தெலங்கானா மாநிலத்தில் 30 அடி பள்ளத்தில் பேருந்து கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 57-ஆக உயர்ந்துள்ளது.
தெலங்கானா மாநிலத்தில் கொண்டகட்டு என்ற பகுதியில் உள்ள ஆஞ்சநேயர் மலைக் கோயிலிலிருந்து மாநில அரசுக்கு சொந்தமான பேருந்து, ஜக்தியால் என்ற பகுதியை நோக்கி நேற்று சென்று கொண்டிருந்தது.
சனிவரம்பேட் என்ற கிராமத்தில், மலைப்பாதை வளைவில் திரும்பும்போது, ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்த பேருந்து, விபத்துக்குள்ளானது.
இந்த கோர விபத்தின் காரணமாக பலத்த சத்தம் கேட்டு, அக்கம்பக்கத்தினர் ஓடி வந்து பார்த்தனர். அப்போது, பேருந்தில் பயங்கர மரண ஓலத்தை கேட்டு அதிர்ச்சி அடைந்த கிராமத்தினர், தாங்களாகவே ஓடிச் சென்று, பேருந்தில் உயிருக்கு போராடிக்கொண்டிருந்த பயணிகளை மீட்கும் பணியில் ஈடுபட்டனர்.
உயிரிழந்தோர் எண்ணிக்கை அதிகரிப்பு
நேற்று உயிரிழந்தோரின் எண்ணிக்கை 42 ஆக இருந்தது. தற்போது 57 ஆக உயர்ந்துள்ளது.
பேருந்தில் 25 பேரின் சடலங்கள் மீட்கப்பட்டன. மேலும், படுகாயமடைந்த 30க்-கும் மேற்பட்டோர் ஜகித்யாலா, கரீம் நகர் மற்றும் ஹைதராபாத் அரசு மருத்துவமனைகளில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டனர். இதில் சிகிச்சை பலனின்றி மேலும் 19 பேர் உயிரிழந்தனர்.
இந்த கோர விபத்தில் 2 கர்ப்பிணிகள் பரிதாபமாக உயிரிழந்தனர். இதில் ஒருவர் 9 மாத கர்ப்பிணியாவார். இவர், பேருந்து விபத்தால் அதிர்ச்சி அடைந்து பலத்த காயங்களுடன் உயிரிழந்தார். இதில், குழந்தை பிரசவமும் ஏற்பட்டு, பிறந்த குழந்தையும் இறந்து விட்டது. இதேபோன்று, 7 மாத கர்ப்பிணியும் இந்த விபத்தில் பரிதாபமாக உயிரிழந்தார்.
முதல்வர் நிவாரணம் அறிவிப்பு
பேருந்து விபத்து குறித்து அறிந்ததும், விபத்துக்கான காரணத்தை கேட்டறிந்தார் காபந்து முதல்வர் கே. சந்திரசேகர ராவ்.
மேலும், இறந்தவர்களின் குடும்பத்தாருக்கு தன்னுடைய ஆழ்ந்த இரங்கலை தெரிவித்த முதல்வர், தலா ரூ. 5 லட்சம் நிவாரணம் வழங்குவதாக அறிவித்துள்ளார்.