதனை 2014-ம் ஆண்டு பிப்ரவரி 18ம் தேதி ஆயுள் தண்டனையாக குறைத்தது உச்ச நீதிமன்றம்.

ராபர்ட் பயஸ் என்கிற குமாரலிங்கம்

1991 ஜூன் 18-ல் கைது செய்யப்பட்டார். ராஜீவ் கொலை வழக்கில், இவரது வாக்குமூலம் ஆகஸ்ட் 22-ல் பெறப்பட்டு, ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டது. 2005-ல், ஆயுள்கால தண்டனையாக கருதப்படும் 14 ஆண்டு சிறைவாசம் முடிந்தும் அவர் விடுவிக்கப்படவில்லை. இதனால், மே 2009-ல் தம்மை விடுவிக்கக் கோரி, வேலூர் மத்திய சிறையில் இருந்து ராபர்ட் பயஸ் காலவரம்பற்ற உண்ணாவிரதம் மேற்கொண்டார்.

ஜெயக்குமார்

எஸ்.ஜெயக்குமார், ராஜீவ் கொலை வழக்கில் பத்தாவது குற்றவாளியாக சேர்க்கப்பட்டார். 1991 ஜூன் 26 அன்று கைது செய்யப்பட்ட அவருக்கும் ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டது. யாழ்ப்பாணத் தமிழரான இவர், சென்னையில் சிவராசன், சுபா ஆகியோர் தங்க வசதி செய்து கொடுத்ததாக குற்றம்சாட்டப்பட்டது. 1991-ம் ஆண்டு முதல் இன்று வரை ஜெயக்குமார் சிறைவாசம் அனுபவித்து வருகிறார்.

ரவிச்சந்திரன்

ரவிச்சந்திரன் மீது ராஜீவ் கொலைக்கு, கூட்டுச்சதியில் ஈடுபட்டதாக குற்றம்சாட்டப்பட்டது.

வழக்கு விசாரணை முடிவில், இவருக்கு ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டது. அவரும் கடந்த 25 ஆண்டுகளை சிறையிலேயே கழித்துள்ளார். 2012 பிப்ரவரியில், மதுரை நீதிமன்ற உத்தரவின் பேரில், ரவிச்சந்திரன் 2 வாரங்கள் பரோலில் வெளியே வந்தார்.

பேரறிவாளன் என்கிற அறிவு

வேலூர் மாவட்டம் ஜோலார்பேட்டையில் பிறந்தார். ராஜீவ் காந்தி கொலைக்கு பயன்படுத்தப்பட்ட வெடிகுண்டிற்காக இரண்டு, 9 வோல்ட் பேட்டரிகளை வாங்கிக் கொடுத்தார் என்பது இவர் மீதான குற்றச்சாட்டு.

1991-ம் ஆண்டு ஜூன் 11 அன்று கைது செய்யப்பட்ட பேரறிவாளனுக்கு தூக்குத்தண்டனை விதிக்கப்பட்டது. 2014-ம் ஆண்டு பிப்ரவரி 14-ம் தேதி பேரறிவாளனுக்கு தண்டனைக் குறைப்பு செய்து உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது.

வேலூர் மத்திய சிறையில் அடைக்கப்பட்ட அவர், சிறையில் இருந்தபடியே படித்தார். 12 ஆம் வகுப்புத் தேர்வில் 91 சதவிகித மதிப்பெண்களுடன் தேர்ச்சி பெற்றார்.

மகாத்மா காந்தி சமுதாய கல்லூரி மற்றும் தமிழ்நாடு திறந்தவெளி பல்கலைக்கழகத்துடன் இணைந்து, சிறைத்துறை நடத்தி வரும் DTP படிப்பில் முதல் மாணவராகத் தேர்ச்சி பெற்று தங்கப் பதக்கம் பெற்றார்.

மேலும் சில பட்டயப் படிப்புகளை முடித்த பேரறிவாளன், சிறையில் இருந்தவாறே எம்.சி.ஏ. படிப்பும் படித்துள்ளார். தமது சிறை வாழ்க்கையை விவரித்து “An Appeal For The Death Row ” என்ற ஆங்கிலப் புத்தகத்தையும் பேரறிவாளன் எழுதியுள்ளார்.

மேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்