நடிகர் கருணாஸிடம் 3 மணிநேரம் விசாரணை: 5 ஆம் திகதி வரை நீதிமன்ற காவல்

Report Print Deepthi Deepthi in இந்தியா

சர்ச்சைக்குரிய வகையில் பேசியதாக கைது செய்யப்பட்ட சட்டமன்ற உறுப்பினர் கருணாஸ்க்கு அக்டோபர் 5-ஆம் தேதி வரை நீதிமன்ற காவல் அளிக்கப்பட்டுள்ளது.

சென்னை வள்ளுவர் கோட்டம் அருகே நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் முதல்வர், பொலிசாரை மிரட்டும் விதமாக பேசியதாக எழுந்த புகாரின் அடிப்படையில் அவர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது.

ஆர்ப்பாட்டத்தின் போது, என் ஜாதிக்காரன் மேல் கைவைதால் அவ்வளவுதான். நீங்க எல்லாம் போதை ஏற்றிக்கொண்டுதான் செய்வீங்க. நாங்க தூங்க எழுந்திருச்சதுமே செஞ்சிடுவோம். சட்டைதானே உங்களுக்கு அதிகாரம்.

அந்த சட்டையை கழற்றிவிட்டு நேருக்கு நேர் மோத தயாரா என காவல்துறை துணை ஆணையர் அரவிந்தனுக்கு சவால் விடுத்திருந்தார். மேலும், முதல்வரே நான் அடிப்பேன்னு பயப்படுகிறார். வேண்டுமென்றால் அவரிடமே கேட்டு பாருங்கள் என்று பேசினார்.

கருணாஸின் இந்த பேச்சு சர்ச்சையை ஏற்படுத்திய நிலையில், எங்கள் மீது தேவையற்ற வழக்குகள் பதிந்ததால் ஆவேசத்தில் அப்படி பேசிவிட்டேன். நான் எந்த சமுதாயத்தையும் புண்படுத்தும் நோக்கிலும் காயப்படுத்தும் வகையிலும் பேசியிருந்தால் வருந்துகிறேன். நான் எந்த சமுதாயத்திற்கும் எதிரானவன் அல்ல என்று கருணாஸ் வருத்தம் தெரிவித்திருந்தார்.

அமைதியை சீர்குலைப்பது, இரு பிரிவினரிடையே கலவரத்தை தூண்டுதல், அரசு அதிகாரியை மிரட்டுவது, கொலை மிரட்டல் உள்ளிட 6 பிரிவுகளில் கருணாஸ் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ள நிலையில் அவரது வீட்டிற்கே சென்று கருணாஸை பொலிசார் கைது செய்துள்ளனர்.

பொதுக்கூட்டத்தில் பேசியதற்காக 307-வது பிரிவின் கீழ் (கொலை முயற்சி) கைது செய்ய வேண்டியதன் அவசியம் என்ன? என்னை கைது செய்ய சபாநாயகரிடம் அனுமதி பெற வேண்டும். அனுமதி பெற்றார்களா என தெரியவில்லை எனக் கூறினார்.

கைது செய்யப்பட்ட கருணாஸை நுங்கம்பாக்கம் காவல்நிலையத்திற்கு அழைத்துச்சென்ற காவல்துறையினர் சுமார் 3 மணிநேரத்திற்கு மேல் விசாரித்தனர்.

இதையடுத்து ராயப்பேட்டை மருத்துவமனைக்கு அழைத்துச்சென்று மருத்துவ பரிசோதனை நடைபெற்றது.

பின்னர் எழும்பூர் நீதிமன்ற நீதிபதி வீட்டில் கருணாஸ் ஆஜர்படுத்தப்பட்டார். இதனையடுத்து கருணாஸை அக்டோபர் 5-ஆம் தேதி வரை நீதிமன்ற காவலில் வைக்க நீதிபதி உத்தரவிட்டார்.

மேலும் கருணாஸ் மீதான வழக்கில் கொலை முயற்சி பிரிவை ரத்து செய்தும் எழும்பூர் நீதிமன்ற நீதிபதி கோபிநாத் உத்தரவிட்டார்.

மேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்