20 நாட்கள் நோட்டம்.. கூலிப்படைக்கு கொடுக்கப்பட்ட மிகப்பெரிய தொகை.. அதிரவைக்கும் வாக்குமூலம்

Report Print Vijay Amburore in இந்தியா

தெலுங்கானாவில் மகள் கலப்பு திருமணம் செய்துகொண்டதால் ஆத்திரமடைந்த தந்தை மருமகனை கொலை செய்ய கூலிப்படைக்கு கொடுத்த பணத்தொகையின் மதிப்பு வெளியாகியுள்ளது.

தெலுங்கானா மாநிலம் நல்கொண்டா மாவட்டம் மரியாளகுடா பகுதியை சேர்ந்தவர் பிரனய்குமார் (22). இவரும் அதே பகுதியை சேர்ந்த தொழிலதிபர் மாருதி ராவ் மகள் அம்ருதாவும், பள்ளி பருவத்தில் இருந்தே காதலித்து வந்துள்ளனர்.

பிரனய்குமார் தாழ்த்தப்பட்ட வகுப்பினை சேர்ந்தவர் என்பதால், அம்ருதா வீட்டில் காதலுக்கு கடும் எதிர்ப்பு கிளம்பியது. இதனையடுத்து இருவரும் வீட்டை விட்டு வெளியேறி திருமணம் செய்துகொண்டனர்.

தொடர்ந்து அவர்களுக்கு கொலை மிரட்டல் வந்துகொண்டே இருந்ததால், இருவரும் பெங்களூருக்கு குடிபெயர்ந்தனர்.

இதற்கிடையில் அம்ருதா 5 மாத கர்ப்பிணியாக இருந்ததால், சொந்த ஊரான மரியாளகுடாவிற்கு இருவரும் வருகை தந்துள்ளனர். அங்கு மருத்துவனையில் பரிசோதனை மேற்கொள்ள சென்றுள்ளனர். உடன் பிரனய்குமார் அம்மாவும் சென்றிருக்கிறார்.

பரிசோதனை முடிந்து வெளியில் வந்த பொழுது கூலி படையை சேர்ந்த 2 பேர் பிரனய்குமாரை சரமாரியாக கத்தியால் வெட்டினர். இதில் சம்பவ இடத்திலேயே பிரனய்குமார் உயிரிழந்தார்.

இந்தியாவையே அதிரவைத்த சம்பவம் தொடர்பாக பொலிஸார் தீவிரமான விசாரணை மேற்கொள்ள ஆர்மபித்தனர். அதில் அம்ருதாவின் தந்தை மற்றும் அவருடைய சித்தப்பா ஸ்ராவன் ஆகியோர் கூலிப்படையை ஏவி கொலை செய்திருப்பது தெரியவந்தது.

இதனையடுத்து அம்ருதாவின் தந்தை மாருதி ராவ், சித்தப்பா ஸ்ராவன் மற்றும் குற்றவாளிகள் அப்துல்பாரி, ‌ஷதி ஆகியோரை கைது செய்து பொலிஸார் விசாரணை மேற்கொண்டனர். அதில், கர்ப்பிணி மகளின் கணவரை கொலை செய்ய ரூ.1 கோடி வரை பேரம் பேசியிருப்பது தெரியவந்தது.

மேலும், பிரனய்குமார் வீட்டின் சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்யும் போது, 20 நாட்களாக குற்றவாளிகள் நோட்டமிட்டிருப்பது தெரியவந்தது.

இதற்கிடையில் அம்ருதாவிற்கு பரிசோதனை மேற்கொண்ட மருத்துவர் ஜோதி கூறுகையில், அம்ருதாவின் வயிற்றில் வளரும் குழந்தை பிறக்கக் கூடாது. கருவிலேயே அழித்துவிட வேண்டும். அதற்கு எவ்வளவு வேண்டுமானாலும் பணம் தருகிறேன் என்றார். ஆனால் நான் அதற்கு ஒத்துக்கொள்ளவில்லை என கூறியுள்ளார்.

கொலை செய்ததற்கான காரணம் குறித்து அம்ருதாவின் தந்தை மாருதி ராவ், என்னுடைய மகள் வேறு ஜாதியை சேர்ந்த பையனை திருமணம் செய்துகொண்டதை என்னால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை. என்னால் அதனை ஜீரணிக்கவும் முடியவில்லை. எனக்கு மானம், மரியாதை தான் முக்கியம். அதனால் தான் கொலை செய்தேன் என தெரிவித்துள்ளார்.

கணவர் இறந்தது பற்றி கர்ப்பிணி அம்ருதா கூறுகையில், பிரனய் இல்லாமல் என்னால் வாழ முடியாது. ஆனால் என்னுடைய குழந்தைக்காக நான் வாழ விரும்புகிறேன். என் நிலைமையை போல யாருக்கும் இனி ஏற்பட கூடாது. இனிமேல் நான் சாதி அமைப்புகளுக்கு எதிராக போராடுவேன் என தெரிவித்துள்ளார்.

மேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers