கிட்னி செயலிழந்த இளைஞரை நெகிழவைத்த ஆட்டோ ஓட்டுனர்

Report Print Arbin Arbin in இந்தியா

திருமண நாள் கொண்டாட்டத்திற்காக சேமித்து வைத்திருந்த பணத்தை ஆட்டோ ஓட்டுனர் ஒருவர் இளைஞர் ஒருவரின் சிறுநீரக அறுவைசிகிச்சைக்காக அளித்த சம்பவம் பலரையும் நெகிழ வைத்துள்ளது.

தமிழகத்தின் திருப்பூர் மாவட்டம், துண்டுக்காட்டைச் சேர்ந்தவர் 33 வயதான பிரகாஷ். திடீரென இவரது இரண்டு சிறுநீரகமும் செயலிழந்து விட்டதாக தெரியவந்துள்ளது.

அவரது சகோதரி, தனது ஒரு சிறுநீரகத்தை பிரகாஷுக்கு தருவதாக ஒப்புக்கொண்டுள்ளார். பிரகாஷுக்கு சிறுநீரக அறுவைசிகிச்சை செய்ய, சம்பந்தப்பட்ட மருத்துவமனை நிர்வாகம், காப்பீட்டுத் திட்டத்தில் 5,00,000 வரை பெற்றுக்கொள்வதாக உறுதி அளித்துள்ளது.

ஆனால், மருத்துவச் செலவுகளுக்கு 2,00,000 வரை தேவைப்பட்டிருக்கிறது. இந்த நிலையில், கரூரைச் சேர்ந்த 'இணைந்த கைகள்' என்ற அமைப்பானது பிரகாஷுக்கு உதவும் பொருட்டு சமூக வலைதளங்களில் பதிவிட்டு, நல்லுள்ளங்களின் உதவியை நாடியிருக்கிறது.

குறித்த தகவலை அறிந்த வெள்ளக்கோயில் பகுதி ஆட்டோ ஓட்டுனரான கோபி, அவரது மனைவி சுப்புலட்சுமி இருவரும் தங்களது 17-வது திருமணநாள் கொண்டாட்டத்துக்காக சேர்த்துவைத்திருந்த 2,000 ரூபாயை பிரகாஷின் மருத்துவச் செலவுக்காக வழங்கி நெகிழ வைத்திருக்கிறார்.

கோபி அளித்த தொகையை இணைந்த கைகள் அமைப்பின் ஒருங்கிணைப்பாளர்களில் ஒருவரான சலீம் பெற்றுக் கொண்டுள்ளார்.

இச்சம்பவம் அறிந்த பலரையும் நெகிழ வைத்துள்ளது. தமக்கு வசதி இருந்திருந்தால் லட்சம் லட்சமா அள்ளிக் கொடுத்திருப்பேன். என்னால முடிஞ்சது இவ்வளவுதான் என கோபி சொல்லியபடிக் கொடுத்துள்ளார்.

மேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்