உச்சநீதிமன்றம் வெளியிட்ட பரபரப்பான தீர்ப்பு: தமிழக பெண்கள் இனிப்பு வழங்கி கொண்டாட்டம்

Report Print Vijay Amburore in இந்தியா

சபரிமலை ஐயப்பன் கோவிலுக்கு அனைத்து வயது பெண்களும் செல்லலாம் என வரலாற்று சிறப்பு மிக்க தீர்ப்பினை உச்சநீதிமன்றம் வழங்கியதை தொடர்ந்து, தமிழக பெண்கள் தீர்ப்பினை வரவேற்கும் விதமாக இனிப்பு வழங்கி கொண்டாடி வருகின்றனர்.

சபரி மலை ஐயப்பன் கோவிலில் 10 வயதிற்குட்பட்ட சிறுமிகளும், 50 வயதிற்கு மேற்பட்ட பெண்கள் மட்டுமே இத்தனை ஆண்டுகாலமாக அனுமதிக்கப்பட்டு வந்தனர். இதனை எதிர்த்து கடந்த 30 ஆண்டுகளுக்கு முன்னதாக வழக்கு தொடரப்பட்டது.

அதில், 10 முதல் 50 வயதிற்குட்பட்ட பெண்களையும் கோவிலுக்குள் அனுமதிக்க வேண்டும் என குறிப்பிடப்பட்டிருந்தது.

இந்த நிலையில், வழக்கின் இறுதி தீர்ப்பினை உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி தீபக் மிஸ்ரா தலைமையிலான அமர்வு வாசித்தது. அதில், பெண்களுக்கு நீண்ட காலமாகவே பாகுபாடு காட்டப்படுகிறது. பெண்கள் ஆண்களை விட குறைந்தவர்கள் இல்லை. பெண்கள் ஆண்களுக்கு சமமானவர்கள். ஒரு புறம், பெண்கள் தெய்வங்களாக வணங்கப்படுகிறார்கள், ஆனால் மறுபுறம் கட்டுப்பாடுகள் உள்ளன. கடவுள் உறவு உயிரியல் அல்லது உடலியல் காரணிகள் மூலம் வரையறுக்க முடியாது. சபரிமலை வழிபாட்டில் அனைத்து வயது பெண்களையும் அனுமதிக்க வேண்டும்,” என அந்தத் தீர்ப்பில் வாசிக்கப்பட்டது.

இதனை தொடர்ந்து தற்போது கேரளா அரசும் அதற்கான நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. இந்த நிலையில் உச்சநீதிமன்ற தீர்ப்பை வரவேற்று சேலம் மாவட்ட பெண்கள் பொதுமக்களுக்கு இனிப்புகளை வழங்கி தங்களுடைய மகிழ்ச்சியினை வெளிப்படுத்தி வருகின்றனர்.

இதுகுறித்து பெண் ஒருவர் கூறுகையில், எனக்கு சிறு வயதிலிருந்தே ஐயப்பன் கோவிலுக்கு சென்று வழிபட வேண்டும் என்ற ஆசை இருந்து வந்தது. தற்போது உச்சநீதிமன்றம் வழங்கியிருக்கும் தீர்ப்பால் மிகவும் மகிழ்ச்சியடைந்துளேன். இனிமேல் குடும்பத்துடன் சென்று ஐயப்பனை தரிசனம் செய்வோம் என அவர் தெரிவித்துள்ளார்.

மேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்